கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணி. இது போன்ற சேவை அடிப்படையிலான வேலைகளுக்கு ஊதியம் கம்மிதான். என்ன, இருபதாயிரம் இருக்குமா என்றேன். ஆமாம் என்றார். கூடவே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறேன், அதில் ஒரு இருபதாயிரம் வரும் என்றார்.
ஆக, இந்த நாற்பதாயிரம் ஊதியத்தில்தான் நீங்கள் எனக்கு நாலாயிரம் ஐயாயிரம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி அனுப்புகிறீர்களா என்று கேட்டேன். என் குரலில் தெரிந்த கோபத்தைப் பார்த்து, “திட்ட ஆரம்பித்து விடாதீர்கள், இதைச் செய்வது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பாக்கியம். என் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்வதற்கான பாக்கியத்தை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் என் முகத்தில் உள்ள நரம்புகள் துடிக்க ஆரம்பித்து விட்டன. பேசினால் குரல் உடைந்து விடும் போலிருந்தது. உடனே போனைத் துண்டித்து விட்டேன். போனைத் துண்டித்தது பற்றித் தவறாக நினைக்க வேண்டாம், என்னால் பேசக் கூட முடியாமல் போய் விட்டது என்று மெஸேஜ் அனுப்பினேன்.
அந்தப் பெண்ணின் பெயரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது.
இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்தேன்? என் எழுத்துக்கு இத்தனை பெரிய மரியாதையையா செய்கிறார்கள்? இதை விடவா புக்கரும் நோபலும் பெரியது?
என் கடைசி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருப்பதுதான் இது போன்ற வாசகச் செல்வங்களுக்கு நான் தரும் பிரதி உபகாரமாக இருக்க முடியும்.
நேற்று ஒரு நண்பர் சிறப்புப் பிரதிகள் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பியிருந்தார். நீண்ட காலமாக என் நண்பர். ஆரம்பத்திலிருந்தே வாசகர் வட்டத்தில் இருப்பவர். சிறப்புப் பிரதிகள் திட்டத்தில் நான் குறிப்பிட்டிருந்தபடி நான்தான் ஔரங்ஸேப்… நாவலின் எல்லா பிரதிகளிலும் அந்த நண்பரின் பெயரைக் குறிப்பிட்டு இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்றே வரும். இதில் வேறு யாரும் இணைய விரும்பினால் எழுதுங்கள். அவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம். வெளிவர இருக்கும் எல்லா பிரதிகளிலும் இன்னார் வழங்கும் என்று நாவலின் தலைப்போடு அச்சிடப்பட்டிருக்கும்.
மற்றபடி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி சிறப்புப் பிரதி வாங்க விரும்புவோர் விரைவில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். புத்தகம் அடுத்த வாரம் அச்சுக்குப் போகும். அதில் உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும். ஒரு ஐம்பது பேர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் அது சீலே பயணத்துக்குப் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் பத்து பேர்தான் இதுவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன். உங்கள் பணம் ஒரு முக்கியமான சரித்திரப் பதிவுக்காகவே செலவிடப்பட இருக்கிறது. இந்த ஆவணப்படம் காலம் உள்ளளவும் நிற்கும்.
சென்ற ஆண்டு நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அந்த இயக்குனர் என் நண்பர். அவர் ஒரு படம் இயக்கினார். படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. பத்து கோடியில் எடுக்கப்பட்ட படம். ஒரே நாளில் தியேட்டரிலிருந்து தூக்கி விட்டார்கள். ஓடிடியிலும் எடுத்துக் கொள்ளவில்லை. நட்புக்காக நான் பார்த்தேன். அபிப்பிராயம் எதுவும் சொல்லாமல் நழுவி விட்டேன். ஏனென்றால், படம் மரண குப்பை.
நண்பருக்கு பத்து கோடி நஷ்டம் இல்லை. பத்து கோடியையும் போட்டது அமெரிக்கத் தமிழர்கள். சிலர் ஒரு கோடி, சிலர் இரண்டு கோடி என்று போட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் டைட்டிலில் சில நொடிகள் காண்பிக்கப்பட்டன. அவ்வளவுதான். அவர்களைப் போன்றவர்கள் எங்களுடைய இந்த ஆவணப்படத்துக்கு உதவ வாய்ப்புகள் கம்மி. ஏனென்றால், அவர்களுக்கு என்னைத் தெரியாது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இதை வாசிக்கும் என் நண்பர்கள் அது போன்ற சினிமா ஆர்வலர்களிடம் இந்தச் செய்தியை சொல்லலாம். நான்கே பேர் ஐந்து ஐந்து லட்சம் கொடுத்தால் படத்தை முடித்து விடலாம். வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போன ஒரு குப்பைப் படத்துக்குக் கோடி கோடியாய்க் கொடுத்தவர்கள் ஒரு சரித்திர ஆவணத்துக்கு ஒருசில லட்சங்கள் தர மாட்டார்களா? அவர்களை நாம் அணுகுவது எப்படி? பணம் தர முடியாதவர்கள் இந்த உதவியைச் செய்யுங்கள்.
நான் சில கோடீஸ்வரர்களை அணுகினேன். ஒரு பைசா கிடைக்கவில்லை. நேற்று ஐந்து லட்சம் அனுப்பிய நண்பர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர். இப்படித்தான் இருக்கிறது சூழ்நிலை. நாற்பதாயிரம் ஊதியம் வாங்குபவர் மாதம் நாலாயிரத்துக்கு மருந்து மாத்திரை அனுப்புகிறார். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர் இந்தா பிடியுங்கள் என்று ஐந்து லட்சத்தை அனுப்புகிறார். அதோடு ஒரு மெஸேஜ் வேறு கொடுத்திருந்தார். நான் சொன்ன தேதியில் கொடுக்காமல் தாமதம் செய்ததற்காக மன்னியுங்கள்!!!
ஆனால் கோடீஸ்வர்ர்களிடமிருந்து ஒரு பைசா பெயரவில்லை!
எதுவுமே இயலாவிடில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து சிறப்புப் பிரதியைப் பதிவு செய்யுங்கள். அதுவும் சாத்தியம் இல்லை என்றால் 999 ரூ. அனுப்பி முன்பதிவு செய்யுங்கள்.
உங்கள் அனைவருக்கும் இன்னும் சில மாதங்களிலேயே தியாகராஜா நாவலை சமர்ப்பிக்கிறேன்.