அதிகாரம் குறித்தும், அதைப் புரிந்து கொள்வதிலும், அதிலிருந்து எப்படி தப்பிக்க என்பது போன்றவற்றைக் குறித்து இங்கு பேசப்படும் பல செய்திகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருப்பவர் சாரு. இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் குறித்து மிக நுணுக்கமாக, மைக்ரோ லெவலில் உள் மனதளவில் உரையாடுவது சாருவின் எழுத்துக்களில் ஒரு அங்கம். எல்லோரும் அதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு அரசியல் அல்லது பொருளாதார அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என எடுத்துக் கொள்வோம். சாரு சொல்லும் அதிகாரம் என்பது நம் அனைவரிடமும் இருக்கும் ஒன்று. அதை எதிர்ப்பது அதைக் குறித்து உரையாடுவது சாருவின் எழுத்தில் இருக்கும் முக்கிய அம்சம்.
தாய் மகன் மீது செலுத்தும் அதிகாரம், காதலன் காதலி மீது செலுத்தும் அதிகாரம் எல்லாம், வெறும் ‘அதை செய், இதை செய்’ என்று வேலை வாங்குவது மட்டுமல்ல, ‘நான் விரும்பவதை நீ விரும்பு, நான் சொல்வதை சரி எனச் சொல்’ என்பது போன்ற அதிகாரம்தான் அது. சாருவைப் பொருத்தவரை அதிகாரம் என்பது இயக்கங்கள், பதவி, புகழ், அரசியல், ராணுவம், போலீஸ், பணம், சாதி, மதம் போன்ற கூட்டமைப்புகள் அல்லது கட்டுமானங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக நமக்குள் இருக்கும் அதிகாரம், நம் அனைவரிடமும் காணப்படும் ஒன்றுதான்.
ஏழை, நோயாளி, ஆண், பெண், கைதி, மாற்றுத்திறனாளி, தொழு நோயாளி, முதியவர்கள், விளிம்பு நிலை மனிதர்கள் என எல்லாரிடமும் இருக்கும் அடிப்படையான செயல் அடக்குவதும் / அடங்கிப் போவதுமே.
அன்பு மற்றும் காதல் மூலமாகவும் அதிகாரம் நிர்வகிக்கப்படுகிறது. திருமணங்கள், குடும்பம் என எல்லாமே அதிகார நிர்வாக அமைப்புகள்தான்.
வன்புணர்ச்சி முதல் பாலியல் அத்துமீறல் வரை பல குற்றங்களுக்கு, எல்லோரிடமும் இருக்கும் அடுத்தவரை அடக்க வேண்டும் என்கிற அதிகார உணர்வு காரணமாக இருக்கிறது. இந்த உணர்வு மிக அடிப்படையானது. ஆனாலும் அப்படிச் சொல்ல வருகின்ற பொழுது மிக எளிதாக குற்றங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுப்பது போன்ற நிலையிலிருந்து தப்பிக்க முடியாது. Catch 22 என சொல்லுவார்களே அப்படியானதொரு சொல்லும் சூழல்.
அதிகாரம் என்பது வெளியிலிருந்து வருவதில்லை நமக்குள் இருப்பதுதான். அதைப் பல வகைகளில் பயன்படுத்துகிறோம். ராணுவம் அதை ஒரு வகையில் வெளிக்காட்டுகிறது. கல்வி பெற்றவர்கள், எழுத்தாளர்கள் வேறு வகையில் வெளிக்காட்டுகிறார்கள். மேட்டுக்குடியினர் வேறு விதமாகக் காட்டுகிறார்கள். ஜெயிலர் காட்டுவது ஒரு வகை, சிறைக் கைதிகள் காட்டுவது ஒருவகை எனப் பல. இவற்றில் சில சமூகத்தால் சரி என்றும், சில தவறென்றும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வெறும் சரி / தவறு என்கிறப் புரிதலை மட்டுமே வைத்துக் கொண்டு, இப்படியான குற்றங்களற்ற சமூகத்தை நம்மால் படைக்க முடியாது.
மனிதர்களின் அதிகாரத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து பேசியும் உரையாடியுமே கண்டறிய முடியும். இதற்கு இலக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் பல்வேறுபட்ட அரசியல் கருத்து கொண்டவர்கள். பல்வேறு மத நம்பிக்கையாளர்களோடு பழகலாம், மிகவும் ஊள்ளார்ந்த நட்புணர்வையும் அன்பையும் அனுபவிக்கலாம். மிகவும் மதிப்பில்லாத குண நலன்களைக் கொண்ட நபர்களைச் சந்திக்கலாம். எல்லோரும் கடைசியில் நம்மிடம் கேட்பது நம் சிந்தனையைத்தான் – “நான் சொல்கிறேன் இது சரி, அதனால் அதை நீயும் சரி என ஒத்துக் கொள்” என்பதுதான். நான் ஆசான் / நான் குரு, நானே கடவுள் என்னிடம் நீ அடிபணிந்து நட என்பதைத் தான் பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறார்கள். அனைத்து மதங்களும் , கோட்பாடுகளும் இறுதியில் சொல்ல வருவதும் இதைதான்.
இப்படியான pressure எனக்கு வந்ததால் மெல்ல இப்படியான குழுக்களிடமிருந்து, இப்படியான நபர்களிடமிருந்து விலகிவிடுகிறேன். எந்த கூடாரத்துக்குள் சென்றாலும் அவர்கள் கடன் கேட்பது நம் தலைக்குள் இருப்பதைத்தான். ஆன்மீகமென்றாலும் சரி, அரசியல் கோட்பாடாக இருந்தாலும் சரி, இலக்கிய உலகமென்றாலும் சரி. எல்லோருக்கும் இது தேவைப்படுகிறது. மனிதர்கள் பிசாசோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள் என்கிற அடிப்படையை வைத்து பல ஐரோப்பிய கிறிஸ்துவக் கதைகள் உண்டு. இன்று வரும் பல கார்டூன்களிலும், அனிமேஷன் படங்களில் கூட அதைப் பார்க்க முடியும்.மாந்திரீகம் மூலம் பிசாசைத் தொடர்பு கொள்வார்கள், அதற்குக் காணிக்கைகள் பல அளிப்பார்கள், தவம் செய்வார்கள், முடிவில் எங்கள் ஆன்மாவை உனக்கு தருகிறேன் எனச் சொன்ன பிறகு அந்த மனிதருக்கு பிசாசு பல சக்திகளை அளிக்கும். இப்படி பல கதைகள் உண்டு. இப்படியான ஒப்பந்தத்தில் மிக முக்கியமான காரியம் – மனிதன் தனது ஆன்மாவை காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்பதுதான். இதேப் போல உடலை காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்கிற நம்பிக்கையும் உண்டு. ஆனாலும் இந்த ஆன்மா காணிக்கைத் தான் பிசாசுக்குப் பிடித்தமான ஒன்று. பிசாசுக்கும், கடவுளுக்கும் உடலையும் / ஆன்மாவையும் காணிக்கையாக்குவது என கதைகள் சொன்னாலும், அது அன்றாடம் நம் மத்தியில் நடந்து கொண்டிருப்பது தான். மனிதர்கள் தங்களின் சக மனிதர்களோடு நடத்தும் ஒப்பந்தங்கள் தான் அவை. நம்மிடம் இருக்கும் இந்த செயல்பாடுகளைதான் இப்படியான கதைகள் சொல்ல வருகின்றன. இப்படியானச் சூழலில் எந்த வகையிலும், நம் சிந்தனைகளையும், ஆன்மாவையும் ஹைஜேக் செய்யவிடாமல், How to be a Wild Soul என்பதுதான் சவால்.