எழுத்தாளர்கள் கொண்டாடப்படவில்லை என்று நான் அடிக்கடி எழுதுவதைக் கண்டு பலரும் சந்தேகம் கொள்கிறார்கள், முகம் சுளிக்கிறார்கள், சிலர் கோபப்படுகிறார்கள். சிலருக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை விடவும் எழுத்தாளனை ஒரு சமூகம் எப்படிக் கொண்டாட முடியும் என்பது அவர்களின் கேள்வி.
ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இன்னமும் ஒரு சினிமாக்காரரை ஒரு எழுத்தாளன் சந்திக்க வேண்டும் என்றால் – வசனம் எழுதுவதற்காக அல்ல – சாதாரணமாக ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக சந்திப்பதைச் சொல்கிறேன் – எழுத்தாளன்தான் நடிகரையோ இயக்குனரையோ தேடிப் போக வேண்டியிருக்கிறது. நடிகரே அல்லது இயக்குனரே அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரைச் சந்திக்க விரும்பினால் கூட எழுத்தாளர்தான் சினிமாக்காரரின் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். இருவரது உடல் மொழியைப் பார்த்தால் சமூகப் படிநிலை பற்றியும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். நடிகர் திருப்பதி பெருமாளைக் கும்பிடுகிறார். நடிகரோடு கூடப் போன எழுத்தாளரோ நடிகரைக் கும்பிடுகிறார். என் மீது யாரும் கோபப்படக் கூடாது. நான் உங்களுக்காகப் பேசுகிறேன். உங்களுக்காக வாதாடுகிறேன். உங்கள் மீது தப்பே இல்லை. நீங்கள் இப்படி இருப்பதைத்தான் நடிகர்கள் விரும்புகிறார்கள். இத்தனைக்கும் திருப்பதி பெருமாளைக் கும்பிடும் நடிகர் அடக்கத்துக்குப் பேர் போனவர். உண்மையான அடக்கம் என்றால், தன்னைப் பார்த்துக் கும்பிடும் எழுத்தாளனை பெருமாளைப் பாருங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
நான் எழுத்தாளன் மீது தப்பே சொல்ல மாட்டேன். சினிமாக்காரர்கள்தான் அதைத் திருத்த வேண்டும். எழுத்தாளராகிய நீங்கள்தான் குரு என்று எழுத்தாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் அவனை உங்களுக்குக் கீழே இருப்பவன் என்று நடத்துவதால் மட்டுமே அவன் அடிபணிகிறான். நீங்கள் அவனைப் பேர் சொல்லியும், அவன் உங்களை சார் என்றும் அழைக்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தேடித்தான் எழுத்தாளன் வர வேண்டியிருக்கிறது. தொழில் நிமித்தமான சந்திப்பைச் சொல்லவில்லை. நட்பு ரீதியான சந்திப்பு என்றால் கூட அப்படித்தான் நடக்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உச்ச நடிகர் ஒரு உச்ச எழுத்தாளனை சந்திக்கப் பிரியப்பட்டிருக்கிறார். எழுத்தாளன் வசிப்பது கோவில்பட்டியில். எழுத்தாளனுக்கு செய்தி வந்திருக்கிறது. நடிகரை கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள் என்றானாம் எழுத்தாளன். இது நடிகரின் நண்பரான இன்னொரு எழுத்தாளர் என்னிடம் சொன்னது. அந்த எழுத்தாளன் கோணங்கி.
எழுத்தாளன் என்றால் அப்படி இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பதற்கும் ஒரு வசதி வேண்டும். ஆதரவான குடும்பச் சூழல் வேண்டும். கோணங்கியின் வீட்டில் அவனை எல்லோரும் பாரதி எனக் கொண்டாடுகிறார்கள். எனவே மற்றவர்களால் கோணங்கி போல் இருக்க முடியாது.
மாதா பிதா குரு தெய்வம் என்பது நம் மரபு. குருவைத் தேடியே நடிகன்/இயக்குனர் போக வேண்டும். குரு உங்களைத் தேடி வரக் கூடாது.
கேளிக்கையாளர்களின் காலம் அம்பது வருடம். எம்கேடி அப்போதைய சூப்பர் ஸ்டார். இப்போதைய ரஜினியை விட உயரத்தில் இருந்தார். இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் 2000 ஆண்டுகளாக நம் சமூகத்தின் அடையாளமாக இருப்பது வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும். அதை எப்போதும் யாரும் மறக்காதீர்!