சொற்கடிகை – 15

ஸீரோ டிகிரி நாவல் வெளிவந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.  அந்தப் புத்தகம்தான் தினமும் அதிகம் விற்கிறது.  நேற்று ஒரு பதின்பருவத்து இளைஞன் அந்த நூலில் கையெழுத்து வாங்கினான்.  நான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ”புத்தக விழாவுக்குப் போனால் நீ எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கு, ஆனால் அந்த ஸீரோ டிகிரியை மட்டும் வாங்கவே வாங்காதே என்றார்கள் என் அம்மா, அதனாலேயே இதை வாங்குகிறேன்” என்று சத்தமாகச் சொன்னான் அந்தப் பையன். 

என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். 

ப்ளஸ் ஒன் என்றான். 

நம் நாவலுக்கு எப்படியெல்லாம், யார் யாரெல்லாம் விளம்பரம் கொடுக்கிறார்கள் பாருங்கள். 

பதினாறு வயதுப் பையன் ஸீரோ டிகிரி படிக்கலாமா என்ற சம்சயம் உண்டானது எனக்கு.  அப்புறம் எக்ஸைல் நாவலை 18 வயதில் மொழிபெயர்த்த சூஸானா மரியன் கொரேயா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் ஞாபகம் வந்தது.  அப்போது சூஸானா கல்லூரி முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார்.  அவரிடம் நான் எக்ஸைலை மொழிபெயர்க்க வேண்டுமானால் மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) மற்றும் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) இருவரையும் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்றேன்.  அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே படித்து விட்டதாகக் கூறினார்.  மட்டுமல்லாமல் இருவரையும் பற்றி என்னிடம் மணிக்கணக்கில் விவாதித்தார். 

இதுவரை ஒரே ஒரு ஃப்ரெஞ்ச் பேராசிரியர்தான் அப்படி என்னிடம் விவாதித்திருக்கிறார்.  இந்தியர் அல்ல.  ஸோர்போனில் தத்துவம் பயிற்றுவித்துக் கொண்டிருந்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரர்.  ஃபூக்கோவின் மாணவர்.  அவரைத் தவிர இதுவரை என் வாழ்நாளில் மார்க்கி தெ ஸாத் மற்றும் ஜார்ஜ் பத்தாய் ஆகியோரை என்னிடம் விரிவாக விவாதித்தவர் யாரும் இல்லை. 

சிலர் இங்கே படித்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.  ஆனால் நான் அவர்களோடு விவாதிக்க நேர்ந்தது இல்லை. 

சூஸானா மாதிரி சில இளம் வயது புத்திசாலிகள் இருக்கக் கூடும்.  அப்படி ஒரு பையன் போல அவன் என்று நினைத்துக் கொண்டேன்.  அல்லது, படித்த பிறகு தன் தங்கை கல்லூரிக்குச் செல்லும் போது ஸீரோ டிகிரியைப் படிக்காதே என்கிறானோ என்னவோ.

இன்று ஒரு சம்பவம்.  ஆயுளில் பாதியைத் தருவதாகச் சொன்ன பெண் கணவருடன் ஸீரோ டிகிரி அரங்கில் இருந்தார்.  வாங்கிய ஆறு புத்தகங்களில் இரண்டில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்.  மீதி நான்கும் அராத்து.  என்ன இது அநியாயம் என்று வாய் விட்டுச் சொல்லி விட்டேன் போல.

”அராத்துவை என் சிநேகிதனைப் போலவும் உங்களை என் பிரதி பிம்பத்தைப் போலவும் காண்கிறேன்.  இன்னும் சரியாகச் சொன்னால், அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.  உங்களிடம் என்னை அடையாளம் காண்கிறேன்.  ’மற்றவர்கள் சொல்வது போல் நான் ஒன்றும் பைத்தியம் இல்லை, என்னைப் போல் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கை எனக்கு உங்கள் எழுத்தில் மட்டுமே கிடைத்தது.  மற்றவர்களின் எழுத்து என்னைத் தாழ்வு மனப்பான்மையிலும் குற்றவுணர்விலும் தள்ளி என்னை மிகக் கடுமையான மனநோய்க்குள் ஆழ்த்துகிறது.  உங்கள் எழுத்து எனக்கு அவ்வகை நோய்மையிலிருந்து விடுதலையை அளிக்கிறது” என்று சரமாரியாக ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினார். 

என்ன படித்திருக்கிறீர்கள் என்று தயக்கத்துடன் கேட்டேன். 

கடிதத்திலேயே எழுதியிருந்தேனே, ப்ளஸ் டூ. 

எந்த ஸ்கூல்?

நீங்கள் கேட்பது புரிகிறது.  தமிழ் மீடியம்.

அப்படியா, பிறகு இவ்வளவையும் எங்கே கற்றீர்கள்?

அதற்கு அந்தப் பெண் பதில் சொல்வதற்குள் அவர் கணவர் முந்திக்கொண்டு, “உங்களிடமிருந்துதான் சார்; எத்தனையோ முறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றார். 

இன்று இது போதும் என்று கிளம்பி விட்டேன்.