ஸ்மாஷன் தாரா

2020 அக்டோபர் வாக்கில் – அதாவது சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு என் கவிதைகளைத் தொகுத்து என் சிநேகிதியிடம் கொடுத்தேன்.  Mediocre என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்.  அவர் ஒரு cynic என்று நான் நினைப்பதால் இன்னொரு சிநேகிதியிடம் கொடுத்தேன்.  இவர் அவரை விடக் கடுமையான cynic என்று தெரியும்.  இருந்தாலும் வேறு யாரிடம் கொடுப்பது என்றும் தெரியாததால் கொடுத்தேன்.  இவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார்.  ஆனால் நான் சளைத்து விடவில்லை.  உங்களுக்கு ஒக்தாவியோ பாஸ் பிடிக்குமா என்று கேட்டேன்.  சீச்சீ… அந்த ஆளை எனக்குப் பிடிக்காது, எனக்கு நிக்கானோர் பார்ராவைத்தான் பிடிக்கும் என்றார்.  எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.  ஏனென்றால், தொகுப்பில் பல கவிதைகள் ஒக்தாவியோ பாஸின் பாதிப்பில் எழுதியவை. 

பிறகு பலவாறு யோசித்து என் நண்பனிடம் கொடுத்தேன்.  நண்பன் பொய் சொல்ல மாட்டான்.  இவனும் மீடியாக்கர் என்று சொல்லி விட்டால் தொகுதியைக் கொண்டு வர வேண்டாம் என்று நினைத்தேன்.  நண்பன் உலக இலக்கியத்தின் தீவிர வாசகன்.  கவிதையிலேயே வாழ்பவன்.  ஒருசில நாட்களிலேயே படித்து விட்டு, பிரமாதம் என்றான்.  நிஜமாகவா என்றேன்.  இலக்கிய விவகாரத்தில் நான் எப்போதாவது பொய் சொல்லியிருக்கிறேனா என்றான்.  முன்னுரை தருவாயா?  நிச்சயம்.

அதற்குப் பிறகு அவனுக்கு வேலை வந்து விட்டது போல.  நானும் கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டு விட்டு விட்டேன்.  ஆனாலும் கடைசியாகக் கேட்டேன்.  கவிதைகள் எப்படி?  “ஏன் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள்?  யாரோ உங்களைக் குழப்பியிருக்கிறார்கள்.  அதையெல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள்.”

முன்னுரை வராததால் கிடப்பில் போட்டு விட்டேன்.  ஜூன் மாதம் இன்னொரு கவிஞருக்கு அனுப்பினேன்.  தமிழில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.  அவருக்கும் கொலை வேலை.  இதோ தருகிறேன் என்றே ஆறு மாதமாகச் சொல்கிறார்.  எனக்கு முன்னுரை கூட வேண்டாம், கவிதையை மீடியாக்கர் என்கிறார்களே என்றேன்.  எவன் சொன்னது மடையன் என்று திட்டினார்.  சரி, அது போதும் என்று விட்டு விட்டேன்.

இப்போது மீண்டும் தொகுதியைத் தூசி தட்டி எடுத்தேன்.  அராத்துவிடம் முன்னுரை கேட்டேன்.  அராத்து ஜெயமோகன் வேகத்துக்கு எழுதுபவர்.  ஓப்பன் பண்ணா நாவலை மூன்று நாளில் எழுதினார்.  ஏற்கனவே படித்ததுதான், நாளையே முன்னுரை அனுப்புகிறேன் என்றார். 

ஆக, இந்தப் புத்தக விழாவில் என் கவிதைத் தொகுதி ரெடி.  புத்தகத்தை ஹார்ட் பவுண்டில் கொண்டு வர என்னால் ஆன மட்டும் முயற்சி செய்வேன்.  ஏனென்றால், கவிதை விற்பதே அம்பது காப்பி.  அதை நல்ல விதமாகத்தான் போட்டு விடுவோமே?

அட்டைப் படமெல்லாம் ரெடி.

இரண்டு பெண்களின் விமர்சனத்தால் மனம் நொந்து கிடந்த போது எனக்குப் பக்க பலமாக இருந்து உதவிய என் பிரியத்துக்குரிய இரண்டு கவிஞர்களுக்கும் என் நன்றி…