அந்நியர்கள் : சிறுகதை: ராஜா வெங்கடேஷ்

மூன்று மணிக்கே இருட்ட ஆரம்பித்துவிட்டது. நேற்று இரவிலிருந்தே பனி விடாமல் பெய்துகொண்டிருப்பதால் தரை முழுதும் ஏழெட்டு இஞ்சுக்கும் மேலாக பனி போர்த்தியிருக்கிறது. பனி அகற்றும் வாகனம் இரண்டு முறை வந்து பனியை அகற்றிச் சென்ற பின்பும் சாலைகளில் பனி நீங்காமல் இருப்பதால் வாகனப் போக்குவரத்தும் பெரிதாக இல்லை.

பெரும்பாலான நாட்களில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பதால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிசிடிவி கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது, ஆதி காலத்து POS இயந்திரத்தில் டிங் டிங் என்று அடித்து

பில் போடுவது, செல்ஃப்களில் பொருட்கள் காலியாக காலியாக பின்புறம் உள்ள ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்து வந்து நிரப்புவது என்று சலிப்பிலாமல் ஓடிக்கொண்டே இருப்பேன். இன்று பெரிதாக யாரும் கடைக்கு வராததால் காலையில் இருந்து இரண்டு படங்களை டவுன்லோட் செய்து பார்த்துவிட்டேன். பேஸ்புக்கிலும் சுவாரசியமாக எந்த வம்பு தும்பும் இல்லாததால் அப்படியே சாலையைப் பார்ப்பதும், மொபைலை நோண்டுவதுமாக இருந்தேன்.

தானியங்கி கதவு திறக்கும் அரவம் கேட்டு வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். லூகாஸ் தன் மிதிவண்டியை சுவரில் சாத்தி வைத்துவிட்டு கடைக்குள் வந்துகொண்டிருந்தான்.

“ஹேய் லூகாஸ்! எப்படி இருக்கே?” என்று வாசலில் போடப்பட்டிருந்த மிதியடியில் கால்களைத் தேய்த்துக் கொண்டிருந்த லூகாஸிடம் ஆங்கிலத்தில் கேட்டேன்.

“ஹேய் ராமேஷ். எப்படியோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது” என்று பதில் சொல்லிவிட்டு உள்ளே வந்தான்.

கொட்டுகிற பனியில் இவன் ஏன் சைக்கிளை மிதித்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறான் என்ற கேள்வியெழ “இப்படி கொட்டுகிற பனியில் இங்கு எதற்கு வந்தாய் லூகாஸ்” என்று கேட்டேன்.

“பக்கத்துத் தெருவில் உள்ள டெஸ்கோவில் இருந்து கொஞ்சம் சரக்கு பாட்டில்களை லவட்ட முடிந்தது. அதை விற்றுவிட்டு போகலாம் என்று தான் வந்தேன்.  ஆகுமா ஆகாதா என்று தீபனிடம் கேட்டுச் சொல்லு ராமேஷ்” என்று கண்ணை அடித்துக் கேட்டான்.

“அவரிடம் வெறுமனே என்னவென்று கேட்பது லூகாஸ். முதலில் என்னென்ன சரக்கு கொண்டு வந்திருக்கிறாய் என்று சொல்லு பின்பு அவரிடம் கேட்கிறேன்”

“இரண்டு பாட்டில் வைன், இரண்டு பாட்டில் விஸ்கி, ஒரு வோட்கா” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புட்டியாக தன் தோள்பையிலிருந்து எடுத்து கவுண்ட்டர்  மேடையின் மேலே வைக்க ஆரம்பித்தான்.

“ஃபக்கிங் ஹெல்‌ மேட்… இப்படியா டக்குனு எடுத்து வெளியிலே வைப்பே. யாராவது கஸ்டமர் உள்ளே வந்து பார்த்துவிட்டால் என்ன ஆவது?” 

“பனி விடாமல் இப்படி கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப் பனியில் போய் எவன் வரப்போகிறான் ராமேஷ். “

“நீ சொல்றது சரி தான். இருந்தாலும் எவனாவது வந்துவிட்டால் பிரச்சினை ஆகிவிடும். நீ பாட்டில்களை உன் பையிலேயே வைத்துக் கொடு. நான் இங்கே உள்ளே வைத்து பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொன்னவுடன் மீண்டும் பாட்டில்களை உள்ளே வைத்து பையைக் கொடுத்தான். அவனிடம் பையை வாங்கி கவுண்ட்டருக்கு கீழே வைத்துத்  திறந்து பார்த்தேன்.

உள்ளே இரண்டு பாட்டில் ‘பெல்ஸ்’ விஸ்கியும், ஒரு பாட்டில் ‘ரஷ்யன் ஸ்டாண்டர்ட் ‘ வோட்காவும், இரண்டு பாட்டில் ‘டெஸ்கோ ‘ கடையின் ரெட் ஒயினும் இருந்தது.

“இந்த விஸ்கியையும், வோட்காவையும் தீபன் எடுத்துக்கொள்ள சொல்லுவார் லூகாஸ். ஆனால் இந்த டெஸ்கோ பிராண்ட் வைன் சந்தேகம் தான். “

“டெஸ்கோ ஒயினில் என்ன பிரச்சினை. ‘மெக்டாலன் ரோடு டெஸ்கோவில்’ இந்த ஒயின் தான் அதிகம் ஓடுகிறது. விலை குறைவாக இருந்தாலும் ஒயின் பயங்கரமாக இருக்கும்.”

“அதெல்லாம் ஓகே. ஆனால் அந்தக் கடையின் பெயர் பொறிக்கப்பட்ட வைன் பாட்டில்களை இங்கே வைத்து எப்படி விற்பது லூகாஸ்? விற்பனைக்காக செல்ஃபில் வைத்தால், கஸ்டமர் எவனும் பார்த்து திருட்டு பாட்டில்களை விற்கிறோம் என்று போலீசில் போட்டுக் கொடுத்து விட மாட்டானா?“

“விற்பதற்கு இல்லையெனினும், தீபன் தான் குடிப்பதற்காக வாங்கி வைத்துக் கொள்வார் ராமேஷ். அவருக்கு வேண்டாமென்றால் நீ எடுத்துக் கொள். போட்டிருக்கும் விலையில் கால் பங்கு கொடுத்தால் போதும்.” என்று சிரித்தான்.

“அய்யயோ எனக்கு வேணாம் பா. கடையிலே வேலை செய்யும்போது உங்ககிட்ட நேரடியாக பொருட்கள் வாங்கக்கூடாது என்று பாஸ் உத்தரவு போட்டிருக்கிறார்.”

“ஓ… இப்படியெல்லாம் ரூல்ஸ் போட்டிருக்கிறாரா! சரி சரி அவருக்கு ஃபோன் செய்து கேட்டுப் பாரேன்.” என்று கேட்டான்.  

“அதையேன் கேட்கிறாய்! ஆயிரம் ரூல்ஸ்.” 

என்று சொல்லிவிட்டு தீபன் அண்ணனிற்கு ஃபோன் செய்தேன். இரண்டு முறை ரிங் ஆகியதும் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

“ஏதாவது வேலையாக இருப்பார் என்று நினைக்கிறேன் லூகாஸ்.  ஃபோனை கட் செய்து விடுகிறார். அவரிடம் கேட்காமல் நான் சரக்கை வாங்கி வைக்க முடியாது. நீ வேண்டுமானால் போய்விட்டு நாளைக்கு காலையில ஒரு 9 மணி வாக்கில் வா. அவரிடமே நேரடியாகவே கொடுத்து விடலாம்.” என்று பையை அவனிடம் நீட்டினேன்.

“இல்லை ரமேஷ். எனக்கு பணம் கொஞ்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது. இல்லையென்றால் எதற்கு எப்படி கொட்டும் பனியில் சைக்கிளை மிதித்துக்கொண்டு இங்கே வருகிறேன். நீ மறுபடியும் ஒரு முறை ஃபோன் செய்து பாரேன் ராமேஷ்” என்று கூறினான்.

“இல்லை லூகாஸ். அவர் ஃபோன் எடுக்கும் சூழ்நிலையில் இருந்தால் கண்டிப்பாக அழைப்பைத் துண்டித்திருக்க மாட்டார். எப்படியும் திரும்ப அழைப்பார். வா, அவர் திரும்ப அழைப்பதற்குள்ளாக போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவரும் வெளியே வந்தோம்.

வெளியே காற்று நன்கு வீசிக்கொண்டு இருந்தது.

கடையின் சுவரை ஒட்டி கூரையின் நிழலில் நின்றுகொண்டிருந்தாலும் பனியுடன் காற்றும் சேர்ந்து அடித்து எலும்பைத் துளைப்பது போல குளிரிக் கொண்டிருந்தது. நடுக்கத்துடனே கோட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து நான் ஒரு சிகரெட்டை எடுத்துகொண்டு, அவனிடம் பாக்கெட்டை நீட்டினேன்.

சிகரெட்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டுவிட்டு அவனை நோக்கி “லூகாஸ், அநேகமாக எல்லாக் கடைகளிலும் சிசிடிவி காமெராக்கள் மாட்டி தீவிரமாக கண்காணித்துக்  கொண்டு தான் இருக்கின்றனர். அப்படியிருந்தாலும் எப்படி உங்களால் பொருட்களை எளிதாகத்  திருடிக்கொண்டு வர முடிகிறது?” என்று அவர்கள் திருடும் முறையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டேன்.

“அந்த ட்ரிக்கை உன்னிடம் சொல்லிவிட்டால், அப்புறம் உன் கடையிலே நாங்கள் எப்படி கை வைக்க முடியும்?” என்று நக்கலாகக் கேட்டான்.

“அடப்பாவி எங்கள் கடையிலுமா திருடியிருக்கிங்க?”

“பதற்றப்படாதே! ஜஸ்ட் கிட்டிங். சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் உங்கள் கடையிலும் தான் திருடிக்கொண்டிருந்தோம். ஆனால் எப்பொழுது நாங்கள் கொண்டு வரும் பொருட்களை தீபன் வாங்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து உங்கள் கடையில் கை வைப்பதில்லை. 

“என்ன தொழில் தர்மமா லூகாஸ்?”

“ஒரு வகையில் அப்படித் தான் என்று வைத்துக்கொள்ளேன். ஒருவேளை திருடி மாட்டிக்கொண்டால் ஒரு நல்ல கஸ்டமரை இழந்து விடுவோம் இல்லையா! அதனால் எங்களிடம் சரக்கை வாங்குபவர்களின் கடைகளில் கை வைப்பதில்லை.”

“நல்ல டீலிங் தான். சரி, தீபனும் தான் கடை முழுதும் சிசிடிவி கேமரா மாட்டி, கஸ்டமர்கள் கடைக்குள்ளே வந்து எங்கெல்லாம் செல்கிறார்கள், என்னவெல்லாம் எடுக்கிறார்கள் என்று கவுண்ட்டரில் இருந்து கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டு இருப்பாரே அப்படியிருந்தும் எங்கள் கடையிலே எப்படி திருடி முடிந்தது? “

திருடும் முறை கடைக்கு கடை மாறுபடும்.

உங்கள் கடைகளைப் போன்ற கடைகளுக்கு திருடச் செல்லும்போது

தனியாக செல்லவே மாட்டோம். நானும் சோஃபியாவும் சேர்ந்தே தான் போவோம். இருவரும் கடை முழுதும் பராக்கு பார்த்தவாறே ஒன்றாகச் சுற்றி வருவோம். ஒவ்வொரு செல்ஃபில் உள்ள பொருட்களையும் பார்த்துக் கொண்டு எங்களுக்குத் தேவைப்படும் ஏதாவது ஒரு சில பொருட்களை அவ்வப்போது  கூடையில் எடுத்துப் போட்டுகொண்டே இருப்போம்.  அப்படி எடுக்கும் பொருட்களின் விலையும் ஒன்று இரண்டு பவுண்டிற்குள் மலிவாக இருக்கும்படி பார்த்து தான் எடுப்போம். பின் யார் கையில் கூடை இருக்கிறதோ அவர் கவுண்டட்ருக்கு வந்து பில் போட ஆரம்பிப்போம். பில் போடுகையில் கடைக்காரரின் கவனம் பெரும்பாலும் சிசிடீவி திரையின் மேல் இருக்காது. அந்த சமயத்தில் கவுண்ட்டரின் அருகே இருப்பவர் கொடுக்கும் சமிக்ஞையைப் பொறு த்து மற்றோரு நபர் தேவையான பொருட்களை எடுத்து கைப்பையிலோ அல்லது ஸ்ட்ரோலரிலோ போட்டுக் கொள்வோம். பின் கவுண்ட்டருக்கு அருகே வந்து ‘நான் பக்கத்து இறைச்சி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டு இருக்கிறேன், நீ பணம் செலுத்துவிட்டு சீக்கிரம் வா’ என்று ஏதேனும் ஒரு காரணம் சொல்லிவிட்டு உடனே நழுவி விடுவோம்.”

“ஒருவேளை பில் போடுகையில் காமெராவில் பார்த்துவிட்டால் என்ன செய்வீங்க?” என்று கேட்டேன்.

“பார்த்தால் என்ன? இங்குள்ள பெரும்பாலான ஆஃப் லைசென்ஸ் கடைகள் இந்தியர்களோ, ஸ்ரீலங்கனோ தானே நடத்துகிறார்கள். எல்லாக் கடைகளிலும் பெரும்பாலும் உன்னைப் போல படிக்க வந்தவர்களையோ, விசா இல்லாமல் ஓவர் ஸ்டே செய்பவர்களையோ தானே இல்லீகலாக குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருக்கின்றனர்.”

“பெரும்பாலும் என்ன எல்லாக் கடைகளிலும் என்னைப் போன்றோர் தான் பார்த்துக் கொள்கின்றனர்.” என்று அவனை இடைமறித்துக் கூறினேன்.

“யெஸ் . உதாரணத்திற்கு நீயே கவுண்ட்டரில் இருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோமே. எங்களைப் போல எவரேனும் வந்து திருடுகையில் கண்டு பிடித்துவிட்டால் என்ன செய்வாய்?”

ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, “என்ன செய்வேன். தீபனுக்குத் தான் போன் செய்து விஷயத்தை சொல்வேன்.”

“அவர் என்ன போலீசுக்கு அழைத்து தகவல் சொல்லு என்றா உன்னிடம் சொல்வார்? கண்டிப்பாக மாட்டார். கண்டுகொள்ளாமல் விடு என்று சொல்வார் அல்லது பொருட்களை வாங்கிவைத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று ஏதேனும் சொல்லச் சொல்வார். இதைத் தவிர அவரால் என்ன செய்ய முடியும்?”

“நீ சொல்லுவது சரி தான். எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் திருடனுக்கு தேள் கொட்டியது போல அந்த நிலைமை தான்.”

லூகாஸ் “யெஸ்… யெஸ்.. அதே தான்” என்று தலையை மேலும் கீழும் வேகவேகமாக அசைத்தான்.

பிரதான சாலையிலிருந்து ஒரு வேன் எங்கள் கடை இருக்கும் சாலையில் திரும்பி வந்துகொண்டிருந்தது. சாண்ட்விச்சுகள் விநியோகிக்கும் கம்பனிக்காரனின் வேன் தான். கடையின் முன்னே வந்து வேனை நிறுத்திவிட்டு, வேனின் பின்புறம் சென்று தீபன் கொடுத்துள்ள ஆர்டருக்கு ஏற்ப சாண்ட்விச்களை ஒரு ட்ரேயில் அடுக்கி எடுத்து வந்தான். அவனிடம் பொருட்களை சரிபார்த்து வாங்குவதற்காக சிகரெட்டைப் பாதியிலேயே அணைத்துவிட்டு “நான் அவனை கவனிக்கிறேன். நீ பொறுமையாக வா” என்று லூகாஸிடம் சொல்லிவிட்டு கடைக்குள்ளே சென்றேன்.

ஸ்டோர் ரூமில்  வைத்திருந்த காலாவதியாகிப் போன சாண்ட்விச்சுகளை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அவன் கொண்டு வந்த பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து டெலிவரி சலானில் கையெழுத்திட்டு அவனை அனுப்பி வைத்தேன்.

பின்னர் சாண்ட்விச்சுகள், பர்கர்கள் ஆகியவற்றை எடுத்து பிரிட்ஜில் அடுக்க ஆரம்பித்தேன்.

“ரமேஷ், எதற்கு போன் செய்திருந்தாய் என்று கேட்டவாறே” தீபன் அண்ணா உள்ளே வந்தார். பின்னாலேயே லூகாஸும் வந்தான்.

“லூகாஸ் கொஞ்சம் சரக்கு பாட்டில்கள் கொண்டு வந்திருக்கிறான். அதை வாங்கி வைத்துக்கொள்ளலாமா என்று கேட்கத் தான் போன் செய்தேன் அண்ணா” என்று சொல்லிவிட்டு அவன் கொண்டு வந்த பையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அவரும் பாட்டில்களை எல்லாம் ஆராய்ந்துவிட்டு, “என்ன லூகாஸ் டெஸ்கோ பாட்டில்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாய். போன மாதம் தானே ஷண்முகம் கடையிலே பெரிய பிரச்சனை ஆகியிருக்கிறது. மறுபடியும் என்னிடம் கொண்டுவந்து கொடுத்து என்னை மாட்டவைக்கப் பார்க்கிறாயா? ” என்று அவனைப் பார்த்து கேட்டார்.

“டெஸ்கோ பாட்டிலை விற்பதற்காக இல்லையென்றாலும் பரவாயில்லை பாஸ், நீங்க குடிப்பதற்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள். பாட்டிலில் போட்டிருக்கும் விலையில் கால் பகுதி கொடுத்தால் கூட போதும்.” என்று எல்லா பாட்டில்களையும் இங்கேயே தள்ளிவிட்டுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கூறினான்.

“ஐயையே… நான் இந்த வைனை எல்லாம் குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்கள் ஆகிறது. விஸ்கியையும், வோட்காவையும்  வேண்டுமென்றால் எடுத்துக் கொள்கிறேன்” என்று சொன்னவர் என்னைப்  பார்த்து “ரமேஷ், உனக்கு வேண்டுமென்றால் இந்த வைனை நீ எடுத்துக்கொள்” என்று கேட்டார்.

“ம்ம்… ஓகேண்ணா… நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று தலையசைத்தேன்.

ஐந்து பாட்டில்களுக்கும் சேர்த்து லூகாஸிடம் பணத்தை நீட்டினார்.

லூகாஸ் அவருக்கு நன்றி கூறிவிட்டு என்னைப் பார்த்து “நான் பஸ் ஸ்டேஷன் வழியாகத் தான் போகிறேன், வருகிறாயா அப்படியே பேசிக்கொண்டே நடந்து செல்லலாம் என்று கேட்டான்.”

“ரமேஷ், நீ கொஞ்ச நேரம் இரு. பின்னர் போகலாம்” என்று என்னிடம் கூறிவிட்டு POS மெஷினில் இன்றைய சேல்ஸ் ரிபோர்ட்டை எடுப்பதில் மும்முரமானர்.

“இல்லை லூகாஸ். நீ கிளம்பு. நான் பின்னர் வருகிறேன்”

“ஓகே. பை ரமேஷ், பை பாஸ். சீ யூ லேட்டர்” என்று கூறிவிட்டு ஹுடியை

எடுத்து தலைக்குப் போட்டுக் கொண்டு வெளியே சென்றான்.

அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலைக்கு சென்ற பின்பு தீபன் அண்ணன் என்னிடம் “ஏன் ரமேஷ், இந்த நேரத்தில் அந்த திருட்டுக் கூதிய கடையிலே நிற்க வைத்து பேசிக்கொண்டு இருக்கீங்க. ஏதாவது கொண்டு வந்தான் என்றால் பொருட்களை வாங்கி வைத்துவிட்டு காசைக் கொடுத்து அனுப்பி விட வேண்டியது தானே” என்று கோபமாகக் கேட்டார்.

“இல்லண்ணா. அவன் டெஸ்கோ வைன் எல்லாம் கொண்டு வந்திருந்தான். அதை வாங்கி வைக்கலாமா கூடாதா என்று தெரியவில்லை. நீங்களும் போன் செய்தபோது எடுக்கவில்லை. அதான்” என்று காரணத்தைக் கூறினேன்.

“ஆள் நடமாட்டம் இருந்தால் கூட பரவாயில்லை ரமேஷ். ஊரே வெறிச்சோடி இருக்கு  அவன் பாட்டுக்கு, உங்களை மிரட்டி டில்லில் இருக்கிற பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றால் என்ன செய்வீங்க”

“நீஙக போன் செய்ததும் எடுக்காததால் அவனிடம் போய்விட்டு மறுநாள் வருமாறு தான் கூறினேன். அவன் தான் தனக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று காத்திருந்தான்”

“இப்படியே பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருங்க. அவன் மட்டும் பணத்தை எடுத்துகொண்டு போயிருக்கட்டும் , நான் பாட்டுக்கு மயிரே போச்சுன்னு உங்க சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொண்டிருந்திருப்பேன்.”

என்று சொல்லிவிட்டு அவனிடம் வாங்கிய பாட்டில்களுக்கு  ‘Sticker Gun’ஐ வைத்து விலையை ஒட்டி கவுண்ட்டருக்கு பின்புறம் உள்ள மது வகைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்ப்பில் அடுக்க ஆரம்பித்தார். 

“இவரு பெரிய உத்தமப் புண்ட. பண்ணுவது எல்லாம் பக்காவான திருட்டு. இல்லீகலா ஆட்களை  வேலைக்கு வைத்துக் கொள்வது, திருட்டுப் பொருட்களை விற்பது, காலாவதியான  பிரட் பாக்கெட்டுகள், முட்டை அட்டைகளில் எல்லாம் எக்ஸ்பைரி தேதியை மாற்றுவது என்று செய்வது எல்லாம் திருட்டு வேலை.” என்று அவர் செய்யும் திருட்டுத் தனங்களையெல்லாம் வெளியே பெய்யும் பணியைப் பார்த்துக்கொண்டே மனதில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தேன்.

பாட்டிலை அடுக்கிவிட்டு திரும்பியவர் பணப் பெட்டியைத் திறந்து 50 மற்றும் 20 பவுண்டு தாள்களை எடுத்து எண்ணி “இந்தாங்க ரமேஷ், இந்த மாத சம்பளம். எண்ணிப் பாத்துக்கோங்க. “ என்று கொடுத்தார்.

அவர் எண்ணிக்கொண்டிருக்கும் போதே கூடவே நானும் எண்ணிக்கொண்டு தான் இருந்தேன். ஆயிரம் பவுண்டுகள் தான் இருந்தது. பணத்தை வாங்கி நான் ஒருமுறை எண்ணிவிட்டு “என்ன அண்ணா ஆயிரம் பவுண்டு தான் இருக்கிறது” என்று கேட்டேன்.

“அவ்வளவு தானே ரமேஷ் இருக்கும். “

“இல்லையேண்ணா. வேலைக்கு சேரும் போது முதல் மூன்று மாதத்திற்கு ஆயிரம் பவுண்டு தருகிறேன். மூன்று மாதத்திற்கு பின்னர் ஆயிரத்து ஐநூறாக ஏற்றித் தருவதாகவும் சொன்னீங்களே”

“அப்படியெல்லாம் எதுவும் சொன்னது போல எனக்கு ஞாபகம் இல்லையே ரமேஷ். “

“என்ன அண்ணா இப்படி சொல்றீங்க!

 நன்றாக ஞாபகம் இருக்கிறது. முதல் நாள் உங்களை வந்து பார்த்துவிட்டு நேராக ஜான் அண்ணா கடைக்கு தான் சென்றேன்.”

அவரிடம் “என்னங்கண்ணா சம்பளம் ரொம்பவும் குறைவாக சொல்லுறாரு. முதல் மூணு மாசத்துக்கு 1000 பவுண்டு தான் தருவாராம். அதுவும் காலை 8 மணிக்கு ஆரம்பிச்சு நைட் 8 மணிக்கு முடிக்கணுமாம். ஹவர்லி ரேட் போட்டால் கூட ஒரு மணி நேரத்துக்கு 2.5 பவுண்டு தான். ரொம்ப குறைவா தெரியுதேண்ணா” என்று கேட்டேன்.

அவர் தான் “எந்த வேலையும் இல்லாம இருக்கிறதுக்கு இது பரவால்ல தான ரமேஷ். அதான் மூணு மாசத்துக்கு பின்பு ஏத்திக் குடுக்குறேன்னு சொல்லியிருக்காரு இல்ல. அப்புறமென்ன கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணு என்று சொல்லி வேலையில் சேரச் சொன்னார். வேண்டுமானால் நீங்க ஜான் அண்ணாவிடம் கேட்டுப் பாருங்கள்.” என்றேன்.

“அப்போ அப்படி சொல்லியிருக்கலாம் ரமேஷ்.  இப்போ பாரு கடையில் கூட்டமும் பெரிதாக இல்லை. சேல்ஸும் ஒன்றும் சொல்லிக்கொள்வதைப் போல இல்லை” என்று மழுப்பினார்.

“ஏன்ண்ணா இப்படி பொய் பேசறீங்க. தினமும் மூன்றாயிரத்தில் இருந்து நான்காயிரம் வரை  சேல்ஸ் ஆகிறது. அதுவும் வார இறுதியில் ஆறாயிரம் வரை எளிதாக ஆகிறது. ஆனால் எனக்கு சம்பளம் கொடுக்கணும்னா மட்டும் இப்படி சொல்றிங்களே.“

“ஆமாம் ரமேஷ். சேல்ஸ் ஆகிறதுதான். எதனால்? ஸ்டாக் அந்த அளவுக்கு போட்டுகிட்டே இருக்கேன். அதனால் ஆகிறது. இதில் உன் பங்கு என்று எதுவும் இல்லை” என்று எகிற ஆரம்பித்தார்.

“நீங்க என்னை சம்பளத்துக்குத்  தானே எடுத்தீங்க, இப்போ ஏதோ நான் உங்களுக்கு பார்ட்னர் போல வியாபாரத்தைப் பொறுத்து தான் சம்பளம் என்று சொல்லுறீங்க. நீஙக இதை முன்னாடியே சொல்லியிருந்தால் நான் வேலைக்கே சேர்ந்திருக்க மாட்டேன்” என்று நானும் பதிலுக்கு குரலை உயர்த்திக் கேட்டேன்.

“என்ன ரமேஷ் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறே. ஏதோ நானாக உன்னிடம் வலிய வந்து ‘என் கடைக்கு வேலைக்கு வா, வேலைக்கு வா’ என்று கையைப் பிடித்து அழைத்து வந்தது போல பேசுகிறாய். ஜான் தான் உனக்காக ரெண்டு மூன்று தரம் ஃபோன் செய்து வேலை வேண்டும் என்று கேட்டான்.  ‘இங்கே வந்ததில் இருந்து வேலை ஏதும் கிடைக்காமல் பையன் ரொம்ப கஷ்டப்படுகிறான். எப்படியோ மூன்று மாதங்கள் ஊரில் இருந்து எடுத்து வந்த பணத்தை வைத்து ஒட்டி விட்டான். இப்பொழுது ரூம் வாடகை கூட கொடுக்க  முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்’ என்று கேட்டான். சரி கஷ்டப்படுகிற பொடியன், உதவி செய்யலாம் என்று வேலை போட்டுக் கொடுத்தால் நீ இப்படி வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய்.”

“நீங்கள் சொல்வது எல்லாம் கரெக்ட் தான். நான் இல்லைன்னு சொல்லல… முதல் மாதம் கூட 12 மணி நேரம் தான் வேலை இருந்தது. ஆனா அடுத்தடுத்த மாதங்களில் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் காலையில் 6 மணிக்கு கடையைத் திறக்கச் சொல்லி, இரவிலும் பூட்டிவிட்டு செல்லுமாறு சொல்லியிருக்கீங்க.

அதையெல்லாம் கணக்கு போட்டுப் பார்த்தால் மாதம் 2000 பவுண்டுக்கு மேலேயே நீங்க கொடுக்க வேண்டியிருக்கும். நான் என்ன அவ்வளவா கேட்டேன்?” என்று கையில் வைத்திருந்த பணத்தை கவுண்ட்டரின் மேலே வைத்துவிட்டு “அந்தப் பணத்தை நம்பி எனக்கு நிறைய கமிட்மென்ட் இருக்கு. எனக்கு பேசியபடி ஆயிரத்து ஐநூறு பவுண்டு கண்டிப்பாக வேண்டும்.   என்றேன்.

“இவ்வளவு தான் கொடுக்க முடியும். உனக்கு இஷ்டம் இருந்தால் இங்கு வேலை செய்யலாம். இல்லையென்றால் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கிளம்பு” பயங்கரமாக கத்தினார்.

“ஏன்ண்ணா இப்படி பேசுறீங்க. நான் செஞ்ச வேலைக்கு தானே பணம் கேட்கிறேன். நாம பேசினபடி சம்பளத்த கொடுத்துடுங்க. இல்லையென்றால் ஜான் அண்ணாவிடம் சொல்லி பிரச்சினை ஆக்கி விடுவேன்.” என்றேன். 

“என்னடா பொடியா, என்னையவே மிரட்டுகிறாயா? நீ எவங்கிட்ட வேண்டுமானால் போய் சொல்லிக்கொள். பேசின சம்பளம் என்ன,  ஒரு பவுண்டு கூட இனி  என்னிடமிருந்து நீ வாங்க முடியாது. என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ” என்று கத்திவிட்டு பணத்தை எடுத்து மீண்டும் உள்ளே வைத்துவிட்டார்.

என்னால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. கோபம் என்பதை விட இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தும் இப்படி அசிங்கப்பட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையில் கண்கள் பொங்கி வந்தது. அவர் முன்னால் கண்ணைக் கசக்கி கொண்டு நிற்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. சிகரட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

‘பணம் இல்லாமல் அடுத்து என்ன செய்யப் போகிறேன்’ என்ற பயம் மனம் முழுதும் ஆட்கொண்டுவிட்டது. கடந்த திங்கட்கிழமை தான் அக்கௌன்ட்டில் இருந்த மொத்த பணத்தையும் சுரண்டி எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தேன்.  இனி வாடகை கொடுக்க வேண்டும், டிராவல் பாசை புதுப்பிக்க வேண்டும். வாராந்திர குடி… சிகரெட் செலவு… மொபைல் போன் காலிங் கார்டு…  எல்லாவற்றுக்கும் என்ன செய்ய. ஓராயிரம் கேள்விகள் மனதில் சுழன்று அடித்துக்கொண்டிருந்தது.

சிகரட்டை அணைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றேன்.

தீபன் கடையை அடைப்பதற்காக ‘டில்லில்’ உள்ள பணத்தை எண்ணி எண்ணி டிநாமினேஷன் தாளில் நிரப்பிக்கொண்டிருந்தார்.

“அண்ணா யோசிச்சுப் பார்த்தேன். ரெண்டு மாசம் கழிச்சு கூட சம்பளத்தை ஏத்தி கொடுங்க. இப்போதைக்கு அந்த ஆயிரம் பவுண்ட் மட்டும் வாங்கிக் கொள்கிறேன்.” என்று பணிந்து போனேன்.

“நீ பாட்டுக்கு என் கடைல நின்னுகிட்டே அவன்கிட்ட சொல்லுவேன் இவன் கிட்ட சொல்லுவேன்னு மிரட்டுவ. நான் என்ன உன்னை உக்கார வெச்சிட்டு வேலை கொடுக்கணுமா. ஒத்தப் பைசா கூட தர முடியாது வெளில போடா…” என்று மூஞ்சியில் அடித்தாற்போல சொல்லிவிட்டு மீண்டும் பணத்தை எண்ண ஆரம்பித்தார்.

“அண்ணா, ஏதோ கோபத்தில் அப்படி சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று வெட்கத்தை விட்டு மன்னிப்பு கேட்டேன்.

“நீ என்ன சொன்னாலும் சரி, என்கிட்ட இருந்து ஒத்த பைசா கூட நீ வாங்க முடியாது. இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தீன்னா ‘கடையில் பொருளைத் திருடப் பார்த்தான்’னு போலீஸுக்கு அழைத்துச் சொல்லி விடுவேன்” என்று மிரட்டினார்.

ஒரு கணம் லூகாஸின் முகம் மனதில் மின்னல் போல வந்து போனது.

“எங்க தைரியமிருந்தா போலீசுக்கு கால் பண்ணு பாக்கலாம்…  போலீஸ் வரட்டும். வந்து என்னையப் புடிச்சுட்டு போறாங்களா, இல்ல உனக்கு பத்தாயிரம், இருபதாயிரம் பவுண்ட் என்று ஃபைன் போடுறாங்களான்னு பாப்போம். பண்ணு…”

“மரியாதையாப் பேசு ரமேஷ்… “

“ஒனக்கென்னடா புண்ட மரியாதை வேண்டி கிடக்கு.  செஞ்ச வேலைக்கு சம்பளத்தை கேட்டா குடுக்குறதுக்கு வலிக்குதா? காலைல வேலைக்கு வந்தா தினமும் 12 மணி நேரத்துக்குக் குறையாம உனக்கு வேல செய்யணும். ஒக்கார்றதுக்கு ஒரு ஸ்டூல் மயிரும் போட்டு வய்க்க மாட்ட, காலை மாத்தி மாத்தி நின்னு உனக்கு சேல்ஸ் பண்ணி கொடுக்கணும். கேக்கிறேன், ஏதாவது ஒரு நாள் இடையில் வந்து என்னை மாத்திவிட்டுட்டு ப்ரேக் எடுத்துக்கோன்னு சொல்லிருக்கியா? எத்தன நாள் நின்னுகிட்டே அவசரம் அவசரமாக சாப்பிட்டுகிட்டு, கஸ்டமர் எவனாவது வந்துடுவானோன்னு தொடச்சும் தொடைக்காமயும் டாய்லெட் போய்ட்டு வந்து வேல செஞ்சா சம்பளம் குடுக்க மாட்டியா?  இப்போ, நீ போலீஸுக்கு போன் அடிக்கிறியா இல்ல நான் அடிக்கட்டுமா?” என்று சன்னதம் வந்ததைப் போல கத்திவிட்டு பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை வெளியே எடுத்தேன்.

“எதுவா இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் ரமேஷ். எதுவும் பண்ணிராத”  என்று சமாதானப் படுத்தும் தொனியில் கூறினார்.

“நான் சும்மா எல்லாம் சொல்லல டா கூதி. இதோ பாரு என்று  999க்கு டயல் செய்து” போனின் திரையை அவனை நோக்கிக் காண்பித்தேன்.

அவருக்கு வெட வெடவென்று ஆகி, அந்தக் குளிரிலும் வியர்த்துவிட்டது.

“ஃபோனை முதலில் கட் பண்ணு ரமேஷ். பிளீஸ்…” என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் அழைப்பு ஏற்கப்பட்டு “ஹலோ, மாலை வணக்கம். தங்களுக்கு நான் எவ்வாறு உதவலாம்” என்று ஒரு பெண் கேட்க ஆரம்பித்து விட்டாள்.

தீபனுக்கு இன்னும் நன்கு வியர்த்து முகம் முழுதும் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக பூத்து விட்டிருந்தது. அப்படியே கை கூப்பி “உனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன். ஃபோனை முதலில் கட் பண்ணு ரமேஷ்” என்று மெல்லிய குரலில் கெஞ்சினார்.

அந்தப் பக்கம் “ஹலோ… ஹலோ… யூ தேர்” என்று அந்த பெண்மணி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாள். இனியும் தீபனிடம் விளையாட வேண்டாம் என்று  ஃபோனைத் துண்டித்து விட்டேன்.

கீழே கவுண்ட்டரை சுத்தம் செய்ய வைத்திருந்த கிச்சன்-டவல் ரோலில் இருந்து இரண்டு மூன்று பேப்பர்களை கிழித்து எடுத்து தன் முகத்தைத் துடைத்துவிட்டு “ஏன் அப்பன், சும்மா விளையாட்டுக்கு தானே தர மாட்டேன் என்று சொன்னேன். நீ என்னடா என்றால் நிஜமாகவே போலீஸுக்கு அடித்துவிட்டாய்.  ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருந்தால் என்ன ஆவது?  உனக்கு இப்ப என்ன வேண்டும்? பேசியபடி 1500 பவுண்டு தானே? இதோ இப்போதே வாங்கிக்கொள்” என்று கூறிவிட்டு வேக வேகமாக கவுண்ட்டரைத் திறந்து கொத்தாக பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தார்.

999லிருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. நான் ஃபோனை எடுக்காமல் தொடர்ந்து சைலன்ட்டில் போட்டுக்கொண்டேயிருந்தேன்.

“இந்தா ரமேஷ். இதில் 1500 பவுண்டு இருக்கிறது. இப்போ சந்தோஷம் தானே.” என்று பணத்தை நீட்டினார்.

பணத்தைக் வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு “சரிங்க. நான் கிளம்புறேன்”  என்றேன்.

“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு ரமேஷ். நானே பஸ் ஸ்டேஷனில் ட்ராப் பண்றேன்” என்று என்றைக்கும் இல்லாத கரிசனத்தோடு கேட்டார்.

“ஒன்னும் பிரச்சனை இல்லைங்க. அப்படியே நடந்து போய்க்கிறேன்” என்று மறுத்துவிட்டு புறப்பட எத்தனித்தவனிடம் “சரி, இந்த வைன் பாட்டிலையாவது எடுத்துக்கொண்டு போ” என்று அன்பொழுக நீட்டினார். 

நான் பேண்ட் பாக்கெட்டிலிருந்து இருபது பவுண்டு தாள் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“ச்சே ச்சே… பணமெல்லாம் வேண்டாம் ரமேஷ். நீ எடுத்துட்டு போ” என்று பல்லைக் காட்டினார்.

“சரிங்க வர்றேன்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

குளிர் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தது. “முதலில் ஊரில் வாங்கி வந்த இந்த ஜாக்கெட்டை ஒழித்துக் கட்டிவிட்டு, இந்த ஊர் குளிரைத் தாங்குவது போல ஒரு நல்ல ஜாக்கெட்டை வாங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மீண்டும் 999ல் ஃபோன் வந்தது.

ஒரு கையிலிருந்து கையுறையை அகற்றிவிட்டு ஃபோனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்…