எனக்குப் பிடித்த நாவல்
புயலிலே ஒரு தோணி
என்கிறார் நடிகர் விஜய்
மீட்டர் போட்டு ஆட்டோ
ஓட்டுகிறார்கள் சென்னையில்
முதலமைச்சர் தன் வீட்டிலிருந்து
தன்னுடைய காரைத் தானே
ஓட்டிக் கொண்டு தலைமைச்
செயலகம் செல்கிறார்
நாலு காலில் தவழ்ந்து சென்று தன்
தலைவியை நமஸ்கரித்த முன்னாள்
மந்திரி தலைவியின் பெயர் சொல்லி
அழைக்கிறார்
மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து
கேட்கிறார் கமல்ஹாசன்
இலக்கிய நூல்களின் விற்பனை
ஒரு கோடியைத் தாண்டுகிறது
பிரபலத் தமிழ் எழுத்தாளனிடம்
அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு
ஆறு மாதமாகக் காத்திருக்கிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தனக்கு வழங்கப்பட்ட நோபல்
பரிசைப் பெற்றுக் கொள்ள மறுத்து
அறுபது பக்க அறிக்கை விடுகிறார்
உத்தமத் தமிழ் எழுத்தாளர்
நோபலை விட அதிக மதிப்புள்ள (பத்து கோடி ரூபாய்)
மற்றொரு உலக இலக்கிய விருதை
அவரே அறிவிக்கிறார்
இருபத்து இரண்டு வயது மலையாள
நடிகையை மணக்கிறார் அறுபத்து இரண்டு
வயது தமிழ் எழுத்தாளர் என்று வந்த
தலைப்புச் செய்தியில்
ஒருசிறிதும் உண்மையில்லை
என்று பேட்டியளிக்கிறார் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்
மறுநாளே நடிகையுடன் நடனமாடும் எழுத்தாளரின்
புகைப்படங்கள் வெளியாகின்றன
எழுத்தாளரின் மூன்றாவது மனைவி
விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார்
ஹீரோக்களின் சம்பளம் அம்பது கோடியிலிருந்து
அம்பது லட்சமாக இறங்கி விடுகிறது
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சமரசமாக
வாழ வேண்டும் என்பதற்காக
நானே பாப்ரி மஸ்ஜிதைக் கட்டித் தருகிறேன்
என்று காரியத்தில் இறங்குகிறார் நரேந்திர மோடி
இல்லை, அது ராமர் பிறந்த இடம் என்பதால் ராமர் கோவிலே
கட்ட வேண்டும் என்று வழக்குத் தொடுக்கிறார்கள் இமாம்கள்
முன்னணித் தலைவரெல்லாம் காந்தியைப் போல் பதவியில்லாமல்
மக்கள் சேவை செய்யப் போகிறோம் என்று அறிவித்து விட்டதால்
பிரதம மந்திரி பதவிக்கு ஆள் கிடைக்காமல்
தில்லித் தலைமை குழம்பிக் கிடக்கிறது
பாகிஸ்தானிகள் இந்தியாவிலும் இந்தியர்கள்
பாகிஸ்தானிலும் தொழில் தொடங்குகிறார்கள்
___
சீலேயைச் சேர்ந்த கொன்ஸாலோ மிய்யான் (Gonzalo Millan) எழுதிய ஒரு கவிதையைப் படித்த போது தோன்றிய கவிதை
மிய்யானின் கவிதை இங்கே: