ஸ்மாஷன் தாரா: உன்மத்தத்தின் அழகியல்: அராத்து

சாரு நிவேதிதாவின் கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு அராத்து அளித்துள்ள முன்னுரை கீழே:

காற்றே வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

காற்றே, வா.

எமது உயிர் – நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

இந்தக் கவிதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இதை யார் எழுதி இருக்கக் கூடும் என்று யோசித்துக்கொண்டே தொடர்ந்து படியுங்கள். கடைசியில் இதைப்பற்றிப் பேசலாம்.            ̀

சாரு நிவேதிதாவின் உரைநடை தனித்துவமான மொழிநடைக்கும், சரளமான தன்மைக்கும் பெயர்பெற்றது. வாசிக்க மிக எளிதாக இருக்கும் என்பது இதுவரை யாராலும் மறுக்கப்பட்டதில்லை. உலகிலேயே எளிமையாக இருப்பதும், எளிமையாக எதையாவது செய்வதும்தான் மிகக் கடினமானது. சாரு நிவேதிதாவின் கட்டுரையையோ, நாவலையோ வாசிக்கும் ஒருவன் கதை எழுதுவது இவ்வளவு சுலபமான ஒன்றா என்று இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி அடுத்த நொடி எழுத ஆரம்பித்து விடுவான். இந்த விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்பவர்கள் குறைவுதான்.

சாரு நிவேதிதாவின் உரைநடை போலவே இப்போது எளிமையாக கவிதைகள் எழுதும் ”எளிமைக் கவிஞர்கள்”  தமிழ் இலக்கிய உலகில் பெருகிவிட்டார்கள். எந்த அளவுக்கு எளிமையாக எழுதுகிறார்கள் என்றால் – “அம்மாதான் கடைசியாக சாப்பிடுவாள். அவள் சாப்பிடும் போது குண்டானில் சாதம் காய்ந்து மீண்டும் அரிசியாகிப் போனது. “இந்தக் கவிதை (!) ஒரு விளையாட்டு உதாரணத்திற்காக நான் எழுதியது. அதனால் கொஞ்சமேனும் சினிமாப் பாடல் தரம் வந்திருக்கலாம். ஆனால் இப்போதைய எளிமையான கவிதைகளில் ஒன்றுமே இல்லை.

தமிழில் சமகாலத்திய கவிதைகளை “தமிழிலக்கிய குத்துப்பாட்டு “ என்ற வகைமையில் சேர்க்கலாம். சினிமாவில் எப்படி வணிக நோக்கத்திற்காகக் குத்துப்பாட்டு அறிமுகப்படுத்தப்பட்டதோ அது போல நவீன தமிழிலக்கியத்தில் இந்த “குத்துக் கவிதைகளின்”  ஆதிக்கம் பெருத்துக்கிடக்கிறது. உலக அளவிலும் கவிதைக்கான களம் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. போலி நுட்பங்களாலும், உடனடி உணர்ச்சிப்பெருக்காலும், அரைகுறை முற்போக்குக் கருத்துக்களாலும் கவிதைகள் புனையப்பட்டு பிரபலமாகின்றன. குறைந்த ஆயுளில் வாழ்பவையாகக் கவிதைகளை மாற்றி விட்டனர்.

கவிதை என்பது ஒரு நுட்பம் சார்ந்தது அல்ல. அது மொழி சார்ந்தது கூட அல்ல. ஒரு நல்ல கவிதைக்கு மொழி வளம் என்பது கூட இரண்டாம் பட்சம்தான். கவிதை என்பது உன்மத்த நிலையில் வெளிப்படுவது. எழுதப்படுவது என்ற வார்த்தையைத் தவிர்த்து வெளிப்படுவது என்று நான் எழுதியிருப்பதை கவனியுங்கள். யாராலும் கவிதையை எழுத முடியாது. எழுதப்படுபவைகள் கவிதைகளே அல்ல. அன்றாட அலுப்பு சலிப்பு வாழ்வில் இருந்து விலகி, மனிதன் என்பதைக் கூட மறந்து எப்போதேனும் ஓரிரு கணங்கள் சஞ்சரிக்கும் நேரத்தில் தெறிக்கும் தெறிப்பு சில நேரங்களில் கவிதை ஆகலாம். அந்த தெறிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒருவருடைய மொழிநடை உதவலாம்.

கலை என்றால் அதில் முதலிடம் கவிதைக்குத்தான் கொடுக்க வேண்டும். எல்லைகளற்ற படைப்பூக்கத்துக்குக் கவிதையில் மட்டுமே இடம் உண்டு. இந்த எல்லைகளற்ற படைப்பூக்கத்தையும், உன்மத்த நிலையில் உருவான சில கவிதை வரிகளையும் தரிசிக்க வேண்டும் என்றால் சாரு நிவேதிதாவின் “ஸ்மாஷன் தாரா”  கவிதைத் தொகுப்பில் அது சாத்தியமாகிறது. இந்த உன்மத்த அனுபவத்தின் தீண்டல்களை உணர்வதற்கு நீங்களும் கொஞ்சமாவது மனதளவில் தயாராக வேண்டும். அதற்குப் பெரிதாக மெனக்கெட வேண்டாம். இதுவரை கற்றதிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் விடுபட்டால் போதுமனது.

எனக்கு இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது என்னவென்றால், சாரு நிவேதிதாவின் எழுத்துப் பாணி எங்குமே தென்படவில்லை. 45 வருடங்களாகத் தொடர்ந்து எழுதி வரும் ஒருவர் தன் உயிர் மூச்சு போன்ற எழுத்தை முற்றிலும் உதறிவிட்டு, புத்தம் புதிதான சொற்களோடும், இதுவரை தீண்ட மறந்த கணங்களோடும் வாசகரை சந்திப்பது என்பது மிகவும் அபூர்வமானது.

ஒரு நாவலாசிரியர் கவிதை எழுதினால் அவர் உரைநடையை மடக்கிப் போட்டது போல இருக்கும். ஒரு கவிஞர் உரை நடை எழுதினால் அவர் கவிதையை விரித்துப்போட்டது போலத்தான் இருக்கும். இப்போது கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே உரைநடையாளர்கள்தான் என்று வையுங்கள். என்ன கவித்துவமான உரைநடை என்று சொல்லிக்கொள்ளலாம். அவர்களால் தங்கள் எழுத்தின் சாயலை உதறிக்கொள்ள முடியாது. ஆனால் சாரு நிவேதிதா தன் எழுத்துச் சாயலை முற்றிலும் உதறி விட்டு கவிதையை அந்தந்தக் கவிதைக் கணங்களில் வாழ்ந்து, உணர்ந்து, அந்தக் கவிதைக்கான பிரத்யேக மொழியில் கைமாற்றி கொடுத்து இருக்கிறார்.

சாரு நிவேதிதா டிரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளர் மற்றும் ஆட்டோ ஃபிக்‌ஷன் எழுத்தாளர் என்று பரவலாக அறியப்படுபவர். இந்தக் கவிதைத் தொகுப்பை படித்த போது எனக்கு இது ஒரு ’ஆட்டோ ஃபிக்ஷன் கவிதைகள்’ என்று தோன்றியது. இப்படி ஒரு வகைமை கவிதைகளில் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை அப்படி இல்லாமல் இருந்து இருந்தால் இந்தப் பெருமையும் எதிர்காலத்தில் சாருவுக்குக் கிடைக்கும். இதில் ஒரு ஆபத்து உள்ளது. தன் வாழ்வின் அன்றாட புலம்பல்களையும், சோகங்களையும், பாலியல் சார்ந்த தோல்விகளையும் மடக்கு வரிகளாக மடக்கி மடக்கி நீட்டிக்கொண்டு செல்பவர்களும் ஆட்டோ ஃபிக்‌ஷன் கவிதை என சொல்லிக்கொள்ளக்கூடிய ஆபத்துதான் அது. ஆனால் சாருவின் இந்தக் கவிதைகளை நீங்கள் படிக்கும் போது இந்த சல்லிப் புலம்பல் கவிதைகளுக்கும் சாருவின் உன்மத்தக் கவிதைகளுக்கும் பெருமளவு வித்தியாசத்தை சுலபமாக உணர முடியும்.

நவீன கவிதைதான் என்றாலும் அதில் ஒரு மரபு சார்ந்த தொடர்ச்சி இருக்கிறது. ”சங்க இலக்கியத்தின் தொடர்ச்சி இந்தக் கவிதைகளில் இருக்கிறது”என்பது போன்ற புகழுரைகளை கவிதை வெளியீட்டு விழாக்களில் கேட்டிருக்க முடியும். சாரு நிவேதிதாவின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருபவன் மற்றும் அவரை கவனித்து வருபவன் என்ற முறையில், சாரு நிவேதிதாவிற்கு ஆதிகால வேத வாக்கியங்கள் மீது ஒரு ஈர்ப்பும் பிரேமையும் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர் அதை எடுத்துக்காட்டி எழுதியிருப்பதை வாசித்திருப்பீர்கள். இந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளை நான் அந்த வேத வாக்கியங்களின் தொடர்ச்சியாக அல்லது அவற்றின் ஆழமான பாதிப்பில் உருவான கவிதைகளாகப் பார்க்கிறேன். இதிலும் ஒரு விலக்கத்தைச் சொல்லியாக வேண்டியுள்ளது. வேத வாக்கியங்கள் என்றால், விதிகள், சமூக, அரசியல் வாக்கியங்கள் அல்லது பக்தி சார்ந்தவை அல்ல. வேதத்தில் இருக்கும் கவித்துவத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறார் சாரு நிவேதிதா.

சாரு நிவேதிதாவுக்கு இயல்பிலேயே ஆதி அந்தமான அழகியல் வெளிப்பாடுகள் மீதும், அவை உண்டாக்கும் கவித்துவமான அதிர்வுகள் மீதும் ஒரு ஒத்திசைவு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் காலமற்ற, எப்போதும் சாஸ்வதமான உணர்வுகளைப் பற்றிப் பேசுகின்றன. உலகம் தோன்றி மனித குலம் உண்டான காலத்தில் என்னென்ன உணர்வுகளும் உணர்ச்சிகளும் அடிப்படையாக இருந்திருக்குமோ, அவைகளில் எவை இப்போதைய அதி நவீன காலத்திலும் கடுகளவும் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவோ அவைகள்தான் இந்தத் கவிதைத் தொகுப்பில் கவிதைகள் ஆகின்றன. இந்தக் கவிதைகளைப் படிக்கையில் சாரு நிவேதிதா ஒரே நேரத்தில் புராண காலத்தில் ஒரு காலையும் இந்த நவீன வாழ்வின் காலகட்டத்தில் இன்னொரு காலையும் வைத்துக்கொண்டு காலமற்ற பெருவெளியில் சஞ்சரித்துக்கொண்டு இந்தக் கவிதைகளை எழுதியிருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் மிகவும் அபூர்வமான விஷயம் இந்தக் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கும் மொழி. பழங்கால மொழியும் அல்ல. நவீன கால மொழியும் அல்ல. காலச் சுமையை உதறிவிட்டு நிர்வாணமகத் தன்னைக் காண்பித்துக்கொண்டு காட்சி தரும் தமிழ் மொழி. இந்தக் கவிதை மொழியை வைத்துக்கொண்டு, இது எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என எந்த மொழி ஆராய்ச்சியாளராலும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு சில கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

சமகாலப் பிரச்சினைகள் நவீன கவிதைகளில் வர வேண்டும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில கவிதைகள் சமகால பிரச்சினைகளைப் பேசுகின்றன என சிலாகிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமகாலப் பிரச்சினை என்பது என்ன ? ஒரு கவிதையில் ஆண்ட்ராய்ட் தொலைபேசியும், அலெக்ஸாவும்   “குறி முறுக்குப் பசையும்” இடம் பெற்று விட்டால் அது சமகாலப் பிரச்சினையைப் பேசும் கவிதை ஆகி விடுமா? என்ன அப்படிப் பெரிதாக சமகாலப் பிரச்சினைகள் வித்தியாசமாக முளைத்து விட்டன? அதே காதல்தான், அதே அன்புதான், அதே பிரிவுதான், அதே துயரம்தான். இவைகளை சமகால மனம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் சமகாலக் கவிதையே அன்றி, ஸ்விக்கி , ஜொமாட்டோ போன்ற சேவைகள் கவிதையில் இடம்பெறுவதோ, வாட்ஸப் சாட் அல்லது முத்த ஸ்மைலி இடம்பெறுவதோ அல்ல. ”20 சாப்பாடுன்னு சொல்லிட்டா, வேலை செய்யிற காட்டுக்கு கொண்டாந்து சப்ளை செஞ்சிடுவாங்க” என்று ஒரு தாத்தா சமீபத்தில் சொல்லிக்கொண்டு இருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. சந்தையில் வியாபாரம் முடித்து மாட்டு வண்டியில் ஏறிப் படுத்தால் வீடு வந்து சேர்ந்து விடும் மாடுகள். நாளை டெஸ்லா கார் பற்றி – “தானியங்கிக் காரில் படுத்திருக்கிறேன். சேருமிடம் என எதைக் கொடுத்தேன் என மறந்து விட்டேன். தவறான இடத்துக்குக் கொண்டு சென்று விட்டாலும், சரியான இடம் என்றே நினைத்துக்கொள்வேன்.“ இப்படி ஏதேனும் உளறி அதில் டெஸ்லா என்ற வார்த்தையைச் சேர்த்து விட்டால் அதுதான் சமகாலக் கவிதை என கொண்டாடப்பட்டு வருகிறது.

மாறாக சாரு நிவேதிதா சமகாலத்தை இதைப் போன்ற rhetorics, jargons ஆகிய பம்மாத்துகளை உபயோகிக்காமல் எப்படி கவிதையில் கொண்டு வருகிறார் பாருங்கள்.

நான் உன்னைத்தான்

தேடி

வந்து கொண்டிருக்கிறேன்

இருந்த இடத்தில்

இருந்தபடியே…

அதுவும் மிக எளிமையான அழகிய தமிழில். வேறொரு கவிதையில் இப்படி எழுதிச் செல்கிறார்…

………

குதிரை விமானமாயிற்று

ஆனாலும்

காதலில் தோல்வியுற்ற

மனிதன்

இன்னமும்

மதுவைத்தான் நாடி

ஓடிக் கொண்டிருக்கிறான்

கணவனின் துரோகம்

தாங்க முடியாத பெண்

இன்னமும்

அரளி விதையைத்தான்

அரைத்துக் கொண்டிருக்கிறாள்

இன்னமும் ஒரு குழந்தை

தாயைத் தேடி

அழுது கொண்டிருக்கிறது

………..

எதுவும் இங்கே மாறவில்லை. மொழியும் அதைக் கையாளும் முறையும் மட்டுமே மாறியிருக்கிறது என்ற பார்வையில் கூட இந்தக் கவிதையில் படிக்கலாம். இதைப் படிப்பவர்களின் மனச்சித்திரங்களும் இப்போது மாறியிருக்கும். மிகவும் எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதை பலவிதமான வாசிப்பு சாத்தியக்கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் பிரிவுத்துயரின் போது எழுதப்படும் வரிகள் மலை போல குவிந்து கிடக்கும். பெரும்பாலும் இயற்கையை ஒப்பிட்டுச் சொல்லி தலைவி தவிப்பில் புலம்புவது போல பாடல்கள் இருக்கும். பின்வரும் கவிதையில் தலைவிக்கு பதில் தலைவன் இடம்பிடிக்கிறான். நிலவு சுடுகிறது, குயிலின் கானம் கசக்கிறது போன்ற சங்க காலப் படிமங்கள் ஒரு படி தரமுயர்ந்து இசை, இலக்கியம் என மாற்றம் கொள்கின்றன. நாகரீகமடைந்த சமுதாயத்தில் இருக்கும் ரசனை மேம்பட்ட ஒருவனின் காதல் தோல்வி அல்லது காதலியின் பிரிவு வேறெந்தக் கவிதையிலாவது பாடுபொருளாக இருந்திருக்கிறதா என்பது சந்தேகம்.

இசை ரசிக்கவில்லை

இலக்கியம் கசக்கிறது

சினிமா வெறும் நிழல்களின்

சலனம்

போனதுதான் போனாய்

இதையெல்லாமா

எடுத்துக்கொண்டு

போவாய்

ஒருத்தி பிரிந்து போகும்போது அவள் மட்டும் போவதில்லை. வாழ்வில் இருந்து எல்லாவற்றையும் வழித்து எடுத்துக்கொண்டு போகிறாள் என்பதுதான் ஆடவனின் சமகாலக் காதல் தோல்வி அல்லது பிரிவின் பிரச்சினைகள். இது வாசிப்பதற்கு எளிமையாக இருப்பது போலத் தோன்றினாலும் நவீன வாழ்வின் உளவியல் சிக்கலை சிக்கல் இல்லாமல் சொல்லும் ரத்தினச் சுருக்கக் கவிதை. ஒரு பெண் பிரிந்து சென்றதும் அந்த ஆண் தன் தொடர்பை உற்றார் உறவினர், நண்பர்கள் என மொத்த உலகத்திடம் இருந்தும் துண்டித்துக்கொண்டு தனிமையில் சுருங்கி விடுகிறான் என்பதைப் பார்க்கிறோம். இதை மனதில் வைத்து இந்தக் கவிதையை வாசித்தால் நிறைய திறப்புகள் கிடைக்கும். கவிதை இன்னும் விரிவடையும். ரசனை மேம்படுவதைத் தாண்டி ஒரு காதல் தோல்வியை, பிரிவைக் கையாள்வது எப்படி என்ற சூட்சுமம் கூடப் பிடிபடலாம்.

சாரு நிவேதிதா தன் நாவலில் சிறுகதைகளில், ஏன் கட்டுரைகளில் கூட ஃபிரெஞ்சுத் தத்துவவாதிகள், அறிவுஜீவிகள் மற்றும் புனைவெழுத்தாளர்களின் தாக்கம் கொண்டவர். ஃபிரெஞ்சு மட்டுமன்றி லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபி எழுத்தாளர்களின் தாக்கமும் கொண்டவர். அவர் தன்னை ஒரு ஐரோப்பியன் என உணர்வதாகவே பலமுறை சொல்லியும் இருப்பவர். அவருடைய நாவல், சிறுகதைகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும், அதில் வெளிப்படும்  ஃபிரெஞ்சு மற்றும் மேற்கத்திய சிந்தனா போக்கு. சிந்தனைத் தாக்கம்தான் இருக்குமே அன்றி  மொழிநடையிலும் விவரிப்பிலும் கதை சொல்லல் முறையிலும் தனித்துவமான பாணியை உருவாக்கிக்கொண்டிருப்பார். சாரு நிவேதிதா இன்னதென அறுதியிட்டுக்கூற முடியாத அளவுக்கு உலகம் கண்டுகொள்ளாத சிறியதொரு நாட்டு இலக்கியத்தைக் கூட படித்திருப்பார். (சமீபத்தில் வெஸ்டர்ன் சஹாரா, மௌரிடானியா ஆகிய இரண்டு நாடுகளின் இலக்கியத்தைப் பற்றி அ-காலம் தொகுப்பில் எழுதியிருந்தார்!) அவருடைய கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்குத் தெரியும், பாப்லோ நெரூதா, நிக்கானோர் பார்ரா, ஒக்தாவியோ பாஸ் என பல உலகப் புகழ் பெற்ற கவிஞர்களைப் படித்தும் பேசியும் வருபவர் என்று. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் ஒரு நீண்ட கவிதையை ஒரு விழா மேடையில் முழுதும் வாசித்தவர். முன்னுரை எழுதுவதற்காக இவர்களைக் கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். ஆச்சர்யப்படும்படியாக, சாரு நிவேதிதாவின் இந்தக் கவிதைத் தொகுப்பில் இவர்கள் ஒருவரின் பாதிப்பும் இல்லை. உரைநடையில் ஐரோப்பிய சிந்தனாபோக்கை எடுத்துக்கொள்ளும் சாரு, கவிதையில் முழுக்க முழுக்க இந்திய ஆதி கால கவிதைகளின் சிந்தனை மற்றும் கவித்துவப் பாணியை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. உலகின் ஆதி கவிதை இங்கேதான் தோன்றியது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்தக் கவிதைத் தொகுப்பில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் – தற்போதைய மாசுபட்டிருக்கும் தமிழ்க் கவிதைச் சூழல் சாரு நிவேதிதாவை அணுவளவும் பாதிக்கவில்லை. மழையா பெய்கிறது எனக் கேட்ட சாரு, அதே போல தற்காலத் தமிழ்ச்சூழல் கவிதை உலகத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத வேறொரு உலகில் அமர்ந்து கொண்டு எழுதிய கவிதைகள் என இவைகளைக் கொள்ளலாம்.

கவிதைக்கு மட்டும் எல்லையே கிடையாது என்று சொன்னேன் அல்லவா ?

“இன்று

அவள் காதுகளில்

ஏதோவொரு ஆபரணம்

அடுத்த பிறவியிலாவது

மனித ஜென்மமெடுக்க

வேண்டும்”என முடியும், வேட்டை மிருகம் நினைப்பது போன்ற ஒரு கவிதை நல்ல உதாரணம்.

சாரு நிவேதிதாவின் ’சிக்னேச்சர்’கவிதை என்றால்

“ ஆனாலும்

இந்த உலகில்

வாழ எனக்கு

உரிமையில்லையா?” என முடியும் பாவியின் உயில் கவிதையைச் சொல்லலாம். இந்தக் கவிதை கவிதை வரலாறு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எங்கும் எழுதப்பட்டிருக்காது என்பது என் முடிவு.

முன்னுரையின் ஆரம்பத்தில் ஒரு கவிதையைப் பகிர்ந்திருந்தேன். யார் எழுதியிருப்பார்கள் என யோசித்து வைத்துள்ளீர்களா? மகாகவி பாரதியின் கவிதைதான் அது. வாசிப்பதற்கு பாரதியின் பிரபலமான கவிதைகள் போல இருக்காது. வீழ்வேன் என நினைத்தாயோ என்பது போன்ற சவடால்கள், எதுகை மோனை, மந்திரம் போல் ஒலிக்கும் தமிழ் வார்த்தைகள் என எதுவும் இந்தக் கவிதையில் இருக்காது. இந்தக் கவிதையை வாசிப்பவர்கள் பெரும்பாலானோரால் இதை எழுதியவர் பாரதி எனக் கண்டுபிடிக்க முடியாது. என் மகள் இமயாவின் பாடப்புத்தகத்தில் இந்த கவிதை உள்ளது. சாரு நிவேதிதாவின் கவிதைத் தொகுதிக்கு எப்படி முன்னுரையை ஆரம்பிக்கலாம் என யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்த போது இமயா இந்தக் கவிதையைக் காட்டி சந்தேகம் கேட்டாள். பாரதியாரே இமயா மூலம் கொடுத்தனுப்பியிருப்பதாக நினைத்துக்கொண்டு அதை வைத்தே முன்னுரையை எழுத ஆரம்பித்து விட்டேன். ”அதுக்கு என்னா இப்போ?” என்கிறீர்களா? அப்படியானால் இந்தக் கவிதைத் தொகுப்பு உங்களுக்கானது அல்ல!

அராத்து