Sonallah Ibrahim எகிப்தின் மிக முக்கியமான எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கும் இவர் நாஸர் காலத்தில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். செய்த குற்றம், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததுதான். இப்போதும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி விரிவாக அ-காலம் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். அ-காலம் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் கிடைக்கும். இப்ரஹீம் பற்றிய கட்டுரையிலிருந்து:
2003-இல் இப்ரஹீம் எகிப்திய அரசின் உயரிய இலக்கிய விருதான அராபிய நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக கலகக்காரர் என அறியப்பட்ட இப்ரஹீம் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவாறு விழாவில் கலந்து கொண்ட இப்ரஹீம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை ஆற்றினார். அப்போது எகிப்தின் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். அந்த அரசு விழாவில் இப்ரஹீம் பேசினார்:
“நமது தேசத்தில் நல்ல நாடகம் இல்லை, நல்ல சினிமா இல்லை, விஞ்ஞான வளர்ச்சி இல்லை, மக்களுக்குத் தேவையான கல்வி கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக பல அரசு விழாக்கள் நடைபெறுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பொய்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஊழலும் திருட்டும் தலைவிரித்து ஆடுகிறது. இதை யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அடி உதை என்று சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்தப் பேரழிவின் காரணமாக, இந்த விருதை நான் மறுதலிக்கிறேன். இதை எனக்குத் தருவதற்கு இந்த அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை.”