பாண்டிச்சேரியில் ஒரு சந்திப்பு

செப்டம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து பதினைந்து தேதி வரை நான் ஒரு முக்கியமான சொந்த வேலையாக பாண்டிச்சேரி செல்கிறேன்.  அங்கே வழக்கம் போல் ஆரோவில் குடிலில் தங்குவேன்.  என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். 

பகலில் என்னோடு பேசிக் கொண்டிருக்கலாம்.  இரவு தங்குவதற்கு நீங்களேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  என் குடிலுக்கு அருகிலேயே பல நல்ல தங்குமிடங்கள் உள்ளன.  நான் தங்கியிருக்கும் குடில் ஒரு வனத்தில் இருக்கிறது என்பது அங்கே முன்பு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஒரு கிலோமீட்டர் வனத்தில் சென்றால் ஆரோவில் சாலை வரும்.  அங்கே பல உணவகங்களும் கடைகளும் உள்ளன.  என்னுடைய குடிலுக்கு ஸ்விக்கி ஆட்களும் வருகிறார்கள் என்பது ஒரு ஆச்சரியம்.

ஏற்கனவே வந்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை.  காரணம், என்னை சந்திக்க வருபவர்கள் அந்த சந்திப்பை ஒரு கேளிக்கையாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.  என்னுடைய எழுத்து ஓர் இயக்கம்.  ஊர் கூடித் தேர் இழுக்கும் விஷயம்.  தொடர்ந்து தொடர்பிலேயே இருக்க வேண்டும்.  நான் எதற்காகவாவது கண்டித்தால் உடனே நத்தை போல் சுருங்கிக் கொண்டு விடக் கூடாது.  சில நண்பர்கள் என் கண்டிப்பைக் கண்டு ஒதுங்கி விட்டார்கள்.  நஷ்டம் எனக்கு அல்ல. 

ராஸ லீலா நாவலில் பாரிஸ் பற்றிய பக்கங்களைப் பாருங்கள்.  அந்தப் பயணம் என்னுடைய சில நண்பர்களால்தானே சாத்தியம் ஆயிற்று?  அதே மாதிரிதான் சீலே பயணமும்.  பணம் பற்றிய சிந்தனையை விட்டு விடுங்கள்.  வேலை செய்ய வேண்டும்.  எக்ஸைல் நாவல் வெளிவர வேண்டும் என்று விடாமல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார் வினித்.  நான் துளிக்கூட ஆர்வம் காட்டவில்லை.  ஆனாலும் ஒரு கட்டத்தில் அவர் தொந்தரவு பொறுக்க முடியாமல் எக்ஸைல் வெளிவருவதற்காக அதை ஆற அமர உட்கார்ந்து எடிட் செய்து கொடுத்தேன்.  நாவலும் வந்தது.  இரண்டாம் பதிப்பு.  ஆனால் அப்படி வந்தது யாருக்கும் தெரியாது.  கிணற்றில் போட்ட கல்.  வினித்தும் அமைதி அடைந்து விட்டார்.  இது வினித் மீதான புகார் அல்ல.  ஏன், வினித் மட்டும்தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமா?  ஏன், கோவையிலோ, ஈரோட்டிலோ எக்ஸைல் நாவல் பற்றி ஒரு சந்திப்பு நடத்தக் கூடாதா?  ஈரோட்டில் உள்ள விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களை நான் கேட்டுக் கொண்டால் அவர்கள் கூட எக்ஸைல் நாவல் பற்றி ஒரு சந்திப்பு நடத்துவார்கள்.  ஆனால் சாரு வாசகர் வட்டமோ சோம்பேறிகளின் கூடாரமாகி விட்ட்து.  ஒரு விவாதக் கூட்டம் நடத்துவதற்கு எவ்வளவு காசு செலவாகும்?  என்னைக் கேட்டால் நான் கூட கொடுப்பேனே?  யாருக்கும் அக்கறை இல்லை.  ஆனால் பாண்டிச்சேரியில் என்னை சந்திக்க வாருங்கள் என்றால் நூறு பேர் பெயர் கொடுக்கிறார்கள்.  நான் என்ன சினிமா நடிகனா?

திருவண்ணாமலையில் கூட்டம் போடலாம்.  திருச்சியில் போடலாம்.  சினிமா நடிகர்களுக்கு அடுத்த படியாக சமஸும், ஜெயமோகனும்தான் ஊர் ஊராகப் போய் உரையாற்றுகிறார்கள்.  என்னால் அப்படிப் போக முடியாது.  ஆனால் எக்ஸைல் இரண்டாம் பதிப்பு வெளிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகப் போகிறது.  இன்னும் அதற்காக ஒரே ஒரு சந்திப்பு கூட நிகழவில்லை.  முதல் பதிப்பிலிருந்தே அதுதான் நிலை.  அந்த நாவல் பற்றி பாராட்டியோ, விமர்சித்தோ நான் இதுவரை ஒரு வார்த்தை படிக்கவில்லை.  அவலம்.  அவலம்.  எக்ஸைல் மாதிரி ஒரு நாவலை தமிழில் என்னைத் தவிர வேறு யாரேனும் எழுத முடியுமா?  உலக மொழிகளிலேயே கூட அப்படி ஒரு நாவல் கிடையாது என்பதை உலக இலக்கியத்தின் மாணவனாக நான் தைரியமாகச் சொல்லுவேன். 

எனவே, என்னை ஏற்கனவே சந்தித்தவர்கள் பாண்டியில் மீண்டும் சந்திக்க வேண்டாம்.  சீனியும் வினித்தும் மட்டுமே அப்போது என்னோடு இருக்கப் போகும் பழைய நண்பர்கள்.  புதியவர்களை பாண்டிச்சேரி அழைக்கிறேன்.  வருபவர்களுக்கு ஒரு நிபந்தனை.  என்னுடைய எக்ஸைல் நாவலைப் படித்திருக்க வேண்டும்.  ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் படித்திருக்க வேண்டும்.  யாரும் வராவிட்டால் வழக்கம் போல் சீனியோடும் வினித்தோடும் மட்டுமே பேசிக் கொண்டிருக்க நிறைய இருக்கிறது.

தொடர்பு கொள்ள: charu.nivedita.india@gmail.com