எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் பாலா என்று ஒரு ஆள் வருவார். மார்கிஸிஸ்ட் புத்திஜீவி. அந்த ஆள் நாவலின் கதைசொல்லியான சூர்யாவிடம் ஒரு பண்ணையார் போல் நடந்து கொள்வார். அம்மாதிரி என் நண்பர் ஒருவரிடம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் நடந்து கொண்டார். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். பண்ணையார்த்தனமெல்லாம் காட்டினால் விலகி விடுவேன். விலக்கி விடுவேன். நிலப்பிரபுத்துவப் பண்ணையார்த்தனத்துக்கெல்லாம் என்னிடம் மன்னிப்பே கிடையாது. என்ன ——க்கு இவர்கள் ஃபூக்கோ —————-யையெல்லாம் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மூத்த எழுத்தாளர்கள் யாரிடமும் நான் இந்தப் பண்ணையார்த்தனத்தை ஒருபோதும் கண்டதில்லை. கேள்விப்பட்டது கூட இல்லை.
குறிப்பிட்ட எழுத்தாளரை ஃபேஸ்புக் போன்ற எல்லாவற்றிலும் ப்ளாக் பண்ணி விட்டு என் கைபேசியிலும் ப்ளாக் பண்ணினேன். அவரை புத்தக விழாவில் சந்திக்க நேர்ந்தது. பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நேருக்கு நேர் பார்த்து, என்ன சாரு, உங்களுக்கு ஃபோன் பண்ணினா போகவே மாட்டேங்கிறது என்று கேட்டால் – அதிலும் பலர் எதிரில் – எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? ஏதோ என் ஃபோனில் கோளாறு போல என்று சொல்லிச் சமாளித்து விட்டேன்.