எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை

நானும்  தேடிப் போகவில்லை

ஆனாலும் எப்படியோ

சந்தித்துக் கொண்டோம்

தாமதம்தான்

சற்றுமுன் நடந்திருக்கலாம்

எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான்

உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன்

என்றது கவிதை

என்ன காயமோ என்ன மருந்தோ

பசித்த ஒரு நாயின் அழுகுரல்

என் அமைதியைத் துளைக்க

இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு

குரல் வந்த திசை நோக்கிச்

சென்றேன்

ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய்

எத்தனை நாள்  நொந்த பசி

எத்தனை நாள் கிடந்த  வாழ்வு

சூர்ய சந்திரர்களின் பிரம்மாண்டம்

நினைவினில் மோத

உறக்கத்தில் நடந்து கொண்டிருந்தவனின்

கனவில் வந்த உன் கண்களில்

கவிதையின் திவலைகள் சிதறி விழக் கண்டேன்

உலகம்  இயங்கிக் கொண்டிருந்தது

தன்பாட்டுக்கு