லும்ப்பன் சூழ் உலகு

பத்தாண்டுகளாகப் பேட்டியே கொடுத்ததில்லையாம்

இப்போதுதான் கொடுத்த்திருக்கிறான் இந்த 

நடிகனின் பேட்டியைக் கேளென்றான் நண்பன்

பிரபல நடிகன் 

பிரபலத் தொலைக்காட்சி

மூணே நாளில் நூறு லட்சத்தைத் தாண்டிய

பார்வையாளர்கள்

‘சீறும் பாம்பை நம்பலாம்

சிரிக்கும் பெண்ணை நம்பாதே’

என்ற வாசகத்தை மூணு சக்கர 

வாகனத்தில் எழுதிச் செல்லும் ஒருவனிடம்

ரூபாய் ஆயிரம் பத்தாயிரம் கோடி கிடைத்தால்

என்ன ஆவான் அவன்?

திக்கினான் திணறினான்

உளறினான்

நெளிந்தான்

தலையில் நூறு கிலோ புகழ் மூட்டை

கூடவே ஆணவமும்

அகங்காரமும் பிதுங்கித் தெறிக்க

எதையும் வெளிக்காட்ட முடியாமல்

அடக்கமானவனைப் போல் நடித்தான்

நடிகனுக்கு அந்த இடத்தில் மட்டும்

நடிப்பு வரவில்லை

ஆணுறையாய் அணிந்து கொண்ட 

அடக்கத்தையும் மீறி

துருத்திக் கொண்டு முட்டியது

ஆணவக்குறி

என்ன செய்வான் பாவம்?

மூட்டையை இறக்கினால் பேசலாம்

அவனைச் சொல்லிக் குற்றமில்லை

சீர்குலைவென்பது கட்டிடங்களுக்கும் 

நாகரிகங்களுக்கும மட்டுமில்லை

மனித குலத்துக்கும்தான்

உயிரினத்தில் உயர்ந்த இனம்

மனித இனமென்றான் தொல்சித்தன்

மிருகங்கள் பட்சிகள்

புழு பூச்சி தாவர இனங்களுக்கு

இதுபோலுண்டோ சீர்குலைவு?

ஒவ்வொரு விதையும்

தன்னழிவைச் சுமந்து கொண்டே

பிறக்கிறது என்றது

அசரீரி