தமிழ்ப்பிரபா ஃபேஸ்புக்கில் எழுதியது பின்வருவது:
கோட் சூட் தான் உயர்வு என்று ஒப்புக்கொள்வதில் இருக்கிறது நமது வீழ்ச்சி.//
மேலே இருப்பது நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் நேற்று எழுதிய குறிப்பு. Casteless collective மாதிரியான புதிய விஷயங்களை முன்னெடுக்கும் தொடக்கத்திலேயே ‘வீழ்ச்சி’ என்கிற வார்த்தையையெல்லாம் அவர் பயன்படுத்த வேண்டிய அவசரம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.
இந்த பொதுச்சமூகம் எதையெல்லாம் உயர்வாகக் கருதியதோ அதை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்காமல் மறுத்து வந்ததன் எதிர் அரசியல்தான் இந்த கோட்சூட். மற்றபடி கோட் சூட்தான் உயர்வு என்று யாரும் நினைக்கவில்லை. கானா பாடகர்கள் கோட் சூட் அணிந்தது கௌரவத்தின், உயர்வின் அடையாளம் என்பதால் அல்ல. அது ஒரு குறியீடு. இது ஆடைக்கு மட்டும் அல்ல பெயர்களுக்கும் பொருந்தும். பெயர்களுக்குப் பின் சாமி, அம்மாள், அப்பன் என்கிற வார்த்தையை மற்றவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு தலித் அதை பயன்படுத்த அனுமதி இருந்திருக்கவில்லை. முனுசாமி, கருப்புசாமி, மாடசாமி, காளியப்பன், ராக்கம்மாள் என்றிருந்தால் அவர்கள் முனியன், கருப்பன், மாடன், காளி, ராக்கு என்றுதான் அழைக்கப்பட்டார்கள்.\
இன்னும் சொல்லப் போனால் அவர்களை அந்தப் பெயரைச் சொல்லிக் கூட அழைக்கப்படாமல் “டேய் இவம்பையனே , அவம்பையனே” என்கிற மரபுதான் நம் ஊர்களில் இருந்திருக்கிறது / இருக்கிறது. இன்று அந்த இறுக்கம் தளர்ந்து வருகிறது. அதனால்தான் தற்போது கிராமப்புறத்தில் வாழும் தலித்துகள் எது ‘மாடர்னான’ பெயர்கள் என்று அவர்களுக்கு இச்சமூகம் கற்பித்திருக்கிறதோ அதை வைத்து தங்களுக்கான சுதந்திர வேட்கையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளின் பெயர்களை கேட்டுப் பாருங்கள், ஆகாஷ், கைலாஷ், என்கிற ரீதியில்தான் இருக்கும். உதாரணத்திற்கு அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழும் அந்தக் குழந்தைக் கதாபாத்திரத்தின் பெயரைக் கவனியுங்கள். ஒரு படைப்பாளி இதைத் தெரிந்து செய்வான், மக்கள் போகிற போக்கில் செய்கிறார்கள். ஆனால், இது ஒரு எதிர்வினை. ஆடை அரசியலும் அதனை ஒற்றியதுதான். சொந்தப் பணத்தில் துண்டு வாங்கினாலும் அதை தோளில் போடுவதற்கு அனுமதியில்லை. சுபநிகழ்ச்சிகளில் வெற்றுடம்போடு வெளியே நிற்க வைக்கப்பட்டவனின் வாரிசுகள்தான் இன்றைய தலைமுறை தலித்துகள். இந்த சமூகம் எந்த வகை ஆடைகளை உயர்வாகக் கருதியதோ அதை அணிந்து அவர்களுக்கு முன் நிற்பது ‘உனக்கு நான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை’ என்கிற அறைகூவல்தான். “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காந்தி சட்டைய அவுத்ததுக்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கு” என்று கபாலியில் ஒரு வசனம் வரும். அதே அரசியல் தான் இந்த கானா இசைக் கலைஞர்களின் பின்னணியிலும் இருக்கிறது. இதொரு எளிமையான சமத்துவக் கணக்கு. அருணுக்கு ஏன் இது ஒரு வீழ்ச்சியாக தோன்றுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறது.
ஏன் அருணுடைய ஒருவரியை இவ்வளவுப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்றால் சினிமா மீது ஆர்வமுள்ள நிறைய பேருக்கு அவரொரு கலங்கரை விளக்கமாக தன்னை முன்னிறுத்துபவர். அவர் செதுக்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளும் ஏதோவொரு வகையில் அவருடைய இந்த அரசியல் பார்வைக்கு உட்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சொல்கிறேன். மாற்று சினிமாக்களின் மீது அவர் காட்டும் அக்கறை மாற்று சிந்தனையிலிருந்து தொடங்க வேண்டுமென விரும்புகிறேன்.