இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு குறிப்பு எழுதுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அந்த அளவுக்குத் தேய்வழக்காகி விட்ட சொற்கள் அவை.
ஃபேஸ்புக்கில் நண்பர் அய்யனார் விஸ்வநாத் ஒரு பிரபல இசையமைப்பாளரையும் ஏ.ஆர். ரஹ்மானையும் ஒப்பிட்டு, ரஹ்மானின் மார்க்கெட்டிங் பற்றிப் புகழ்ந்திருந்தார். இப்போது ரஹ்மான் இருக்கும் இடத்துக்கு அவரது மார்க்கெட்டிங் முக்கியக் காரணம் என்பது நண்பரின் கருத்து.
கே.ஏ. குணசேகரன் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரைப் புகழ்ந்து – கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்ஜுக்கு – ஒரு புத்தகம் எழுதினார். குணசேகரன் மீது வழக்குத் தொடுத்து விட்டார் இசையமைப்பாளர். காரணம், இசையமைப்பாளர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குணசேகரன் எழுதிவிட்டார். பல ஆண்டுகள் கேஏஜி கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருந்தார்.
இங்கே நான் பேரை எழுதாமல் குன்ஸாக எழுதுவதற்குக் காரணம் கூட கோர்ட்டுக்கு அலைய முடியாது என்ற காரணத்தினால்தான். இப்படி இருந்தால் எவன் அவர் கிட்டே போவான். அவரது உதவியாளர்கள் பெயரை ஆல்பத்தில் அவர் போட்டதில்லை. தமிழ்ச் சூழலில் அதை முதலில் செய்தவர் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ ப்ரதர் என்ற பாடலைக் கேட்டேன். இவருக்கு ஆஸ்கர் நிச்சயம் என்று தோன்றியது.
ஒருத்தர் கலைஞனாக இருக்கலாம். அன்பு இல்லாவிட்டால் அவனுடைய கலை கொஞ்ச நாள்தான் நிலைக்கும். அடக்கம் கூடுதல் பண்பு.
ஒரு பொதுமேடையில் வைத்து சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர் ரஹ்மானிடம் “உனக்கு இசை பொழுதுபோக்கு, எனக்கு அது உயிர் மூச்சு” என்று சொன்னாரே, அதை விட அவலமான நிகழ்வை நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? ரஹ்மான் தன்னுடைய புகழ் பெற்ற புன்னகையின் மூலம் அந்த அவலத்தைத் தன் கோட்டில் விழுந்த தூசைத் தட்டி விடுவது போல் கடந்தார்.
வெறும் ஒரு யூட்யூப் உரையில் என் பேச்சைக் கேட்டு விட்டு என்னைக் காண்பதற்காக அழைத்தார் ரஹ்மான். காரில் செல்லும் போதுதான் நான் அரை மணி நேரம் தாமதம் என்பது டிரைவருக்கே புரிந்தது. உடனே டிரைவர் என்னிடம் கேட்டார், நீங்கள் யார் சார் என்று. நான் பேர் சொன்னேன். டிரைவருக்குத் தெரியவில்லை. புரியவில்லை. தொழில் சொன்னேன். அப்போதும் புரியவில்லை என்பதால் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.
சாருக்குத்தான் பலரும் காத்திருந்து பார்த்திருக்கிறேன். சார் ஒருவருக்காகக் காத்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
ரஹ்மானைப் பார்த்தபோது இத்தனை அடக்கமான, பண்பான ஒரு மனிதரை என் வாழ்நாளில் நேரில் சந்தித்ததில்லை என்று தோன்றியது. அந்த அன்புக்கும் அடக்கத்துக்கும் பெயர் மார்க்கெட்டிங் இல்லை. அடிப்படையான மனித நேயம்.
ரஹ்மான் மட்டும் தமிழ் இலக்கிய வாசகராக இருந்திருந்தால் இலக்கியத்தில் நடந்திருப்பதே வேறு. காரணம், ஆப்ரஹாம் பண்டிதரின் நூலை (கர்ணாமிர்த சாகரம்) பிரபலப்படுத்துவதற்காக ரஹ்மான் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.
அன்பும் அடக்கமும் ரஹ்மானுக்குக் கிடைத்தது சூஃபித்துவம் மூலம்.