காற்றிலாவது…
அவளுக்குப் பதினாறு வயது
பேரழகு என்று நீங்கள்
எதைச் சொல்வீர்களோ
அதையெல்லாம் மீறிய
அழகு
ஒருநாள்
கைகாலை அசைக்க முடியவில்லை
பேச முடியவில்லை
சப்தநாடியும் செயலிழந்து போனது
LGMD என்றார் மருத்துவர்
இனிமேல் அந்தப் பெண்ணுக்கு
ஆட்டமில்லை
ஓட்டமில்லை
பௌதிக இயக்கமில்லை
துன்ப சாகரத்தில் வீழ்ந்தது
குடும்பம்
வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ
எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி
இன்று எனக்கொரு
ஜனன செய்தி வந்த போது
எதுவொன்றும் சொல்லத் தோணாமல்
விக்கித்து நின்றேன்
தாள முடியாத துயரம்
தொண்டையை
அடைத்தது
பெண்ணா ஆணா என்று கூடக் கேட்கவில்லை
துன்ப சாகரத்தில் வீழ்ந்த பிறகு
ஆணென்ன பெண்ணென்னடா
நீ
நிலவோடு பேசியிருக்கிறாயா
நட்சத்திரங்களோடு விளையாடியிருக்கிறாயா
மின்மினிப் பூச்சிகளோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாயா
பட்டாம்பூச்சி சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறாயா
அதன் மீசையிலே ஒட்டியிருக்கும் மகரந்தம் கண்டதுண்டா
ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும கிளியின் இதயத்திலே
பதுங்கியிருக்கும் ரகசியம் அறிவாயா
மழைநீரில் குதித்ததுண்டா
மண்புழுவிடம் பேசியிருக்கிறாயா
விருட்சத்தை அணைத்ததுண்டா
விருட்சத்தை முத்தித்திருக்கிறாயா
பல்லியின் சொல்மொழி அறிந்ததுண்டா
காகமாவத கிளியாவது உன் தோளில் அமர்ந்ததுண்டா
நாயும் பூனையும் நிழல் போல் தொடர்ந்ததுண்டா
சரி, எதுவுமே வேண்டாம்
காற்றிலாவது பறந்திருக்கிறாயா…
***
கவிதையை என் குரலில் கேட்க: