சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது. அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான். நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம். எல்லாவற்றிலுமே அப்படித்தான். உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும். மற்றபடி எல்லாம் குழம்புதான்.
கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த உயிர் நண்டுகளிடம் ”என் செல்லக் குட்டிங்களா, என் சாருவுக்காக உங்களைக் கொலை செய்கிறேன், என்னை மன்னியுங்கள்” என்று கை கூப்பி உருக்கமாகப் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதைக் கொன்று எனக்காக சமைத்தாள். அன்றிலிருந்தே உயிர்க் கொலை செய்து எதையும் உண்ணக் கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். மிகவும் கொடூரமாகக் கடந்த இரவு அது.
ஆனால் வலை நண்டை உண்ணலாம். அது வலையில் விழுந்து சிறிது நேரத்துக்கெல்லாம் உயிரை விட்டு விடும். நாம் வாங்குவது வெறும் உடல். வெறும் கறி.
சிறிய சைஸ் நண்டுதான் சுவை. பெரிய சைஸ் நண்டில் கறிதான் இருக்குமே ஒழிய சுவை இராது.
இப்போதும் நண்டு சாப்பிட்டு சில மாதங்கள் ஆகி விட்டபடியால் நண்பரிடம் நண்டுக் குழம்பு ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டேன். க்ரெஸெண்ட் அல்லது ஈரோடு அம்மன் மெஸ் ஆகிய இரண்டு உணவகங்களில்தான் வாங்க வேண்டும். வேறு எங்கே வாங்கினாலும் அது நன்றாக இருக்காது. அது நண்பருக்கும் தெரியும் என்பதால் வலியுறுத்தவில்லை.
நான் ஒரு gastronomer. உணவு எனக்கு மதம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு உணவுக்கு ஆப்பம் தேங்காய்ப் பால் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஊறியது. வயல் நத்தை, கருப்புப் பன்றி போன்றவற்றைக் கூட அவந்திகா எனக்காக சமைத்துக் கொடுத்திருக்கிறாள் (அப்போது) என்றாலும் ஆப்பம் இதுவரை ஒருநாள் கூட செய்ததில்லை. ஆப்பமும் அக்கார அடிசிலும் மட்டும் என்னிடம் கேட்கவே கேட்காதே என்று கல்யாணம் ஆன புதிதிலேயே சொல்லி விட்டாள். அந்தக் காலத்தில் சரவண பவனில் கூட ஆப்பம் தேங்காய்ப் பால் கிடைக்காது. இப்போது கிடைக்கிறது. ஆனால் தேங்காய்ப் பால் என்ற பெயரில் வெறும் சீனி கலந்த நீர்தான் தருகிறார்கள். வாசனைக்குக் கொஞ்சம் பன்னீர் மாதிரி தேங்காய்ப் பாலைத் தெளிக்கிறார்கள்.
அப்போது எங்கேயுமே ஆப்பம் தேங்காய்ப் பால் கிடைக்காது. ஆப்பம் பாயா கிடைக்கும். ஆப்பம் தேங்காய்ப் பால் கிடைக்காது. சைவ உணவகங்களில் ஆப்பத்தோடு ஸ்டியூ என்று ஒரு கண்றாவியைக் கொடுப்பார்கள். எனக்கு அதைக் கண்டாலே ஆகாது.
இரவு ஒன்பது இருக்கும். வீட்டுக்கு வந்த டிஜிபியிடம் சொன்னேன். பெண் டிஜிபி. பெண் என்பதால் தாய்மை உள்ளம் பொங்கியது. சாரு கேட்டு விட்டார், இன்று அவர் ஆப்பம் தேங்காய்ப் பால் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று உதவியாளரையும் என்னையும் அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். (டிஜிபியிடம் நான் சாதித்துக் கொண்ட ஒரே காரியம் அன்றைய தினம் ஆப்பம் தேங்காய்ப் பால் சாப்பிட்டதுதான்!)
கடை கடையாக ஏறி இறங்கினார் உதவியாளர். கடைசியில் பத்து மணிக்கு ஒரு அசைவ உணவகத்தில் ஆப்பம் தேங்காய்ப் பால் கிடைத்தது. நானும் டிஜிபியும் மட்டும் சாப்பிட்டோம். அவந்திகா அசைவ உணவகங்களில் சாப்பிட மாட்டாள்.
இன்று நண்டுக் குழம்பு என்பதால் சோறு ஒன்றரை ஆழாக்குக்கு பதில் இரண்டு ஆழாக்கு வைத்தேன். குழம்பு வந்தது. திறந்து பார்த்தால், வெளிர் மஞ்சளாக இருந்தது. நண்டுக் குழம்பு எப்படி வெளிர் மஞ்சளாக இருக்கும்? கடைசியில் பார்த்தால் அது நண்டுக் குழம்பு இல்லை. அண்டா புஜியா என்பார்கள் இல்லையா? முட்டையை உடைத்துப் போட்டு பொரித்தால் அண்டா புஜியா. முட்டைப் பொரியல். அப்படி இருந்தது நண்டுக் குழம்பு. லேசாக திரவமாகவும். சாப்பிட்டால் அசல் மனிதக் கழிவைப் போல் இருந்தது. ஒரே ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்து விட்டு குப்பையில் போட்டு விட்டேன்.
பொதுவாக நண்டை எப்படி சமைத்தாலும் சாப்பிடக் கூடிய ஆள் நான். நண்டு எப்படி சமைத்தாலும் நன்றாக இருக்கும். இதில் என்ன செய்திருக்கிறார்கள் என்றால், நண்டை அவித்து, அதன் உள்ளே இருக்கும் சதையை எடுத்து உப்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நேற்றுதான் ஆத்மார்த்தி யாரையும் சபித்து விடாதீர்கள் என்றார். இதற்கு நான் சபிக்காமல் என்ன செய்யட்டும்?
எங்கே வாங்கினது என்று கேட்டேன். ஸைத்தூன். வாழ்விலேயே நான் சாப்பிட்ட மிக மோசமான, அருவருப்பான நண்டுச் சமையல் இன்று வழங்கப்பட்டதுதான். ஆனால் தப்பு நம் பேரில்தான். ஸைத்தூன் ஒரு அறாபிய உணவகம். அங்கே பார்பெக்யூதான் நன்றாக இருக்கும்.
சீனி ஞாபகம் வந்தது. அவர் ஹைதராபாதில் இருந்தபோது நடந்தது. என்ன சாப்பிட்டீர்கள் என்றேன். பிரியாணி என்றார். எனக்கு பிரியாணி பிடிக்காது என்றேன். மேலும் சொன்னேன், நாகூர் பிரியாணி சாப்பிட்டு விட்டால் பிறகு நீங்கள் வேறு எங்கும் பிரியாணி சாப்பிட மாட்டீர்கள்.
பிறகு அவர் சொன்ன தகவல். ரெண்டு எக்ஸ்ட்ரா பீஸ் சொல்லியிருக்கிறார். நாலு தொடைகளை வைத்து அனுப்பியிருந்தார்களாம். கண் கலங்கி விட்டது என்றார். வெளியூர்களில் வாடிக்கையாளர்களை அந்த அளவுக்கு கவனிக்கிறார்கள். இங்கே செருப்பால் அடித்து விரட்டுகிறார்கள். இங்கே எக்ஸ்ட்ரா பீஸ் என்று கேட்டால், காக்காய் காலை வறுத்து ரெண்டே ரெண்டு வைத்திருப்பார்கள்.
சென்னை பற்றி இந்த நகருக்குக் குடி பெயர்ந்துள்ள வெளியூர்க்கார எழுத்தாளர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதுவதைப் படித்திருக்கிறேன். சென்னை மாதிரி ஏமாற்று வேலை வேறு எந்த ஊரிலும் நடக்கும் என்று தோன்றவில்லை.
நானே பார்த்து ஆர்டர் கொடுக்கலாம். அது சம்பந்தமாக கடந்த நாலைந்து நாட்களில் நாலைந்து மணி நேரம் வீண் ஆனது.
சென்ற மாதம் ஒரு புதிய ஐஃபோனை வாங்கிக் கொடுத்தார் சிங்கப்பூர் சிவக்குமார். அதில் எல்லா கணக்கு வழக்குகளையும் ஏற்ற வேண்டும். ஸ்விக்கி, வங்கிக் கணக்குகள், இன்ன பிற. எனக்கோ எதுவும் தெரியாது. ஐஃபோனே என்னைப் போன்ற விவரம் தெரியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் என்பார்கள். ஆனால் அந்த ஐஃபோனே என்னிடம் தோல்வி. அதிலேயே எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
நானே செய்யப் பார்ப்பேன். பாஸ்வேர்ட், பாஸ்கோட் எல்லாம் கேட்கும். கொடுப்பேன். தப்பு என்று வரும். புதிதாக உருவாக்கினால், உன் ஃபோனுக்கு ஓடிபி வரும், அதைக் கொடு என்பான். எனக்கு ஓடிபி வந்திருக்காது. இப்படியே முட்டி முட்டிப் பார்த்து விட்டு, ஆரோவில் சென்ற போது சீனியிடம் கொடுத்து எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு பாஸ்வேர்ட் எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் ரகசியமாகக் குறித்து வைத்துக் கொண்டேன். (சென்னை திரும்பியதும் காகிதம் காணவில்லை, பாஸ்வேர்ட் விவகாரங்களும் பூரணமாக மறந்து விட்டது.)
ஒரு பேரழகி என்னிடம் முன்பு ஒருமுறை ஐஃபோனுக்கு எவனாவது கவர் போடுவானா என்று கேட்டதால், இந்தப் புதிய ஐஃபோனுக்குக் கவர் போடவில்லை. ஃபோன் அப்படியே ஜொலித்தது. ஐடியா சொன்ன பேரழகியும் கவர் போட்டிருக்கவில்லை என்பதை கவனித்திருந்தேன்.
ஒருநாள் ஃபோன் அரை அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த போது ஃபோனின் வெளிப்புறம் கண்ணாடி சில்லு போல் நொறுங்கி விட்டது. ஐஃபோன் கடைக்குக் கொண்டு போனேன். இன்ஷூரன்ஸ் செய்திருக்காதபடியால் 40000 கொடுத்தால் புதிய கவர் போடுவோம் என்றான். 40000 போட்டு புதிய கவர் போட்டேன். இந்த முறை மறக்காமல் பாதுகாப்புக் கவசமும் போட்டுக் கொண்டேன். அது தனியாகப் பத்தாயிரம்.
வந்து பார்த்தால் பழைய கணக்கு வழக்குகள், தொடர்புகள் எதுவுமே இல்லை. இது வேறு ஃபோன். நானே எல்லாவற்றையும் போடப் பார்த்தேன். எல்லா பாஸ்வேர்டும் தப்பு. புதிதாக உருவாக்க முயன்றால், ஓடிபி வரவில்லை. அடுத்து சீனியைப் பார்த்து எல்லாவற்றையும் புதிதாகப் போடும் வரை நண்பர்களைத்தான் நம்பியிருக்க வேண்டும். என் வட்டத்திலேயே ஸ்ரீராம்தான் பசையாக இருந்திருக்க வேண்டும். பல டாக்டர்கள் தினப்படி லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஸ்ரீராம் மகாத்மா வாரிசு. ஏழை டாக்டர். இருந்தும் எனக்காக ஏதாவது ஆர்டர் பண்ணினால் காசு வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார். அதனால் அடிக்கடி அவரைக் கேட்க முடியாது. அதனால் எப்போதும்போல் அன்னபூர்ணிதான்.
மதியம் பட்டினி. நண்டு குடலைப் பிடுங்கும் நாற்றம். கொடூரமான வயிற்று வலி. இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கலவரத்தையெல்லாம் பார்த்து விட்டு, நான் எப்போது உனக்கு அசைவம் சமைத்துக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன், நீ வாங்கி வா, சமைக்கிறேன் என்றாள் அவந்திகா.
என்ன விஷயம் என்றால், முன்பெல்லாம் அவளே நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட் செல்வாள். இப்போது அவளுக்குப் பூனை வேலை ஜாஸ்தியாகி விட்டது. நானோ வெளியிலேயே செல்லாமல் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேனேஜரை அனுப்பினால் அழுகிப் புழுத்து குப்பையில் போட வேண்டிய மீனை வாங்கி வருவார். அவருக்கு அவ்வளவுதான் தெரியும்.
நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.