சென்னையில் பெயர் சொன்னாலே தெரிந்து விடக் கூடிய ஒரு பிரபலமான தொழிலதிபர் அவர். எனக்கு ஃபோன் செய்தார். ஒரு படம் எடுக்க வேண்டும், நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார். சரி என்றேன். இப்படி என்னிடம் வரும் அறுபத்தொம்போதாவது நபர் இவர். வேளச்சேரியில் ஒரு நண்பரின் அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு. இரண்டு மணிக்கு சந்திப்பு. ஒன்றரை மணிக்கு ஃபோன் செய்து “முக்கியமான விருந்தாளி வந்து விட்டார், நான்கு மணிக்கு வரலாமா?” என்றார். வாருங்கள் என்றேன். அதுவரை என் நண்பரோடு பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன்.
நாலு மணிக்கு அவரிடமிருந்து தகவல் எதுவும் இல்லை. அன்றைய தினம் முழுதுமே தகவல் இல்லை.
மறுநாள் குட்மார்னிங் மெஸேஜ் வந்தது.
பதிலுக்கு நான் “நான்தான் ஔரங்ஸேப்…” நாவலின் சிறப்புப் பதிப்புத் திட்டம் பற்றிய என் அறிவிப்பை அனுப்பி வைத்தேன்.
அவரிடமிருந்து அது பற்றி எந்த பதிலும் இல்லை.
மறுநாளும் குட்மார்னிங் மெஸேஜ் வந்தது. நான் முந்தின தினம் போலவே ’நான்தான் ஔரங்ஸேப்…’ நாவலின் சிறப்புப் பதிப்புத் திட்டம் பற்றிய என் அறிவிப்பை அனுப்பி வைத்தேன்.
மறுநாளும் குட்மார்னிங் மெஸேஜ். நானும் பதிலுக்கு முந்தின நாட்கள் செய்தது போலவே செய்தேன்.
இதேபோல் ஏழெட்டு தினங்கள் அவர் குட்மார்னிங்கும், நான் சிறப்புப் பதிப்புத் திட்டம் பற்றிய விவரங்களை அனுப்புவதுமாகத் தொடர்ந்தது.
இப்படி ஒரு மனிதரைப் பார்த்ததே இல்லையே என வியப்புற்று, ஒன்பதாம் நாள் காலையில் அவருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.
சிறப்பு வெளியீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புகிறீர்களா இல்லையா? அதைச் சொல்லாமல் வெறுமனே குட்மார்னிங் குட்மார்னிங் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்?
அதற்கு அவரும் ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினார். காட்டமான குரலில்.
“சார், எனக்கு இந்தப் புத்தக விஷயத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை சார். என் நோக்கம் படம் எடுக்கணும். எதாவது கதை இருந்தா சொல்லுங்க. மற்றபடி எனக்கு இந்தப் புத்தக விஷயத்திலெல்லாம் நம்பிக்கையே இல்லை. அதனால்தான் நான் கம்னு இருந்தேன். அதிலிருந்தே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?”
அவரை அதோடு ப்ளாக் பண்ணி விட்டு, மனதிலொரு உறுதி பூண்டேன். இனிமேல் சினிமா என்று வருபவர்கள் என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்தால்தான் என்னோடு பேசவே முடியும். அந்தப் பிரபலத்தால் எனக்கு அனாவசியமாகப் பல மணி நேரம் வீண்.