சொன்னால் நம்ப மாட்டாய் நேற்று நீயென் கனவில் வந்தாய் இதோ இப்போதென் முன்னே தோன்றுகிறாய் கனவில் வருவதற்கு முன் உன்னைப் பற்றியெனக்கு எதுவுமே தெரியாது கேள்விப்பட்டதோடு சரி தற்செயல் நிகழ்வாயிருக்க சாத்தியமில்லை கனவில் எத்தனையோ வரும் போகும் ஒரு பிள்ளையார் எறும்பு வருமா அப்படியே வந்தாலும் மறுநாளே நேரில் தோன்றுமா அதை விடு நீ வெகுவேகமாய் எங்கோ செல்கிறாய் சற்றே கொஞ்சம் நின்று என்னுடன் சௌக்கியம் பேசு
என்ன அதிசயம் என்றால் உன் கூட்டாளிகள் இல்லாமல் தனியாகச் செல்கிறாய்
இப்போது உன்னைப் பார்க்கும்போது என் வாழ்நாள் பூராவும் நீ என்னோடு இருந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன் இருந்தும் இல்லாதிருந்திருக்கிறாய் அதனாலேதான் கனவில் தோன்றினாய்
உன் பேரில் இருக்கும் பிள்ளையார் யாரென்றறிவாயோ நீ ஆமாம் உனக்குக் கடவுள்கள் உண்டா
இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்கிறான் தத்துவவாதி ஆமாம் உங்களில் தத்துவவாதிகள் உண்டோ வேண்டாம் தத்துவம் இருந்தால் இன்னும் பலதும் இருக்கும் பாலியல் பலாத்காரம் வன்கலவி இருக்கும் இறைவன் இறைவி தீர்க்கதரிசி தேசம் போர் ஆயுதம் எல்லாம் இருக்கும் அதனால் தத்துவமும் வேண்டாம் அது கூடவே கொண்டு வரும் குருதி பலி கேட்கும் கோட்பாடுகளும் வேண்டாம்
என்ன, ஷேக்ஸ்பியர் இல்லாத பீத்தோவன் இல்லாத மோனாலிஸா இல்லாத உழைப்பாளி உலகம் உன்னுடையது அல்லது வேறேதும் இன்பங்கள் உண்டோ?
ஒன்று மட்டும் நிச்சயம் கண்ணே உனக்கும் எனக்கும் காமமுண்டு பசியுமுண்டு அதையும் தவிர நம்மை இணைக்கும் புள்ளி ஏதுமுண்டோ சொல்
ஆ, ஞாபகம் வந்து விட்டது அண்ட சராசர வாழ்வில் நீயெனக்கு அடுத்த வீட்டுக்காரன்
ஆமாம் தேன்சிட்டே நீ என் மேல் ஊர்ந்து செல்லும்போது உன் ஸ்பரிசத்தையே என்னால் உணர முடியவில்லை நீ ஓடுவதே ஏதோ காற்றில் தூசு துகள் பறப்பது போல் தோன்றுகிறது
தேன்சிட்டே தேன்சிட்டே ஓடி விடாதே ஒரு நிமிடம் நில் உன்னிடமொன்று கேட்க வேண்டும் என் நண்பன் என்னை மனநோயாளி என்கிறான்
தேன்சிட்டுக்கும் பிள்ளையார் எறும்புக்கும் வித்தியாசம் தெரியாதவனை வேறெப்படி அழைப்பதாம் என்கிறான்
பாரமற்ற உன்னை என்னை தேன்சிட்டை பிறகெப்படி அழைக்குமிவ் வுலகம்? | |