தர்ஹாவின் மாடங்களில் வசிக்கும்
ஆயிரக்கணக்கான புறாக்களில்
நானும் ஒருத்தி
எங்களுக்கு யாரும் பெயரிடுவதில்லை
என்றாலும் உங்களுக்கு என்னை
அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிமித்தம்
நானே
எனக்கொரு பெயர் சூட்டிக் கொண்டேன்
பர்வீன்
பந்துவில் வரும் ப
பயத்தில் வரும் ப அல்ல
இதிலொன்றும் எனக்குப் பிரச்சினை
இல்லை இதை நான் சொல்லக் கேட்டு
எழுதுபவன் ஆட்சேபிக்கலாம்
எஜமானின் அருள் நாடி
வருவோரும் செல்வோரும் பலருண்டு
சிலபேர் இங்கேயே
சிலநாள்
தங்கிச் செல்வதுமுண்டு
குளுந்த மண்டபத்தில் அமர்ந்து
தன் கதையை என்னிடம்
சொல்வாரும் சிலருண்டு
அவர்களிலொருத்தி என்னைக் கவர்ந்தாள்
எப்போது பார்த்தாலும் ஏதோ ஒன்றைத்
தேடிக் கொண்டேயிருப்பாள்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு
ஒருநாள்
எதைத் தாயே தேடுகிறாய் என்றேன்
பத்து வயது வரை என்னிடமிருந்தது
அதற்குப் பிறகு வந்தவர் போனவர்
வேடிக்கை பார்த்தவரெல்லோரும்
கவர்ந்து விட்டார்
உன் மேலும் சந்தேகம்தான்
என்றாள் மூத்தவள்
ஆங், சொல்ல மறந்து விட்டேன்
அவளுக்கு சோறூட்ட வருவாரொரு மனிதர்
தினத்துக்கு மூன்று வேளை
தின்னும்போதும் தின்று முடித்த பிறகும்
நீதான் களவாடினாய் என்பாள்
ஒருநாள் அந்த மனிதர்
குளுந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த போது
அவரருகில் சென்ற நான்
ஐயா, அவள் தேடுவது என்ன
என்று கேட்டேன்
பதிலொன்றும் சொல்லாமல்
உனக்கும் கொண்டு வந்திருக்கிறேன் வா
என்று சொல்லி
கைப்பையிலிருந்த
தானியத்தை அள்ளி இறைத்தார்