ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தக விழாவில் ஒரு நண்பர் குடிக்க அழைத்தார். இதுவே நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால் யோசிக்காமல் சென்றிருப்பேன். குடிக்கவும் பிடிக்கும். நண்பரும் பிடித்தமானவர். அடிக்கடி சந்திக்கக் கூடியவரும் இல்லை. இப்போது என் வாழ்க்கையே மாறி விட்டது என்று அவரிடம் சொன்னேன். அவருக்குப் புரியும்படி சொல்ல அங்கே இயலவில்லை. நான் குடிப்பது இல்லை. அது முதல் விஷயம். அப்படியே குடிப்பதாக இருந்தால் அந்த வைன் இங்கே கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் நான் செல்ல முடியாது. ஏனென்றால் ஞாயிறு மதியமே ஔரங்ஸேப் அத்தியாயம் போயிருக்க வேண்டும். நானோ தினமும் புத்தக விழாவுக்கு வந்து கொண்டிருந்தேன். வீட்டு வேலைகளை முடித்து விட்டு நான் எழுதும் நேரம் மூன்று மணியிலிருந்து பத்து வரை. அந்த நேரம்தான் நான் புத்தக விழாவில் இருந்தேன். அதனால் குடி போன்ற கொண்டாட்டங்களுக்கு இனி என் வாழ்வில் முன்பு போல் இடம் இல்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தினங்கள் வெளியூர் செல்வேன். அது ஒன்றுதான் வேலையிலிருந்து சற்றே வேறு பக்கம் பார்க்கும் நேரம். ஔரங்ஸேப் முடிந்தாலும் தியாகராஜா பிடித்துக் கொள்ளும்.