எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விடுகிறேன். தொகுப்பில் எதைச் சேர்க்கலாம், எதை விடலாம் என்பதை நண்பர்களின் பொறுப்பில் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். காதல் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை மட்டும் தவிர்த்து விடுகிறேன்.
கே: தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
மூர்த்தி கமல்
யாருக்கும் நான் அறிவுரை கூறுவதில்லை. ஆனாலும் நீங்கள் கேட்டு விட்டதால் சொல்கிறேன்.
இப்படி அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் இப்படி குட்டிச்சுவராகக் கிடக்கிறோம்.
யார் பேச்சையும் கேட்காதீர்கள். குறிப்பாக பெற்றோர் பேச்சை. நண்பர்கள் பேச்சை. சுருக்கமாகச் சொன்னால், உங்களை விட வயதானவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். கணவன் மனைவி பேச்சை கணவன் கேட்கக் கூடாது. கூடவே கூடாது. மனைவி கணவன் பேச்சைக் கேட்கக் கூடாது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம். அதுதான் சாரு சொல்லி விட்டாரே என்று என்னை மேற்கோள் காண்பித்து மாட்டி விடாதீர்கள், மாட்டிக் கொள்ளாதீர்கள்.
இப்படி யார் பேச்சையும் கேட்காவிட்டால் அப்புறம் யார்தான் வழிகாட்டுவது என்ற குழப்பம் இருந்தால் உங்கள் மனசாட்சியையே துணைக்கு அழையுங்கள். அது நிச்சயம் உதவும்.
இன்னொரு அடிப்படையான விஷயம், இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்தால் இப்படிப்பட்ட கேள்விகளே நம்மை விட்டு அகன்று விடும். அல்லது, நமக்குள் எழாது.