கருணையின் நிழலில்…ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலினூடே ஓர் பயணம்

ஃப்ரெஞ்ச் மொழி பேசும் நாடுகளில் எழுதப்படும் இலக்கியத்துக்கு francaphone literature என்று சொல்கிறார்கள்.  இதில் ஆஃப்ரிக்கப் பகுதி ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் நான் வாசிக்காத இலக்கியவாதி இல்லை.  இவர்களில் எனக்கு விருப்பமானவர்கள் முஹம்மது ஷுக்ரி, அப்துல்லத்தீஃப் லாபி மற்றும் தாஹர் பென் ஜெலோன். 

ஷோபா சக்தி ஃப்ரான்ஸில் வசித்து வந்தாலும் அவர் எழுதுவது ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தில் வராது என்று நினைக்கிறேன்.  இலங்கையில் ஃப்ரெஞ்சு மொழியும் பேசப்பட்டால் வரும்.  ஆனாலும் அவர் எழுத்து இலங்கையையும் ஃப்ரான்ஸையும்தான் சுற்றிச் சுற்றி வருகிறது.  இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நான் இதுகாறும் படித்த ஆஃப்ரிக்க ஃப்ராங்கஃபோன் இலக்கியத்தை எல்லாம் விட ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் என்ற நாவல் சிறந்து விளங்குகிறது.   

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஒரே அமர்வில் படித்த நாவலும் ஸலாம் அலைக்தான்.  எந்த அளவுக்கு அவர் சுவாரசியமாக எழுதுகிறார் என்பதற்கு இந்த ஒரே அமர்வு வாசிப்பு ஒரு உதாரணம்.  ஒரு மாஸ்டர் ஸ்டோரிடெல்லராக ஷோபா சக்தி இந்த நாவலில் இறங்கி விளையாடியிருக்கிறார். 

1948இல் – உலக யுத்தம் முடிந்த மூன்றாவது ஆண்டில் நார்மன் மெய்லரின் The Naked and the Dead என்ற நாவல் வெளிவந்த போது மெய்லரின் வயது இருபத்தைந்து.  ஆனால் அப்போது உலகமே இரண்டாவது உலக யுத்தத்தின் ஒரு இலக்கியப் பதிவுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தது.  அப்போதுதான் த நேக்கட் அண்ட் தெ டெட் வந்தது.  அப்போது அந்த நாவல் பெஸ்ட் செல்லர்.  ஆனால் இருபத்தாறு ஆண்டுகளாக நடந்த இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக வந்திருக்கும் ஸலாம் அலைக் பற்றித் தமிழ்நாட்டில் ஒரு சலனம் கூட இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

ஆரம்பத்தில் இந்த நாவலை ரத்தக் கண்ணீர் நாவலாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையுடன்தான் ஆரம்பித்தேன்.  ஏனென்றால், பொதுவாக போர் அனுபவங்களைக் கொண்டு எழுதப்படும் கதைகள், புதினங்கள் அனைத்தும் அவற்றைப் படிக்கும் அத்தனை பேரின் ரத்தத்தையும் சுண்டி இழுக்கும்.  கண்ணீர் விட வைக்கும்.  விருதுகளைக் குவிக்கும்.  புதினத்தை யாராலும் விமர்சிக்கவே இயலாது. 

காரணம், நாவலின் கதைசொல்லியான ஜெபானந்தனின் அன்னையையும் தமக்கையையும் இந்திய அமைதிப் படை பாலியல் வல்லுறவு செய்து கொன்று விடுகிறது.  நந்தனின் தங்கை இலங்கை ராணுவத் தாக்குதலில் இறந்து போகிறாள்.  தந்தையும் ஒரு குண்டு வீச்சில் இறந்து போகிறார்.  நந்தன் இலங்கையிலிருந்து தப்பியோடி, முறையான பாஸ்போர்ட் கூட இல்லாமல் தாய்லாந்து வந்து சேர்ந்து, அங்கேயிருந்து ஒரு போலி பாஸ்போர்ட் மூலம் ஃப்ரான்ஸ் வந்து சேர்கிறான்.  நாவலின் முதல் பாதி இந்தக் கதைதான். 

பாஸ்போர்ட் மட்டும் அல்ல, அவனிடம் அடையாள அட்டையும் இல்லை.  அவன் இந்த உலகில் வாழும் ஒரு மானுடன் என்பதற்கான சாட்சிப் பத்திரம் எதையுமே அவன் கொண்டிருக்கவில்லை.  அவனுடைய சொற்கள் மட்டுமே சாட்சி.  ஆனால் ஃப்ரெஞ்ச் சமூகத்துக்கு சொற்கள் மட்டும் போதாது.  அவனை இலங்கைக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது ஃப்ரெஞ்ச் அரசு.  விமானம் ஏறும் தருணத்தில் நடக்கும் ஒரு துர்சம்பவத்தால் – நாவல் முழுவதுமே துர்சம்பவங்கள்தான் – ஜெபானந்தன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதில்லை.  ஆனாலும் அவனுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரெஞ்ச் குடியுரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒரு எழுத்தாளன் எப்படி இருந்தாலும், என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அவனுடைய பிரதி எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.  ஏனென்றால், திருவள்ளுவர் பற்றியோ பாரதி பற்றியோ – ஏன், நமக்கு அருகில் வாழ்ந்த புதுமைப்பித்தன் பற்றியோ கூட அதிகம் தெரியாது.  அதையேதான் இந்த நூலின் முதல் பக்கத்தைப் புரட்டியதும் நினைத்தேன்.  புரட்டியதும் கண்ணில் பட்டது ஒரு மேற்கோள்.  ஒரு நல்ல புத்தகத்தைக் காட்டிலும் ஒரு கெட்ட மனிதன் சிறந்தவன்.  மக்ஸிம் கார்க்கி.  இதை விட முட்டாள்தனமான ஒரு கருத்து இருக்க முடியுமா?  ஹிட்லர் கெட்ட மனிதன்.  உலகில் எழுதப்பட்ட எத்தனையோ நல்ல புத்தகங்களை விட ஹிட்லர் சிறந்தவனா?  கலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரகராக இருந்த கார்க்கி வேறு எப்படிச் சொல்வார்?  ஓவியர்களின் கான்வாஸைக் கிழித்து ஏழைகளுக்கான ஆடைகளைத் தயார் செய்வோம் என்று சொன்னவர்தானே கார்க்கி?  இப்படி ஒரு மேற்கோளுடன் தொடங்கும் ஸலாம் அலைக் அந்த மேற்கோளுக்கு எதிராகவே தன் கதையைச் சொல்லிச் செல்கிறது.

நாவலின் ஒரு முக்கியமான பகுதி: 

”வெறி பிடித்த காட்டு விலங்குகள் எல்லாம் கூட்டமாக ஊருக்குள் நுழைந்தது போலத்தான் இந்திய இராணுவம் ஊளையிட்டு ஆடிக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு முகாம்களிலும் சிறையை உண்டாக்கி, இளைஞர்களைப் பிடித்து அதற்குள் அடைத்து வைத்தது.  தலைகளைத் துண்டித்து இரவோடு இரவாக நகரத்தின் சந்திகளில் வைத்து விட்டுப் போனது.  இந்திய வானொலியில் ‘அன்பு வழி’ என்றொரு நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பினார்கள்.  அந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்து, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றித் தலைமை விலங்கு போன்று சிலிர்த்துக் கொண்டு உரையாற்றினார். 

மண்டைதீவுக் கிராமசபை நூலகரான பத்தினியம்மாவைக் கடந்த தீபாவளியன்று கொன்று விட்டார்கள்… அய்ப்பசி 21-ம் தேதி பெரியாஸ்பத்தரிக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையால் கொலையானவர்களில் பத்தினியம்மாளும் ஒருவர்.  அவர் படுக்கையில் கிடந்தவாறே இராணுவத்தினரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு “அய்யா, நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு” என்று சொன்னாராம்.  அதன் பின்புதான் அவர்கள் ஒரு கையெறி குண்டைப் பத்தினியம்மாவின் மீது தூக்கிப் போட்டார்களாம்.  பத்தினியம்மா கொல்லப்பட்ட போது, அங்கிருந்த அவரது பதினான்கு வயது மகன் காயப்பட்டான்.  அவனுடைய உடம்பு குணமானாலும், மனநிலை குழம்பி கண்டல் காடுகளுக்குள் பூனைகளை விரட்டிக் கொண்டு திரிகிறான்.  எங்காவது ஒரு வெடிச் சத்தம் கேட்டால் மயங்கி விழுந்து விடுகிறான்.”

தொடர்ந்து இந்திய அமைதிப் படை அந்த மருத்துவமனையின் வார்டுகளுக்குள் புகுந்து இயந்திரத் துப்பாக்கிகளால் படுக்கைகளில் வைத்தே நோயாளிகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.  சரணடைகிறோம் என்று சொல்லிக் கொண்டு வந்த மருத்துவர் குழுவையும் முழுவதுமாக சுட்டுக் கொன்றார்கள்.  ஜெபானந்தனின் தந்தைக்கு கண்களில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.  அவரை ஒருவர் காப்பாற்றி பிரேதங்களோடு பிரேதமாகப் போட்டிருக்கிறார்.  ஒருநாள் முழுவதும் அவர் செத்தது போலவே அசையாமல் கிடந்து உயிர் பிழைத்திருக்கிறார்.  முழு மருத்துவமனையும் அன்றைய தினம் பிரேதக் கிடங்காகியிருக்கிறது.  அதனால் சடலங்களை எரிக்கும்போது தன்னையும் சேர்த்து எரித்து விடுவார்களோ என்று அஞ்சியபடியே கிடந்திருக்கிறார்  ஜெபானந்தனின் தந்தை.

“இளதாரி வயதுள்ளவர்களைப் பிடித்து வைத்து, பிரபாகரனைத் தெரியுமா, சுதந்திரப் பறவைகளைத் தெரியுமா என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பல மொழிகளாலும் கேட்டு உதைத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் (அமைதிப்படையினர்) ஒருவனைக் கொல்வதற்குக் காரணங்களே தேவைப்படவில்லை.  பெண்களைப் பொறுத்தவரை அமைதிப்படைக்கு குழந்தை, கிழவி என்றெல்லாம் வேறுபாடுகளேயில்லை.  வீடுகளுக்குள் புகுந்து சீரழித்து விட்டு, கழுத்தில் சுருக்குப் போட்டுக் கட்டி கூரையில் தொங்க விட்டார்கள்.  இப்போது இந்திய ராணுவத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் சேர்ந்திருந்தது.  இந்திய இராணுவமும் தமிழ் இயக்கங்களும் இதையெல்லாம் செய்யுமென்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், ஊரே கூடிச் சொன்னவனை மந்திகை பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் சேர்த்திருப்பார்கள்.”

இந்திய அமைதிப் படை தமிழ்த் தேசிய ராணுவம் என்ற லோக்கல் கூலிப் படையை உருவாக்கி தங்கள் கைப்பாவையான மாகாண சபை ஆட்சியை உருவாக்குகிறது.  அந்தக் கூலிப்படைக்காக பலவந்தமாகப் பிடித்து வரப் படுகிறான் ஜெபானந்தன்.  அதைத் தடுக்கும் நந்தனின் வயதான தந்தையைத் துப்பாக்கியால் அடித்துக் கையை முறிக்கிறான் தமிழ்த் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவன்.  (இந்த தேசிங்கு என்பவனைப் பின்னாளில் பாரிஸில் சந்திக்கிறான் நந்தன்.)

தமிழ்த் தேசிய ராணுவப் பயிற்சி முகாமிலிருந்து தப்பி வரும் ஜெபானந்தன் கொழும்பு வந்து தாய்லாந்து வழியாக ஃப்ரான்ஸ் வருகிறான். 

ஆனால் தமிழ்த் தேசிய ராணுவத்தில் ஒரு நாள் பயிற்சி எடுத்தவர்களைக் கூட விடுதலைப் புலிகள் தேடுகிறார்கள்.  ஆக, ஜெபானந்தனால் தன் வாழ்நாளில் ஒருபோதும் தன் சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாது. 

யாழ் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு சாட்சி:  ஒரு சமயம் யாழ் கோட்டைக்குள் இலங்கை ராணுவம் மாட்டிக் கொண்டு விடுகிறது.  கோட்டையைச் சுற்றி புலிப்படை.  இப்போது புலிப்படையை அழித்து கோட்டையில் இருக்கும் தம் வீரர்களை மீட்பதற்கு ஊரில் குண்டு போடுகிறது இலங்கை ராணுவம்.  மண்டைதீவுக்குள் நுழையும் ராணுவம் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போடுகிறது.  ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள். 

ஜெபானந்தன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகக் கொழும்பில் ஒளிந்திருந்தபோது அந்நகரம் எப்படி இருந்தது என்பதன் காட்சி:

கடற்கரையின் மின்கம்பத்தில் ஜெபானந்தனின் நண்பன் சேவற்கொடியின் பிரேதம் இரண்டு கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த நாள் நந்தனின் மற்றொரு சகாவான தெய்வேந்திரனின் சடலம் தெருவில் கிடக்கிறது. 

“அப்போது, தெருக்களிலும் கடற்கரைகளிலும் ஆறுகளிலும் நசுங்கிய தலைகள் கிடக்காத நாட்களேயில்லை.  துண்டிக்கப்பட்ட தலைகளின் நகரமாகக் கொழும்பு மாறியிருந்தது.  ஆமர் வீதியில் காரில் போய்க்கொண்டிருந்த ஒரு குடும்பத்தை யாரோ வழி மறித்துச் சுட்டுவிட்டு, கைக்குண்டையும் வீசிப் போயிருக்கிறார்கள்.  ஹவ்லொக் வீதியில் வைத்துப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.  அவருடன் இருபத்தைந்து பொதுமக்களும், ஆறு அதிரடைப் படையினரும் சிதறிச் செத்தார்கள்.  களுத்துறைச் சிறையில் ஏழு தமிழ்க் கைதிகளை அடித்தே கொன்று விட்டார்கள் என்றும் செய்தி பரவியது… யார் யாரைக் கொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.  அரசாங்கமே சில இரகசியக் கொலைப்படைகளை உருவாக்கி வேட்டையாட விட்டிருந்தது.  தமிழ் இயக்கங்கள், முஸ்லிம் ஜிஹாத் படை, காடையர்கள், சண்டியர்கள் எல்லோருமே துப்பாக்கிகளுடன் கொழும்பில் திரிந்து, இரத்த அருவியை நகரத்தின் மீது உண்டாக்கினார்கள்…”

***

நாவலின் இரண்டாம் பாகம் ஃப்ரான்ஸில் ஆரம்பமாகிறது.  ஜெபானந்தனுக்கு நிரந்தரமான அகதிக் குடியுரிமை அட்டை ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டுக்  கொண்டே இருக்கிறது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக வீசாவிலேயே காலத்தை ஓட்டுகிறான் நந்தன். 

பாரிஸில் நந்தன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதல் சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்து உமையாள் நந்தனை விட்டுப் பிரிகிறாள். 

ஏற்கனவே குறிப்பிட்டேன், ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் சோகக் கதைகள் மீதான என் அவநம்பிக்கை பற்றி.  ஆனால் அப்படிப்பட்ட கண்ணீரையெல்லாம் மீறி ஒரு இனத்தின் துயரமான கதை காவியமாக மாற வேண்டுமானால் ஒரு புதினம் எப்படி இருக்க வேண்டும்?  கருணையையும் காருண்யத்தையும் அது தனது ஒவ்வொரு அணுத் திரளிலும் கொண்டிருக்க வேண்டும்.  அது ஒன்றுதான் கண்ணீர்த் துளிகளை காவியமாக மாற்றும் மந்திர வித்தை. 

அநுராதபுரத்தில் விமானப் படைத்தளம் புலிப்படையால் தாக்கப்படுகிறது.  அந்தத் தாக்குதலைச் செய்த இருபத்தோரு புலிகளின் சிதைந்த உடல்களை இலங்கை ராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி திறந்த வண்டியில் காட்சிக்கு வைத்துப் புனித அநுராதபுர வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  அரைகுறையாகக் கரிந்து போன இருபத்தோரு இளம் நிர்வாண உடல்களை நந்தனின் மனம் கற்பனை செய்து பார்க்கிறது. 

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏன் குடித்துக் குடித்தே இளம் வயதில் சாகிறார்கள் என்ற ஒரு மன உளைச்சல் எனக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து கொண்டிருந்தது.  அதற்கான காரணத்தை என்னால் யூகிக்க முடிந்தது என்றாலும், ஜெபானந்தனின் வாழ்வை அணுக்கமாக இருந்து வாசிக்கும்போதுதான் என்னால் அதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

தங்கையை இலங்கை ராணுவம் கொன்று விட்டது.  உடல் கூடக் கிடைக்கவில்லை. அன்னையையும் தமக்கையையும் இந்திய அமைதிப்படை பாலியல் வல்லுறவு செய்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டது.  தந்தை குண்டடி பட்டுச் செத்து விட்டார்.  அடையாள அட்டையை அமைதிப்படையின் கூலிகளான தமிழ்த் தேசியப் படையைச் சேர்ந்த ஒருவன் பிடுங்கிக் கொண்டான். 

ஊர் இல்லை, உறவு இல்லை, தேசம் இல்லை.  இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒருநாள் நந்தன் உறங்குவதற்குக் கூட இடம் இல்லாமல் தனியே நிற்கிறான். 

அது இந்த நாவலின் இரண்டாம் பாகத்தின் மையப்புள்ளியான ஒரு இடம்.  பாரிஸில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசிக்கும் பகுதியான லா சப்பலின் ஒரு சதுக்கத்தில் ஒருநாள் கேக் ஒன்று வெட்டப்படுகிறது.  விமான வடிவில் இருந்த இருபத்தியிரண்டு கிலோ கேக்.  அநுராதபுரத்தில் இரபத்தியிரண்டு வானூர்திகள் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதை அதே அளவு நிறையில் கேக் வெட்டிக் கொண்டாட இருக்கிறார்கள்.  அப்போது நந்தன் கடும் போதையில் இருக்கிறான்.  அவனுக்கு போதையில்தான் அவனுடைய சுயமதிப்பு உறைக்கும்.  ஒருத்தர் கேக்கை வெட்டச் சென்ற போது அவரைத் தள்ளி விட்டுவிட்டு தன் பூட்ஸால் அந்தக் கேக்கை ஓங்கியடிக்கிறான் நந்தன்.  இருபத்தியிரண்டு கிலோ விமானம் சப்பளிந்து மேஜை முழுவதும் களியாகப் பரவ நந்தனின் காலணியிலும் க்ரீம் வெள்ளை நுரையாகப் பரவுகிறது.

“அங்க இருவத்தொரு பொடி பொட்டையள் செத்துக் கரிக்கட்டையாக் கிடக்கிதுகள்! இஞ்ச கேக் வெட்டிக் கொண்டாட்டமா நட்த்துறீங்கள்…”

இத்தனைக்கும் நந்தன் இலங்கைக்குப் போனால் அவனைப் புலிகள் அடித்தே கொன்று விடுவார்கள்.  ஏனென்றால், அவன் புலிக்கு எதிரான தமிழ்த் தேசிய ராணுவத்தில் இருந்திருக்கிறான்!

ஜெபானந்தனை அடிக்க வருகிறார்கள் புலி ஆதரவாளர்களான ஐந்தாறு இளைஞர்கள்.  இவன் மெத்ரோவுக்குச் சென்று தப்பி விடலாம் என்று ஓடுகிறான்.  போதையில் ஓட முடியவில்லை.  இளைஞர்கள் அவனைத் தாக்குகிறார்கள்.  ஒருத்தனின் கையில் கேக் வெட்டுவதற்காக இருந்த கத்தி அலங்காரத் தாளோடு இருப்பதைப் பார்க்கிறான்.  அப்போது தற்காப்புக்காகத் தன் பையில் இருந்த விஸ்கி போத்தலை எடுத்து அவன் மீது வீசுகிறான். 

விஸ்கி போத்தலால் ஒருவனைத் தாக்கியதற்காக நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான் நந்தன்.  அவன் குடிப்பதற்கே பெரிய அளவில் புகார் சொல்லிக் கொண்டிருந்த உமையாள் அவனைப் பிரிகிறாள்.  சிறையிலிருந்து விடுதலையாகி வீட்டுக்கு வரும்போது அவன் வீட்டில் வேறு யாரோ வசிக்கிறார்கள்.  உறங்குவதற்குக் கூட இடம் இல்லாமல் போகிறது.  பிறகு அவன் அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கும் உறங்குமிடத்துக்குப் போய் வரிசையில் நின்று இடம் பிடிக்கும் அவலத்தையெல்லாம் நான் இங்கே சொல்லக் கூடாது.   நீங்களே படித்துப் பார்க்க வேண்டும். 

அகதிகளுக்கு வாழ்வு கொடுக்கும் ஃப்ரான்ஸில் அகதிகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு நாவலிலிருந்து இன்னொரு இடம்:

சில காலத்துக்கு முன்பு, நாற்பத்தியிரண்டு ஆஃப்ரிக்க அகதிகளை நாடு கடத்த அரசு முடிவெடுத்தபோது அந்த அகதிகள் பாரிஸ் நகரின் மத்தியில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்துக்குள் புகுந்து கொண்டு கதவுகளைத் தாழிட்டுக் கொண்டார்கள்.  பசியோடும் தாகத்தோடும் பல நாட்கள் உள்ளேயே கிடந்தார்கள்.  பாரிஸ் நகரின் சிறப்பு ஆயுதப் படை தேவாலயத்தைச் சூழ்ந்து முற்றுகை இட்டது.  ஒரு நள்ளிரவில் தேவாலயத்தின் கதவுகள் பிளந்தெறியப்பட்டு, நாற்பத்தியிரண்டு அகதிகளும் தனி விமானத்தில் ஆஃப்ரிக்க கண்டத்துக்குக் கடத்தப்பட்டார்கள்.  அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதற்காக அவர்கள் எல்லோருக்கும் ஒருவித அரை மயக்க ஊசி போடப்பட்டே விமானத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.

***        

விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப் படை, இலங்கை ராணுவம் என்று எல்லா ராணுவ அமைப்புகளாலும் பாதிக்கப்பட்டு, தன் உற்றம் உறவு எல்லோரையும் இழந்து, ஒரு அனாதையாக, தேசமற்றவனாக நின்று கொண்டிருக்கும் ஜெபானந்தன் இழப்பதற்கு எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும் உயிர் இழந்து விட்ட இருபத்தோரு இளைஞர்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறான். 

இந்தக் கருணைதான் ஸலாம் அலைக் என்ற இந்த நாவல் முழுவதும் அடிச்சரடாக ஓடிக் கொண்டேயிருக்கிறது.  இந்தக் கருணைதான் ஸலாம் அலைக் என்ற இந்த நாவலை டால்ஸ்டாயின் தோளில் கொண்டு போய் அமர்த்துகிறது.

விலை 350 ரூ.

கிடைக்கும் இடம்:

கருப்புப் பிரதிகள்

B-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் ரோடு,

சென்னை – 5.

மின்னஞ்சல் முகவரி: karuppupradhigal@gmail.com