நாலைந்து தினங்களுக்கு முன்பு அத்தியாயம் 85, 86, 87 ஆகிய மூன்றையும் பிஞ்ஜுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. பொதுவாக தமிழ் ஜனரஞ்சக இதழ்களில் பிரச்சினைக்குரிய எதையும் வெளியிட மாட்டார்கள். நான் நினைத்தது போலவே நேற்று மாலை பிஞ்ஜ் நவீனிடமிருந்து போன். கொஞ்சம் மாற்றித் தருகிறீர்களா? மாற்றித் தர இயலாது, அப்படியே அதை வெட்டி ஒட்டித் தருகிறேன் என்றேன். பிரச்சினைக்குரிய பகுதிகளில் கத்தரி போட வேண்டியதுதான். வேறென்ன? ஆனால் அந்தப் பகுதிகள் புத்தகமாக வரும் போது இருக்கும். காரணம், நான் ஒருபோதும் உயிருக்குப் பயந்தவன் அல்ல.
பிரச்சினை என்ன என்றால், ஔரங்கசீப்பும் எழுத்தாளனும் முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுவார்கள். மற்றபடி மத ரீதியான விஷயங்கள் அல்ல. மனிதர்களின் எந்த மத நம்பிக்கையையும் கிண்டல் செய்வதோ, இழித்துப் பேசுவதோ எனக்குப் பிடிக்காது. மறுக்கலாம். தவறில்லை. அது கருத்துச் சுதந்திரம். ஆனால் சல்மான் ருஷ்டி போல இழித்துப் பேசலாகாது. அது கருத்துச் சுதந்திரம் அல்ல. அல்லது, அந்த அளவு சுதந்திரமாக வாழும் அளவுக்கு உலகம் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
என் நாவலில் இருந்த பிரச்சினை அரசியல் ரீதியானது. முள்ளிவாய்க்கால் என்றதுமே உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் அதில் நான் ஒன்றும் இல்லாத எதையும் எழுதிவிடவில்லை. ஷோபா சக்தி எழுதியிருப்பதில் நூற்றில் ஒரு மடங்குதான் எழுதியிருப்பேன்.
நவீன் ஃபோனுக்குப் பிறகு ஷோபா சக்தியிடம் பேசி மூன்று அத்தியாயங்களையும் அனுப்பினேன். ஒரே ஒரு விவரப் பிழை தவிர மற்றபடி இதில் ஆட்சேபணைக்குரியதாக எதுவும் இல்லையே என்று நள்ளிரவில் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.
நாவல் புத்தகமாக வரும்போது இப்போது நீக்கப்பட்ட பகுதிகளும் சேர்ந்து வரும். என் ப்ளாகைப் படிப்பவர்கள் பிஞ்ஜ் படிப்பதில்லை என்பதால் ப்ளாகில் வெளியிடுவதில் பயன் இல்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இதை விடவும் கடுமையாக தளத்தில் எழுதியிருக்கிறேன். அதை சிலாகித்து ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.
விரைவில் புத்தகமாக வரும். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் புத்தகம் வரும். பதிப்பகத்தில் எதுவும் தடை இருக்காது. ஏனென்றால், புத்தகத்தில் உள்ள கருத்துகள் எழுத்தாளருடையதுதானே?