கடந்த ஆறு மாதங்களாக நண்பர் ஸ்ரீராம் மருத்துவமனை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் போனில் பேசி விட்டு நள்ளிரவு வரை நான் இணைய தளத்தில் எழுதியவற்றை சப்ஜெக்ட்வாரியாகத் தொகுத்துக் கொண்டு இருக்கிறார். ஆறு மாதமாக இதேதான் வேலை. தூங்கி எழுந்து மறுநாள் மருத்துவமனை. நண்பர்களைச் சந்திப்பது இல்லை. சினிமா இல்லை. வேறு பொழுதுபோக்கு இல்லை. மாதம் ஒருமுறை மனைவியைப் பார்க்க ஊருக்குப் போய் வருவார். இப்படியாக பத்து புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தப் பத்தையும் இந்தப் புத்தக விழாவுக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். இப்போது அதில் ஒன்றைக் கூட கொண்டு வர வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். காரணம், அ-காலம்.
பிஞ்ஜ் செயலியில் வெளிவந்த அ-காலம் தொடரை பதிப்பகத்துக்குக் கொடுப்பதற்காக நேற்று காலையிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று பன்னிரண்டு மணி நேரத்தில் பன்னிரண்டு கட்டுரைகள் படித்தேன். இன்றும் பன்னிரண்டு மணி நேரத்தில் பன்னிரண்டு கட்டுரைகள் படிப்பேன். இப்படி 24 மணி நேரத்தையெல்லாம் மற்ற புத்தகங்களுக்கும் செலவழித்தால் ஔரங்கசீப் கோவிந்தாதான். ஔரங்கசீப் இதுவரை நான் எழுதியதிலேயே ஒரு உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதைக் கீழே இறக்க நான் விரும்பவில்லை.
எனவே, ஔரங்கசீப்பை முடித்து விட்டுத்தான் மற்ற நூல்கள். தளத்தில் உள்ளதை எடுத்து அப்படியே பதிப்பகத்துக்குக் கொடுக்கும் வேலையை நான் ஒருபோதும் செய்ததில்லை. கடைசி வரை செப்பனிட்டுக் கொண்டே இருப்பதுதான் என் பாணி.
ஆக, அ-காலம் கட்டுரைகள் நூலாக வரும். ஸ்மாஷன் தாரா – கவிதைத் தொகுதி. மயானக் கொள்ளை நாடகம். அது ஒரு சிறிய நூல். ஆக, மூன்று புதிய நூல்கள். ஔரங்கசீப் அநேகமாக ஜனவரியில் முடிவுறும். அதைத் தொடர்ந்து ஸ்ரீராம் தொகுத்துக் கொடுத்த நூல்களைப் படித்து பதிப்பகத்தில் கொடுத்து விட்டு, பிறகுதான் தியாகராஜாவைத் தொடர வேண்டும்.