என் எழுத்தை வாசித்தவர்களுக்கும், என்னை நேரில் அறிந்தவர்களுக்கும் தெரியும், எனக்குத் துளிக்கூட இனம், மொழி, தேசம், மதம், உறவு என்று எதன் மீதும் புனிதமான அல்லது உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை என்பது. பெரும் புனிதங்களாகக் கருதப்படும் இவற்றின் மீதே பிணைப்பு இல்லை என்கிற போது பிறந்த மண் மீது என்ன பிணைப்பு இருக்க முடியும்? ஆனால் அதற்காக ஒவ்வொரு இருப்புக்கும் உரிய சிறப்புத் தன்மைகளை மறுத்து விட முடியுமா என்ன? வட கேரளத்தின் பசுமையையும், மழையையும், அழகையும் போல ஒவ்வொரு இடத்துக்குமான விசேஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பஞ்சாப் மண்ணின் செழுமை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாதது. அந்த பூமி அப்படி விளையும். ஐந்து நதிகள் பாயும் மண். அப்படி தஞ்சை மண்ணில் விளைவது இசை. அந்தக் காற்றிலேயே இருக்கிறது இசை. அங்கே பிறந்து அந்தக் காற்றை சுவாசித்து அந்தத் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்களின் உணர்வில், குருதியில், ஆன்மாவில் ஊடாடியிருக்கிறது இசை.
அப்படிப்பட்ட பெண்தான் அருண்மொழி நங்கை என்று அவரது எழுத்துகளிலிருந்து நான் அறிகிறேன். இதில் நான் மிகவும் சந்தோஷம் அடையும் விஷயம் என்னவென்றால், அவர் முறையாக சங்கீதம் கற்றவர் அல்ல என்பது. சங்கீத ரசிகை, அவ்வளவுதான். அதுதான் அவரது சங்கீதக் கட்டுரைகளுக்கு அதிக சுவையைத் தருகிறது என நினைக்கிறேன். அடுத்த விசேஷம், அவரது அடிப்படையான துறை, இலக்கியம். தேர்ந்த படிப்பாளியாகவும், எழுத்துக்காரராகவும் அவர் கட்டுரைகளில் தெரிகின்ற அருண்மொழி நங்கை சங்கீதம் பற்றி எழுதும் போது இலக்கியம், சங்கீதம் என்ற இரு மேன்மையான கலைகளின் சங்கமம் நிகழ்வதைக் காண்கிறோம்.
இலக்கியவாதிகள் சங்கீதத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதில் எனக்குப் பெரும் மனக்குறை உண்டு. யாருக்குமே சங்கீதம் பற்றித் தெரியவில்லை. அவர்களின் சங்கீத ரசனை இளையராஜாவோடு முடிந்து விடுகிறது. சாஸ்த்ரீய சங்கீதம் என்றால், அதிக பட்சம் டி.எம். கிருஷ்ணா, அதையும் தாண்டிப் போனால் சஞ்சய் சுப்ரமணியன். அதோடு சரி.
விதிவிலக்காக எனக்குத் தெரிவது கவிஞர் சுகுமாரனும், யுவன் சந்திரசேகரும். ஆனால் அவர்களும் கூட சங்கீதம் பற்றி எழுதுவதில்லை என்றே நினைக்கிறேன். சுகுமாரன் குங்குமத்தில் இருந்தபோது அவர் எழுதிய சங்கீதக் கட்டுரைகளுக்காகவே அதை வாங்குவேன். யுவன் சங்கீதத்தைப் புனைவில் இணைக்கிறார். நானோ நேரடியாக வாசிக்க ஆசைப்படுபவன். இப்போது லலிதா ராம் எழுதுவது போல. அருண்மொழி நங்கை எழுதுவது போல.
சங்கீதம் கேட்பதைப் போலவே சங்கீதத்தைப் பற்றிக் கேட்பதும் இனிமையான விஷயம்தான். பிஸ்மில்லா கானின் நேர்காணல்களைப் படித்தால் நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறே சங்கீதத்தின் இந்தப் புதிய ரசிகையும் தனது சங்கீதக் கட்டுரைகளால் நம் மனதைப் பெரிய அளவில் ஈர்க்கிறார்.