சொற்கடிகை – 2

2.

பொதுவாக நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை என் வாசகர்கள் கவனித்திருக்கலாம்.  அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணத்தைத் தவிர வேறு எந்த செய்தியும் செவிகளில் விழவில்லை.  எல்லோருக்கும் இந்த அனுபவம்தான்.  என் நண்பர்கள் யாரும் எந்த மரண செய்தியையும் எனக்கு அனுப்புவது இல்லை.  

இரங்கல் கட்டுரைகள் எழுதாதற்கு ஒரே காரணம், அன்னாரைப் பற்றி நான் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பேன்.  ஆனால் சமூகமோ அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.  எப்படி எழுதுவது?  ஒரு நடிகர் இறந்தார்.  தமிழ்நாடே அழுதது.  ஆனால், அவர் தன் படங்களில் இந்து மதத்தைக் கிண்டல் செய்வது கண்டு ஒரு முறை எதிர்ப்பு எழுந்த போது, தான் சார்ந்த சாதியைச் சொல்லி, ”என் பின்னால் அத்தனை கோடி ——————பேர் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சவால் விட்டார்.  கோடு போட்ட இடத்தில் அவர் சாதியைச் சொன்னார்.  அருவருப்பாக இருந்தது.  இதைத்தான் இரங்கல் கட்டுரையில் நான் எழுத வேண்டியிருக்கும்.  அதனால் எழுதவில்லை. 

இல்லாவிட்டால் வேறொரு மாதிரி நடக்கும்.  எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.  சமூக நீதிக்காகப் பாடுபடுபவர். நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றுக்குக் குறியீடாக மதிக்கப்படுபவர். எனக்குமே அவரைப் பிடிக்கும்.  ஒரு விழாவின் போது அவரை நெருங்கி வணக்கம் சொல்லி கையை நீட்டினேன்.  கையைப் பட்டென்று தட்டி விட்டு விட்டு வேறொரு பக்கம் சென்று விட்டார்.  இத்தனைக்கும் நான் அவர் பற்றி ஒரு வார்த்தை எழுதியதில்லை.  அவர் மீது நல்லெண்ணம் கொண்டவன்தான் நான்.  இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சீனிக்கு அவரது வாழ்நாள் அதிர்ச்சி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சம்பவத்திலிருந்து நானாகச் சென்று யாருக்கும் வணக்கம் சொல்லும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன். 

நான் இதுவரை நூற்றுக்கணக்கான நாய்களிடம் சென்று அவற்றின் மொழியில் உரையாடியிருக்கிறேன்.  அத்தனை நாய்களும் என்னோடு வாலைக் குழைத்துக் கொண்டு உறவாடும்.  எல்லாமே அதுவரை நான் கண்டு பழகியிராத நாய்கள்.  மனிதர்கள்தான் நாய்களை விட மோசமாக இருக்கிறார்கள் என்பதை என் அனுபவத்தில் கண்ட தருணங்களில் ஒன்று அது.  (வெறி நாய்கள் மட்டுமே புதியவர்களைக் கண்டால் கடிக்கும்.)    

மரண செய்தியில் ஆரம்பித்தேன் இல்லையா?  மரணச் செய்தி என்றால் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வரும்.  என் தம்பி பெயர் சுந்தர்.  அவனும் நானும் பல காலம் நெருங்கிய நண்பர்களைப் போலவே பழகி வந்தோம்.  நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்படித்தான்.  என்னை விட நான்கு வயது சின்னவன்.  பிறகு குடும்ப வாழ்வின் அலையில் அடித்துக் கொண்டு போனவன்தான், தொடர்பே இல்லாமல் போனது.  இப்போதும் எப்போதாவது பேசுவேன்.  வருடத்துக்கு ஒருமுறை.  சில ஆண்டுகளுக்கு முன்பு அவனிடமிருந்து ஃபோன் வந்தாலே யாரோ டிக்கட் வாங்கி விட்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  பெரிய நைனா, பெரிய அத்தை, அவ்வா, மாமா, ஒன்று விட்ட சகோதரர்கள் இப்படி.  பிறகு அது என் அம்மா, நைனா என்ற அளவுக்குக் கூட நெருங்கி வந்தது. 

ஒருமுறை நண்பன் மணியோடு சென்று கொண்டிருக்கும்போது சுந்தர் அழைத்தான்.  நான் எடுக்கவில்லை.  உடனே “டேய், எடுத்துக் கேள்டா, யாராவது டிக்கட் வாங்கியிருக்கப் போறாங்க” என்றான்.  அது இருக்கும் பத்து ஆண்டுகள்.  மணிக்கே தெரிந்திருந்த விஷயம் அது.

அப்புறம் சுந்தரிடமே ஒருமுறை விளையாட்டாக அதை நான் சொன்ன போது அவனும் சிரித்துக் கொண்டே “ஐயோ, அப்படியா?” என்று கேட்டான்.  அதிலிருந்து அவன் மரண செய்தி சொல்வதை நிறுத்தி விட்டான்.  அதன் காரணமாக ஃபோன் அழைப்பும் சுத்தமாக நின்று விட்டது.

பேசியே பல ஆண்டுகள் ஆகி விட்டதே, கொரோனா காலத்தில் நாம் உயிரோடு இருக்கும் நற்செய்தியை அவனுக்குத் தெரிவித்து விடுவோம் என்ற எண்ணத்தில் சென்ற ஆண்டு ஒருநாள் காலை எட்டு மணிக்கு போன் செய்தேன். 

தூக்கக் கலக்கத்தில் பேசினான்.  என்னடா என்று கேட்டால், இரவு ஒரு மணிக்குத்தான் தூங்குவானாம்.  அவ்வளவு நேரம் ஏன் என்றதற்கு, அப்போதுதான் தூக்கமே வருகிறது என்றான். 

அத்தோடு சரி.  அதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்வதில்லை. 

என்னாலோ காலை எட்டரைக்கு மேல் போனை எடுத்துப் பேச முடியாது.  எடுபிடி வேலை, பூனை வேலை எல்லாம் போக எழுதுவதற்குக் கிடைக்கும் நேரம் ரொம்பக் கம்மி என்பதால் ஃபோனை எடுக்க மாட்டேன்.  சீனியிடம் மட்டும் ஒரு ஐந்து நிமிடம் பேசுவேன்.  அதுவும் ஔரங்கசீப் பற்றி.  அதுவும் இரவு எட்டு மணி அளவில்.  அப்போது எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும்.

எனக்கு யாரும் ஃபோனில் குட் மார்னிங் மெஸேஜ் அனுப்பினால் பிடிக்காது.  பதிலுக்கு குட் மார்னிங் அனுப்ப வேண்டும்.  நேர விரயம்.  அவர்களுடைய குட் மார்னிங் மெஸேஜை அழிக்க வேண்டும்.  நேர விரயம். 

என் நெருங்கிய நண்பர்கள் யாரும் குட் மார்னிங் மெஸேஜ் அனுப்பியதில்லை. 

ஆனால் வேறொரு மாதிரி இன்று காலை என் மலேஷிய நண்பர் ஒருவர் குட் மார்னிங் அனுப்பியிருந்தார்.  ”சாரு, குட் மார்னிங், கொரோனா முடிந்து நிலைமை சீரானதும் உலகப் பயணம் மேற்கொள்ள இந்தப் பணம் உதவவே உதவாது.  ஆனால் உங்கள் மற்ற செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்பது மெஸேஜ்.  நானும் பணம் கிடைத்த விவரத்தைச் சொல்லி பதில் குட் மார்னிங் அனுப்பினேன்.  

ஒருநாள் காலை ஐந்தரை மணிக்கு சீனி ஃபோன் செய்திருக்கிறார்.  சைலண்ட் மோடில் இருந்திருக்கிறது.  ஆறு மணிக்குத்தான் பார்த்தேன். ஐந்தரை மணிக்கு ஃபோன் பண்ணி குட் மார்னிங் சொல்லும் அளவுக்கு அவருக்கு எதுவும் ஆகவில்லையே என்ற சம்சயத்துடன் மாடிக்கு இப்போதே கிளம்பி விடலாமா என யோசித்தேன்.  வழக்கமாக வாக்கிங் கிளம்பும் நேரம் ஆறரை.  மெஸேஜ் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.  சாரு, உங்களோடு பேச நினைத்தேன், இப்போதுதான் தூங்கப் போகிறேன்.  குட் நைட்.   காலை ஐந்தரைக்கு வந்த குட் நைட் மெஸேஜ்.  ஆஹா, ஒரு எழுத்தாளனாகவே வாழ்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.    

 சரி, நான் ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன். 

என் நெருங்கிய நண்பர் ஒருவர்.  பெயர் பழனி என்று வைத்துக் கொள்வோம்.  ஏனென்றால், பெயரைப் போட்டால் சிலர் வருந்துகிறார்கள்.  சிலர் சந்தோஷப்படுகிறார்கள்.  யார் வருந்துவார், யார் சந்தோஷம் அடைவார் என்று யூகிக்கும் திறன் எனக்கு இல்லாததால் புனைப்பெயரையே இங்கு குறிப்பிடுகிறேன்.  ஆனால் பெயர் குறிப்பிட்டால் வருந்துபவர்கள் பற்றி நான் பெரிதும் வருந்துகிறேன்.  நான் ஒரு கலைஞன்.  என் எழுத்து தமிழ் வாசிக்கப்படும் வரை வாசிக்கப்படும்.  இப்படித்தான் ஒவ்வொரு எழுத்தாளரும் நினைக்கிறார்.  அப்படித்தான் நினைத்தால்தான் எழுதவே முடியும்.  இருந்தாலும் எனக்கு எதன் மீதும் உணர்வு பூர்வமான பற்றோ, சுயாபிமானமோ இல்லை என்பதாலும் உலக இலக்கியம் அறிந்தவன் என்பதாலும் என் எழுத்து பற்றி என்னால் மதிப்பிட முடியும்.  அதனால் சொல்கிறேன், என் எழுத்து தமிழ் உள்ள வரை வாசிக்கப்படும்.  அதனாலேயே, நான் சென்ற பிறகு என் நண்பர்களின் பெயர்களும் சரித்திரத்தில் நிற்கும்.  குவளைக்கண்ணனைப் போல.  அது தெரிந்திருந்தும் என் பெயரைக் குறிப்பிடாதே என்று சொல்பவர்களின் மீது எனக்கு இரக்கமே உண்டாகிறது. 

சீனி, ராகவன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), ஸ்ரீராம் ஆகியவர்களை மட்டுமே என்னால் எந்தத் தயக்கமும் இன்றி எழுத முடிகிறது.  இவர்கள்தான் எது பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.  மற்றவர்கள் சுருங்கி விடுகிறார்கள். 

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நம்முடைய பழனி.  அற்புதமான மனிதர்.  அவருக்குக் கோபம் வந்து அவர் மனைவி, மகன் உட்பட யாரும் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.   கோபம் வரும், வெளிப்படுத்த மாட்டார்.  அதற்காகக் கஷ்டப்பட்டு அடக்கி வைக்கவும் மாட்டார்.  அந்தக் கோபத்தையும் சகஜமாக சிரித்துக் கொண்டேதான் வெளிப்படுத்துவார்.  லூசுப் பயலுக. இதுதான் அவருடைய அதிக பட்ச கோபத்தின் வெளிப்பாடு.  அதைக் கூட அவருக்கு மட்டுமே கேட்கும் அளவுக்குத்தான் சொல்வார்.

அவ்வப்போது நாட்டு நடப்புகளை எனக்கு வாட்ஸப் மூலம் தெரிவிப்பார்.  அதுவரை அந்த விஷயம் எனக்குத் தெரியாததாக இருக்கும்.  பயனுள்ள தகவலாகவும் இருக்கும். 

அவ்வாறு ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஒருவரின் மரணச் செய்தியை எனக்கு வாட்ஸப்பில் தெரிவித்தார்.

அவருக்கும் எனக்கும் அன்பார்ந்த நல்லுறவும் நட்பும்தான் இருந்திருக்கிறது.  ஆனால் அவர் செய்த ஒரு காரியத்தினால் அவரைப் பற்றி எனக்குத் துளியும் நல்ல எண்ணம் இல்லை. 

என் நண்பர் பழனிக்கு நான் இப்படி ஒரு மெஸேஜ் அடித்து விட்டேன்.

டியர் பழனி,

நீங்கள் அனுப்பியுள்ள செய்தியில் கண்டிருக்கும் நபர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை.  இனிமேல் மரணச் செய்தி எதுவும் அனுப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இப்படித்தான் ஒரு நண்பர் – நீங்களா என்பது ஞாபகம் இல்லை – ஒரு இளம் கவிஞரின் மரணச் செய்தியை அனுப்பினார்.  கவிஞர் மரணமடைவதற்கு ஒரு மாதம் முன்னால்தான் ஒரு இரவுச் சந்திப்பின் போது என்னைக் கொலை செய்ய முயற்சித்தார். அன்றைய தினம் பிரபு காளிதாஸ் என்னைக் காப்பாற்றியிருக்காவிட்டால் நான் செத்திருப்பேன். இதை நீங்கள் பிரபுவிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்ளலாம்.  அவர் அப்படிச் செய்வார் என்று தெரிந்தே பிரபுவை என் பாதுகாவலராக அழைத்துச் சென்றிருந்தேன்.  ஒருத்தர் போதாது என்று இன்னொரு வாட்டசாட்டமான நண்பரையும் அழைத்துப் போனேன்.  என் துரதிர்ஷ்டம் அவர் அந்த நேரம் பார்த்து மூத்திரம் அடிக்கப் போய் விட்டார்.  அப்போது கவிஞர் கடும் போதையில் இருந்தார்.  நான் குடிக்கவில்லை.  அன்றைய தினம் நான் குடித்திருந்திருந்தால் அவரிடம் அடி வாங்கிச் செத்திருப்பேன்.  குடித்தால் நமக்கும் அத்தனை ஜாக்கிரதை உணர்வு இருக்காது இல்லையா?  கவிஞர் என்னை, டேய் ங்கோத்தா தேவுடியாளுக்குப் பொறந்தவனே, உன்னைக் கொல்லாம வுட மாட்டேண்டா என்று ஆவேசமாக என் மீது பாய்ந்த போது நான் போதையில் இருந்திருந்தால், நானும் பதிலுக்குப் படு ஆபாசமாகத் திட்டியிருப்பேன்.  என் அளவுக்கு கெட்ட வார்த்தை பேசும் நபரை நான் பார்த்ததில்லை.  ஆனால் குடிக்காமல் இருந்ததால், டேய் கண்ணுக்குட்டி, செல்லக்குட்டி, நீ என் மகன் இல்லையாடா, ராஜாக்குட்டி என்று பம்மினேன்.  ஆனாலும் அவர் ஆவேசம் குறையவில்லை.  பிரபுதான் அவரை அமுக்கினார். 

எனவே இனிமேல் ஒருபோதும் எனக்கு மரண செய்திகளை அனுப்பாதீர்கள்.

மேலும், பழனி, நீங்கள் உலகை அன்பின் வழி பார்ப்பவர்.  நானும் அப்படித்தான் பார்க்கிறேன்.  ஆனால் அன்பை விட எழுத்து முக்கியமாகப் போவதால் சக எழுத்தாளர்களுக்கு என் மீது மிகுந்த பகைமை உண்டாகிறது.  சமீபத்தில் பாருங்கள்.  நான் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டியிருந்தது.  என்னால் மற்றவர்களைப் போல் நட்புக்காக, கொண்ட கொள்கையை விட்டு விட்டு ஜால்ரா அடிக்க முடியாததால் நண்பர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டேன்.  நான் 40 ஆண்டுகளாகப் பாடுபட்ட கொள்கைக்கு விரோதமாக நடக்கும்போது நான் அதை ஆதரிக்க முடியுமா?  ஆனால் அவர் நண்பர் என்பதால் என்னைக் கோபித்துக் கொண்டதோடு விட்டு விட்டார்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் ஜென்மப்  பகைதான். 

உங்களை எப்போதும் நேசிக்கும்,

சாரு  

இதற்கு பழனி ஒரு பதில் மெஸேஜ் அனுப்பினார். 

”ஸாரி சாரு, உங்களுக்குத் தெரிய வேண்டுமே என்பதற்காகத்தான் அனுப்பினேன்.  வெரி ஸாரி.”

டியர் பழனி,

ஒரு அடிப்படையான விஷயம்.  நீங்கள் நேற்று ஒருவரின் மரணச் செய்தியைத் தெரிவித்தீர்கள்.  அந்தச் செய்தி அந்த நபர் பற்றிய என் கசப்பான உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்தது.  அதை நான் உங்களுக்குத் தெரிவித்தேன்.  பொதுவில் தெரிவித்தால் என்னைக் காறி உமிழ்பவர்களின் கூட்டம் (ஜெயமோகனின் இரண்டு நோயாளிகள் சிறுகதை) கணக்கில் அடங்காமல் பெருகும் என்பதாலேயே உங்களுக்குத் தனிப்பட்ட கடிதமாக எழுதி விட்டேன்.   என்ன அடிப்படையான விஷயம் தெரியுமா?  அந்தச் செய்தியை உங்களைத் தவிர வேறு யார் அனுப்பியிருந்தாலும் அதை ரத்து செய்து விட்டுப் போயிருப்பேன்.  இத்தனை நீண்ட பதில் எழுதியிருக்க மாட்டேன்.  காரணம், எனக்கு ஒரே ஒரு நிமிடம் கூட கிடைப்பதில்லை.  அந்த அளவு வேலை.

இப்போது காலை மணி ஆறு.  இது எனக்கு தியான நேரம்.  ஆனாலும் அதைத் துறந்து விட்டு உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், இந்தக் கடிதமும் ஒரு தியானம் மாதிரிதான்.

ஒருவரின் மரணத்தின் போது அவர் பற்றிய கசப்பான நினைவுகளை அசை போடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  ஆனால் நான் ஒரு போராளி.  எனக்கு சராசரி மனிதர்களின் மதிப்பீடுகள் ஒத்து வராது.  அவற்றை நான் பின்பற்றவும் முடியாது. 

என்னுடைய முந்தைய கடிதத்தைப் படித்து விட்டு நீங்கள், ஒரு செய்திக்காகவே அனுப்பினேன் என்று சொல்லி வருத்தம் தெரிவித்திருந்தீர்கள்.  அந்த ஒரு விளக்கம் அனாவசியமானது.  ஏன் அந்தச் செய்தியை எனக்கு அனுப்பினீர்கள் என்று நான் கேட்கவில்லையே?  கேட்டிருந்தால் நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம்.  தவறு இல்லை.  நீங்கள் செய்தி சொன்னீர்கள்.  வேண்டாம், இனி இப்படி அனுப்பாதீர்கள் என்றேன்.  சரி சாரு, புரிந்து கொண்டேன் என்பதே சரியான பதில்.  ஒரு செய்திக்காகவே அனுப்பினேன் என்றால் ஒரு தவறுக்கு மேல் மற்றொரு தவறு என்றாகிறது.

பொதுவாக, இதன் காரணமாகவே யாராவது ஸாரி என்று சொன்னால் எனக்குப் பதற்றம் ஆகிறது.  ஏனென்றால், வருத்தப்படுவது என்பது மிகவும் அந்தரங்கமானது.  சுய மைதுனம் மாதிரி.  அதை ஏன் மற்றவருக்கும் தெரிவிக்க வேண்டும்.  பல சமயங்களில் அப்படித் தெரிவிக்க வேண்டியிருக்கும்.  பாவி, ஒரு ஸாரி கூட சொல்லவில்லை என்பார்கள்.  நானுமே சொல்வேன்.  அப்படியானால், ஸாரியோடு நிறுத்த வேண்டும்.  ஸாரி சொல்லும் அத்தனை பேரும் ஸாரியோடு நிறுத்துவதில்லை.  தன் செயலுக்கான ஒரு விளக்கத்தையும் கூடவே அனுப்புகிறார்கள்.  (அதாவது, ’நான் சொன்னதன் காரணம் இன்னது, அதைப் புரிந்து கொள்ளாமல் என்னை ஏன் ஸாரி கேட்க வைக்கிறீர்கள்’ என்பது ஸாரியில் அடங்கியுள்ள உள்குத்து.  அதைத்தான் ஒரு தவறுக்கு மேல் மற்றொரு தவறு என்கிறேன். 

இப்போது இந்தக் காலை நேரத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது.  எனக்கு ஒருவரைப் பார்த்தால் பிடிக்காமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள் காரணம் கேட்டால் தெரியாது.  காரணம், என் மன அடுக்குகளில் எங்கோ பதுங்கி இருக்கும்.

இப்போது, இந்தத் தருணத்தில், எனக்கு அந்த நபரை ஏன் பிடிக்காது என்ற காரணம் விளங்கி விட்டது.  அதை நான் என்னுடைய க.நா.சு. பற்றிய பேருரையில் சொல்லியிருக்கிறேன்.  

க.நா.சு. இறந்து விட்டார்.  க.நா.சு. மேதை என்ற சொல்லுக்குத் தகுதியானவர்.  அவர் அளவுக்குப் படித்தவர் சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இல்லை.  காலம் பூராவும் புத்தகம் வாங்கியவர்.  ஒரு மாபெரும் நூலகம் அவரிடம் இருந்தது.  காசு இல்லாததால் மகள் வீட்டில் வாழ்ந்தார்.  மகளின் கணவரே நீங்கள் குறிப்பிட்ட நபர்.  பெரிய வீடுதான்.  ஆனாலும் ஒரு லட்சம் புத்தகங்களை எங்கே வைப்பது?  எல்லாம் 60 ரஜாய் பெட்டிகளில் இருந்தன.  ரஜாய் பெட்டி என்பது மூன்று அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட பெட்டிகள்.  வட இந்தியாவில் பிரபலம்.  வடக்கில் ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டு பேர் இருப்பார்கள் என்பதால் அத்தனை பேரில் ரஜாயும் அந்த அலுமினியப் பெட்டியில்தான் வைப்பார்கள்.

க.நா.சு. இறந்தபோது அவர் மகள் கர்ப்பிணி.  வீட்டில் இடம் இல்லை என்று எல்லா பெட்டிகளையும் நீங்கள் சொன்ன அன்பர் ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்து விட்டார்.  அக்பரின் நூலகம் போன்றது அது.  இன்றைய மதிப்பில் பத்து கோடி ரூபாய் இருக்கும்.  இனிமேல் அதை என்றென்றைக்கும் வெளி உலகம் காணாது.  அது வெளிவந்தால் பத்திரிகை ஆசிரியரின் தந்தையின் சிம்மாசனம் கொஞ்சம் ஆட்டம் காணும்.  அதை அந்த தவப்புதல்வர் செய்வாரா?

இப்படி ஒரு மகத்தான பொக்கிஷத்தைக் குழி தோண்டிப் புதைத்த மகானுபாவர்தான் நீங்கள் குறிப்பிட்ட நபர்.  இப்படி அந்த நூலகப் பொக்கிஷத்தை பத்திரிகை ஆசிரியரிடம் தூக்கிக் கொடுத்ததற்கு, அந்தப் புத்தகங்களை க.நா.சு.வைக் கொள்ளி போடப் பயன்படுத்தியிருக்கலாம்.

இதெல்லாம் தோன்றியது.  என்ன செய்ய?  புதுமைப்பித்தன் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.

சாரு

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai