தாசியின் வீடு

கேள்விகள் என்னைத் திக்பிரமை

கொள்ளச் செய்கின்றன

கேள்விகள் என்னைத் திணற 

அடிக்கின்றன

கேள்விகள் என்னை மூச்சு முட்ட

வைக்கின்றன

கேள்விகள் என்னை அச்சுறுத்துகின்றன

காரணமென்னவென்று அந்தப் பக்கமாக 

வந்த ஒரு அணுக்க தெய்வத்திடம் கேட்டேன்

கேள்விகளின் கதவுகள்

மூடியிருக்கின்றன

உன்னுடைய உண்மை

கேள்விகளின் கோட்டைக் கதவுகளைத் 

திறக்க முடியாமல்

வலுவற்று வீழும்போது

திக்கித் திணறி

ஒரு பொய்யைச் சொல்கிறாய்

அவ்விதமாகத்தான் சிருஷ்டித்திருக்கிறான்

படைத்தவன்

விசனப்படாதே

சிருஷ்டியை உன் தர்க்கம் கொண்டு

புரிந்து கொள்வது கடினம் 

என்றபடியே

பக்கத்திலிருந்த வீட்டுக்குள்

அவசரமாய்ப் புகுந்தார் 

கடவுள்