இலக்கியமும் சினிமாவும்…

தளவாய் சுந்தரம் என் நீண்ட கால நண்பர்.  மிக நீண்ட காலம்.  என்னுடைய ராஸ லீலா நாவலில் ஒரு அத்தியாயத்தில் அவர் இடம் பெறுகிறார்.  அவர் பணி புரியும் வாவ் தமிழா இணைய இதழுக்கு நான் அளித்த பேட்டியின் பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பேட்டியைக் கண்டதும் ஒரு முடிவு எடுத்தேன்.  இனிமேல் எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளிக்கும் போது சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.  அது இப்போது எடுத்த முடிவு.  முடிவு எடுத்து விட்டால் பிறகு மாற்றிக் கொள்ள மாட்டேன்.  இந்த முடிவுக்குக் காரணம், ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்.  எழுத்தாளர் என்று சொன்னாலே எந்தப் படம் என்று கேட்கக் கூடிய சூழல் இங்கே நிலவுகிறது.

இதற்குக் காரணம் உங்களுக்கே தெரியும்.  இங்கே பெரும்பாலானவர்கள் படிப்பதில்லை.  எனக்குத் தெரிந்த ஒரு 25 வயதுப் பையன்.  பள்ளிப் படிப்பில் படு புத்திசாலி.  நற்குணங்கள் நிறைந்தவன்.   ஆனால் வாழ்க்கையில் ஒரு புத்தகம் படித்ததில்லை.  அவன் வீடு பூராவும் புத்தகங்கள்தான் நிரம்பியுள்ளன.  ஒட்டு மொத்த சமுதாயமே இப்படித்தான் இருக்கிறது. 

ஆனால் சினிமா என்றால் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்திருக்கிறது.  நடிகர் விஜய்யின் மகனுக்கு எத்தனை வயது என்பது உட்பட. 

ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கரை ’எழுத்தாளரும் இயக்குனருமான ஷங்கர்” என்று குறிப்பிடுகிறார்.  ஓ, கமலுக்கு எழுத்தாளர் என்றால் யார் என்று தெரியாதா என்று பார்த்தால் – தமிழில் வருகின்ற நவீன இலக்கிய நூல் எதுவாக இருந்தாலும் அதன் அச்சு காய்வதற்குள் கமலின் நூலகத்து வந்து விடும்.  செர்வாந்த்தெஸின் தோன் கெஹோத்தேவிலிருந்து நேற்று வந்த மிளகு வரை படித்தவர்.  அப்படிப்பட்டவர்தான் இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்கிறார்.  படித்தவர்களே லும்பன்களாக விளங்கும்போது வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக் கூட கண்களாலும் பார்த்திராத நிஜ லும்பன்கள் எப்படி இருப்பார்கள் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். விஜய் நெல்சனுக்குக் கொடுத்த பேட்டியைக் கேட்டு விட்டு தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற லெவலுக்குப் போய் விட்டேன்.  பிறகுதான் அது சட்டப்படி குற்றம் என்பதாலும், ஒரு எழுத்தாளனாகிய நாமே இப்படி சட்டத்தை மீறக் கூடாது என்று எண்ணி அந்த யோசனையைக் கை விட்டேன்.  விஜய் நெல்சனுக்குக் கொடுத்த பேட்டிதான் என் வாழ்வின் ஆகப் பெரிய அவலம். 

இதையெல்லாம் ஏன் இப்போது யோசிக்கிறேன் என்றால், பத்திரிகைப் பேட்டிகளும் கூட சினிமாவைக் கொண்டுதான் நடக்கின்றன.  காரணம் புரிகிறது.  அவர்கள் மேல் தப்பே இல்லை.  சமூகம் அப்படிக் கிடக்கிறது. அதனால் நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன்.  இனிமேல் பேட்டிகளில் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.  சித்ரா லெட்சுமணன் மாதிரி சினிமாவைக் குறித்தே பேட்டி என்றால் அது வேறு விஷயம்.  ஆனால் இம்மாதிரி பத்திரிகை பேட்டிகளில் இனி சினிமா குறித்த கேள்விகளுக்கு இனிமேல் பதில் சொல்லக் கூடாது என்ற இனிய முடிவை இன்று எடுத்திருக்கிறேன்.  அவ்வகையில் சினிமா பேட்டி இதோடு முடிகிறது.  இலக்கியத்தை நிராகரிக்கும் சமூகத்தை என் நண்பன் அரசியலில் நுழைந்து பழி வாங்கினான்.  எனக்கு அத்தனை தைரியம் இல்லை.  நான் சினிமாவை நிராகரித்து என் வழியில் செல்கிறேன்.  என் வாசகர்கள் ஆயிரம் பேர் உண்டு.  அவர்கள் எனக்குப் போதும்…