1
வருகை
________
கருப்புத் தோல் பரட்டைத் தலை அழுக்கு வேட்டி
வியர்த்த உடல்
காலில் செருப்பில்லை
ஒருகையில் ஜோசியக் கிளிக்கூண்டு
இன்னொரு கையில்
இரண்டாக மடித்த பிளாஸ்டிக் விரிப்பு
“ஐயாவுக்குத் தான் ஜோசியம் பார்க்கணும்” என்று
என்னைக் காட்டிச் சொன்னார் நண்பர்
தலைக்கு அம்பது ரூபாய் என
விலை வைப்பது போல்
கட்டணத்தைச் சொன்னவாறே
“தாராளமாகப் பார்க்கலாம்” என்றபடி
விரிப்பை விரித்து அமர்ந்தான் கிளி ஜோசியன்
(2)
வாக்கு
______
“அம்மா மீனாட்சி, ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு”
கதவு திறந்து வெளியே வந்து
கட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்துக் கொடுத்தாள் மீனாட்சி
என்ன படமோ எது பார்த்தானோ
“திருஷ்டி இருக்கிறது ஐயா, நிறைய திருஷ்டி இருக்கிறது
அந்த திருஷ்டியை மட்டும் எடுத்து விட்டால்
ஐயா நினைத்ததெல்லாம் நடக்கும்
காரியம் ஜெயமாகும்”
திருஷ்டி எடுப்பது எப்படி?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
உப்பு மிளகாய் வற்றல் சுண்ணாம்பு மஞ்சள்
ஒன்றாய்க் கட்டி நெருப்பில் போட
விலகும் திருஷ்டி
(3)
மேல் விசாரணை
____________
ஜோசியம் பழகிய கிளியொன்றின் விலை மூவாயிரம்
எதுவும் தெரியாத பச்சைக்கிளிக்கு ஐநூறு மட்டும்
பேசத் தெரிந்த கிளிக்கு ஆறாயிரம்
கவிதையெழுதத் தெரிந்த கிளி கிடைக்குமா
என்று கேட்கவில்லை
பறப்பதுதானே கிளியின் வாழ்க்கை?
சோதிடனிடம் கேட்டேன்
பத்து வயதிலிருந்து சோதிடம் பார்க்கிறேன்
எந்தக் கிளியும் எங்களுக்குத் தெய்வம்
பறப்பதை விடவும் உடனிருப்பதைத்தான்
மீனாட்சி விரும்புகிறாள் என்றான் சோதிடன்
கடற்கரையிலிருந்து எழுந்து வாகனத்தை
நோக்கி நடக்கிறேன்
மீனாட்சி
ஏனோ
என் தோளொன்றில் அமர்ந்திருந்தாள்
4
வாஞ்சை
_______
வண்ணத்துப் பூச்சியை எழுதினால்
என் கையெல்லாம்
வண்ணங்கள் உதிர்ந்தன
மீனாட்சியெனும் கிளி என்னோடுதான் வந்தது
ஆனாலும் கொஞ்சமும் பசுமைத் தடத்தைக் காணோம்
(5)
கிளிமொழி
_______
நான் பறத்தலறியாத மீனாட்சி
என் உலகின் அறைகள் சின்னஞ்சிறிய சன்னல்களாலானது
என்னைத் தொட்டால் பச்சை ஒட்டாது
நான் நிழல் ரூபிணி
நீ கண்ணாடியில் பார்த்தால் நான் தெரியாமலிருப்பேன்
பாசி படர்ந்த நீர்த்தடத்தில்
உன் முகம் அலைகையில் ஒருவேளை நான் தென்படலாம்
6
ஸ்தூலம்
___________
அலகின் கூர்மையினால்
இதயம் கிழி
கொட்டுகின்ற குருதி தொட்டெடுத்து
ஒரு கவிதையெழுதி அனுப்பு
அதன் கடைசிச் சொல்லுக்குள்
நிலத்திலிருந்து ஆகாயம் நோக்கிப் பறந்து
நட்சத்திரங்களைப் பொடிப்பொடியாய்
உதிர்த்துக் கொறிக்கிறாள் பார்
மற்றுமொரு மீனாட்சி
கெக்கலித்துப் பறக்குமவள்
உதிர்த்துச் செல்லும்
சொல்லொன்றின் வெம்மை தாளாது
பற்றியெரிவதுதான்
மொத்தப் பிரபஞ்சமும்…