சொற்கடிகை – 4

Ayn Rand என்று ஒரு எழுத்தாளர்.  ஏன் ”என்று” போட்டேன் என்றால் எனக்கு என்றுதான்.  நான் அவர் பெயரை ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனிடமிருந்து மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவர் அயான் ராண்டின் தீவிர ரசிகர்.  ஆனால் அயான் ராண்ட் ஆணா பெண்ணா என்று கூட எனக்குத் தெரியாது.  இப்போதுதான் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது கூகிளைப் பார்த்து அவர் பெண் என்று அறிகிறேன்.  ஆனால் ராண்டின் ஃபவுண்டன்ஹெட் நாவல் பற்றிப் பல ருசிகரமான தகவல்களை ராகவன் சொல்லிக் கொண்டேயிருப்பார். கேட்பதற்குப் பிரமாதமாக இருக்கும்.  படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்.  தீர்மானமாக மறுத்து விடுவேன்.  இலக்கியத்துக்கு வெளியே இருக்கும் எந்தக் கதைப் புத்தகத்தையும் படிப்பதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன்.  நேரம் இல்லை என்பது மட்டுமே காரணம். 

ஃபவுண்டன்ஹெட் நாவலில் பணம் பற்றிப் பேசப்படும் விஷயங்களை அப்படி அப்படியே ஒரு சொல் மாறாமல் நான் பேசுகிறேன் என்பார் ராகவன்.  காரணம் இதுதான்:  நான் பணத்தை மதிக்கிறேன். 

பொதுவாக எழுத்தாளர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள்.  நான் அதில் வித்தியாசம்.  பணத்தை மதிக்கிறேன்.  ஆனால் பணம் சம்பாதிக்கும் வழிகளில் நான் ஈடுபட மாட்டேன்.  எனக்கு அதற்குத் தேவையான நேரமோ பொறுமையோ இருந்ததில்லை.  இப்போது என்று இல்லை.  எப்போதுமே அப்படித்தான்.  சம்பாதிப்பதாக இருந்தால் கோடி கோடியாக சம்பாதித்து இருக்கலாம்.  அதற்கான வாய்ப்புகள் முன்பு இருந்தன.  என் நண்பர் ஒருவர் கோடீஸ்வரர்.  அப்போதே அறுபது எழுபது லட்சம் ரூபாய் கார் எல்லாம் வைத்திருந்தார். இப்போதைய கார் விலை ஒன்றரை கோடி.  என்ன கார் என்று கேட்டால் ஏதோ மசுராட்டி கிசுராட்டி என்று அசிங்கமான பெயர்களைச் சொல்வார்.  ஆனால் கார் பார்க்க கஜகஜா என இருக்கும். சாலைகளில் செல்லும் போது ட்ராஃபிக்கில் நின்றால், பக்கத்தில் நிற்கும் பைக்காரர்கள் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கான கார் எல்லாம் வைத்திருப்பார். 

அவரும் நானும் வாடா போடா நண்பர்கள்.  பணம் சம்பாதிக்க என்னைப் பயன்படுத்திக் கொள் என்பார். வெறுமனே அவர் பெயரைப் பயன்படுத்தியே லட்சம் லட்சமாக சம்பாதித்தவர்கள் எங்கள் நட்பு வட்டத்திலேயே இருக்கிறார்கள்.  அதெல்லாம் வேறு மாதிரியான நட்பு வட்டம்.  என் மனநிலை அதற்கு ஒத்து வராது.  நீங்கள் ஒரு பண்ணை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் உங்களுக்குப் பணம் வருகிறதோ இல்லையோ, மிகுந்த மன நிம்மதியோடு வாழ்கிறீர்கள்.  உங்களை அழைத்து ஒரு அலுவலகத்தில் சி.இ.ஓ.வாக இரு, மாசம் பத்து லட்சம் சம்பளம் என்றால் இருப்பீர்களா?  நான் மாட்டேன்.  எனக்கு என் பண்ணை சொர்க்கம்.  பணத்துக்காக சொர்க்கத்தை இழக்க மாட்டேன். 

எனக்கு எழுத்து சொர்க்கம்.  பணம் சம்பாதிப்பதற்காக அதை விட்டுக் கொடுக்க முடியுமா என்று நண்பரிடம் கேட்பேன்.  நண்பர் அமைதியாகி விடுவார்.  நான் சொல்வது அவருக்குப் புரியும் என்பதால்.  என்னைப் பார்த்து எப்போதுமே பொறாமைப்படும் கோடீஸ்வரர் அவர் ஒருவர்தான். 

ஆனாலும் எனக்குத்தான் பணம் கோடிக்கணக்கில் தேவைப்படுகிறது.  பயணத்துக்காக.  அதை விடுங்கள்.  சமீபத்தில் பணம் பற்றி நானும் சீனியும் பேசிக் கொண்டிருந்தோம். 

பணம் சம்பாதிப்பவர்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு என்றேன்.

ஆச்சரியப்பட்டார்.  ஏனென்றால், நான் என்னை துறவு நிலையில் இருப்பவன் என்கிறேன்.  எனக்கு எப்படிப் பணத்தின் மீதும், பணக்காரர்கள் மீதும் மரியாதை இருக்க முடியும்?

பணம் ஈட்டுவதற்காக ஒருவர் தன் குடும்பத்தையும் குழந்தை குட்டிகளையும் விட வேண்டியிருக்கிறது.  அவர்களோடு நேரம் செலவு செய்ய இயலாது.  எப்போதும் வெளியிலேயே இருக்க வேண்டும்.  பல செல்வந்தர்களின் பிள்ளைகள் தங்கள் தந்தையைப் பார்த்துப் பழகியதே இல்லை, பேசியதே இல்லை.  அம்மா, அப்பா இருவருமே பெரிய ஆள் என்றால் பிள்ளையின் நிலை அதோ கதிதான்.  நம்முடைய சஞ்சய் தத் கதை அதுதான். 

ஆக, குடும்பத்தை இழக்க வேண்டும்.  சுரணையுணர்வை இழக்க வேண்டும்.  சுரணை இருந்தால் கோபம் வரும்.  கோபம் வந்தால் பண பிஸினஸுக்கு ஆகாது. 

அடுத்து, மூளைக்கும் பணத்துக்கும் ஆகாது.  நான் இதுவரை ஒரு புத்திசாலி பணக்காரரைக் கூட பார்த்தது இல்லை.  புத்தி இருந்தாலும் வெளியே கிளம்பும் போது அதை வீட்டிலேயே பத்திரப்படுத்தி விட்டுத்தான் வர வேண்டும்.  விஜய், அஜித் படம் பார்ப்பது மாதிரி. 

அடுத்து, உங்களுடைய சுக துக்கங்களை தியாகம் செய்ய வேண்டும்.  உங்களுக்காக வாழவே முடியாது.  இப்போது உங்களுக்கு சுவிட்ஸர்லாந்து போக வேண்டும்.  பணம் இருக்கும்.  போக முடியாது.  உங்கள் நேரம் உங்கள் வசம் இல்லை.  வாழ்நாள் பூராவும் பணத்துக்காக வாழ வேண்டுமே தவிர உங்களுக்காக ஒரு நொடியும் வாழ முடியாது.  

இப்படிப்பட்ட தியாகிகளாக இருப்பதால்தான் எனக்கு செல்வந்தர்கள் மீது மரியாதை ஏற்படுகிறது.  என்ன இருந்தாலும் தியாகிகள் மீது நமக்கெல்லாம் ஒரு தனி மரியாதை உண்டுதானே?

அப்படி ஒரு பணம் படைத்த நபரை – அல்லது, அப்படி சொல்லிக் கொண்ட நபரை பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன்.

சிவகுரு என்று நாமம் சூட்டுவோம்.  முதல் சந்திப்பு சுமுகமாக முடிந்தது.  பொதுவாக பணக்காரர்களுக்கும் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம்.  ஆனால் இவரோ என் எழுத்தைக் கரைத்துக் குடித்திருந்தார்.  ஆஹா, ஆஹா!  அதனால் என்னுடைய சீலே கனவு பற்றி அவருக்கு நன்கு தெரியும். 

இரண்டாம் சந்திப்பில் சொன்னார், பாஸ், சீலே என்ன, உலகமே சுற்றி வாருங்கள், தேவையான பணத்தை நான் தருகிறேன்.

(என்னை பாஸ் என்று அழைக்கும் மூன்று பேரில் சிவகுருவும் ஒருவர்.  மற்ற இருவர், தருண் தேஜ்பால், இறையன்பு)

கடவுளே என் முன்னால் தோன்றி நான் கடவுள் என்று சொன்னால் மற்றவர்களைப் போல் எந்தப் படத்தில் நடிக்கிறாய் என்று கேட்காமல், உடனே கடவுள் என்று நம்பி விடுவேன்.  நான் அந்த மாதிரிப் பேர்வழி என்றாலும், யாராவது இப்படி எனக்குத் தொடர்ந்து பணம் தருகிறேன் என்று சொன்னால் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவேன்.  ஏனென்றால், பணத்துக்கும் மனிதர்களுக்குமான உறவு அப்படி.  பலரும் பணத்தைத் தங்கள் கணவர் போலவோ, மனைவி போலவோதான் கருதுகிறார்கள்.  என் பணம் எனக்கு மட்டும்தான்.  அதன் காரணமாக, சிவகுரு ”உங்கள் உலகப் பயணத்துக்குத் தேவையான பணத்தை நான் தருகிறேன்” என்றதும் நான் நம்பவில்லை. 

நான் ஒரு ஹெடோனிஸ்ட் என்பது என் எழுத்தில் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் தெரியும்.  இருந்தாலும் பண விஷயத்தில் மட்டும் நான் காளையன் மாதிரி.  ஆரண்ய காண்டம் படத்தில் அந்தப் பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.  நமக்கு நல்லதே நடக்காது, நம் வாழ்வே பெரும் அவலம் என்று நினைக்கும் ஒரு அழுவாச்சி காளையன்.  ஏதோ நல்லது நடக்கிறாற்போல் இருந்தால் மகனிடம் “நமக்கு எங்கடா நடக்கப் போவுது?” என்று ஒரு பிலாக்கணம் போட்டு விடுவார்.  அப்படி அழுதும் அவருக்கு ஒரு நல்லது நடந்து விடும்.  “இப்போ பாத்தியா?” என்று அவர் மகன் அப்பன் காளையனை ஒரு முறை முறைப்பான்.  “டேய் கோச்சுக்காதடா, நடக்காது நடக்காதுன்னு சொல்லிட்டே இருந்தாதான் நடக்கும்” என்பார் காளையன்.

நான் பண விஷயத்தில் மட்டும் காளையன் மாதிரி.  காரணம், மூன்று ஜோதிடர்கள்.  வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்தவர்கள்.  மூவருமே வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் என்னைப் பற்றி எதுவும் தெரியாது.  என் கடந்த கால வாழ்க்கையோ கடும் திருப்பங்களுடன் கூடிய ஒரு திகில் நாவல் போன்றது.  சொன்னால் பல நண்பர்கள் நம்பக் கூட மாட்டார்கள்.  ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பார்க் ஷெரட்டன் வெஸ்ட் மின்ஸ்டர் பாரில் வாரம் இரண்டு முறை மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து மூன்றரை வரை எழுதுவேன், சரக்கு அடிப்பேன், சாப்பிடுவேன்.  என் கோடீஸ்வர நண்பரின் அக்கவுண்டில் எழுதிக் கொள்வார்கள்.  மற்ற தினங்களில் அழுகல் தக்காளி சாப்பிட்டு உயிர் வாழ்வேன். சாப்பிடக் கூட காசு இருக்காது.

அந்த மூன்று ஜோதிடர்களும் என்னுடைய நம்ப முடியாத கடந்த காலத்தை மிகச் சரியாக கணித்தார்கள்.  பலரும் சொல்வார்கள், திறமையான ஜோதிடர்கள் கடந்த காலத்தைக் கணிப்பார்கள், ஆனால் எதிர்காலத்தில் கோட்டை விட்டு விடுவார்கள் என்று.  இந்த மூவரும் எதிர்காலத்தையும் சரியாகவே கணித்தார்கள்.  உதாரணமாக, என் நாற்பத்து மூன்றாவது வயதில் திருநெல்வேலியில் வைத்து ஒரு தச்சர் அடுத்த மாதம் உங்களுக்குத் திருமணம் என்றார்.  தச்சு வேலையோடு ஜோதிடமும் செய்தார்.  அது மார்ச் மாதம்.  அடப் போங்க பிரதர் என்று வந்து விட்டேன். ஏனென்றால், உயிரே போனாலும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சத்தியப் பிரமாணம் செய்திருந்தேன்.  ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக சத்தியத்தைக் கைவிடும்படி நேர்ந்தது. ஜோதிடர் சொன்னது போலவே ஏப்ரல் இரண்டாம் தேதி திருமணம். 

ஏன் பண விஷயத்தில் மட்டும் காளையன் மாதிரி இருக்கிறேன் என்றால், கடந்த காலம் எதிர்காலம் இரண்டையுமே சரியாக கணித்த மூன்று ஜோதிடர்களுமே பிற்காலத்தில் எனக்குப் பணம் கொட்டும் என்றார்கள்.  என்னை குஷிப்படுத்த வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.  அவர்கள் சொன்னது சுத்தமாக நடக்கவில்லை என்பதால்தான் காளையன் மாதிரி ஆகி விட்டேன்.

இந்தப் பின்னணியில் சிவகுருவை நான் எப்படிப் பார்ப்பேன்?

சிவகுரு மேலும் சொன்னார்.  மாதாமாதம் முப்பதாயிரம் தருகிறேன்.  ஆறு மாதம் சேர்த்தால் கூட ஒரு நாடு.  இப்படி என் உயிர் இருக்கும் வரை தருவேன். 

அவருக்கோ அப்போது முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.  அந்த இளம் வயதில் இப்படி ஒரு வாக்குக் கொடுத்தால் என்ன ஆவது?  ஆனால் என் வயது (அப்போது) ஐம்பத்தைந்து.  அதனால் சிவகுரு கொஞ்சம் ஆசுவாசம் அடையலாம். 

”வார்த்தையை விடாதீர்கள் சிவகுரு, யோசித்துச் சொல்லுங்கள், மேலும், சீலே செல்வது என் வாழ்நாள் கனவு.  தயவுசெய்து என் கனவில் விளையாடி விடாதீர்கள், பெரும் பாவம் வந்து சேரும்” என்றேன்.

இந்த உரையாடல் நடந்தபோது பத்து பேர் உடன் இருந்தார்கள்.  வாசகர் வட்டச் சந்திப்பு. 

”அதையெல்லாம் யோசித்துத்தான் பாஸ் இந்த முப்பதாயிரம் தருகிறேன்.”

எப்படிக் கொடுப்பீர்கள் என்று அவர் வேலை விவரம் எல்லாம் கேட்டேன்.

அவர் வேலையிலேயே இல்லை என்றார்.  சேர்த்து வைத்துள்ள பணமே மூன்று தலைமுறைக்குப் போதும் என்று சொல்லி தகுந்த ஆதாரமும் காண்பித்தார்.   

அந்தக் காலகட்டத்தில் முப்பதாயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சத்தைப் போல. 

“இதோ பாருங்கள் சிவகுரு, சும்மா விளையாட்டுக்கு சொல்லி விட்டு கொடுக்க முடியவில்லை என்றால் அது உங்கள் பாவக் கணக்கில் சேர்ந்து விடும்.  அதனால் நீங்கள் அவ்வளவு பணம் தர வேண்டாம்.  மேலும், மாதம் முப்பதாயிரம் என்பது எனக்கு நம்பக் கூடியதாக இல்லை.  மாதம் ஐந்தாயிரம் கொடுங்கள், போதும்” என்றேன். 

”அதெல்லாம் முடியாது.  இந்தாருங்கள் முதல் முப்பதாயிரம்” என்று சொல்லி பணத்தை வைத்து விட்டார். 

அடுத்த மாதமும் சொன்னாற்போல் வந்து விட்டது.

மூன்றாவது மாதம் இருபதாயிரம்.  நான்காவது மாதம் பத்தாயிரம்.  அதோடு சரி.  பண வரத்து நின்று விட்டது. 

சிவகுருவும் காணாமல் போய் விட்டார். 

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai