பணம் சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. நம்முடைய தேவைக்காக மற்றவரிடம் பணம் கேட்பது கௌரவக் குறைச்சல்தான். “அப்புறம் நீ ஏன் பணம் கேட்கிறாய்?” என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு தெருப்பாடகன். என் காலடியில் தட்டை வைத்து விட்டுப் பாடுகிறேன். கேட்கும் நீங்கள் என் தட்டில் காசு போடுகிறீர்கள். அல்லது, ஞானத்தை இழந்து விட்ட சமூகத்துக்கு எனக்கு அளிக்கப்பட்ட ஞானத்தை வழங்குகிறேன். அதற்கான தட்சணையைத் தருகிறீர்கள். தராவிட்டாலும் பக்ஷமில்லை. பணம் என் உலகில் இல்லை. ஆனால் உங்களுக்குப் பணம் தேவை.
குடும்பம் என்ற அமைப்பு ஒருவரை ஒருவர் சுரண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒன்று, பிள்ளைகள் பெற்றோரைச் சுரண்டுகிறார்கள். அல்லது, பெற்றோர் பிள்ளைகளைச் சுரண்டுகிறார்கள். என்னுடைய பல நண்பர்கள் – முப்பது வயது முடியாத இளைஞர்கள் – பெற்றோரின் சுரண்டலுக்குப் பலியாகிக் கிடக்கிறார்கள். தாங்கள் வசிப்பதற்காக மகன் வீடு கட்டித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு பிள்ளை அப்படி மூன்று ஆண்டுகளாக மாதம் இருபத்தையாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய மேற்படிப்பின் காரணமாக, பணம் அனுப்ப முடியவில்லை. ஒரே அடிதடி சண்டை. பிள்ளைக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. எனக்குத் தெரிந்த பையன்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர் சுமக்க வேண்டிய சிலுவையை நீங்கள் சுமக்காதீர்கள். அதேபோல் நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த சிலுவையை உங்கள் பெற்றோர் மேல் சாத்தாதீர்கள்.
நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். ஒரு மனிதன் பணத்தை எப்படிக் கையாளுகிறான் என்பதை வைத்தே நான் அவனை நண்பனாகத் தேர்ந்தெடுக்கிறேன். ஒரு நண்பர் – சென்னையில் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர் – எங்களோடு சாப்பிட வரும்போதெல்லாம் ஓசியிலேயே தின்பார். ஓசியிலேயே காஃபி கொடுப்பார். ஒருநாள் கூட காசு தந்ததில்லை. நாளாவட்டத்தில் அவரை என் நட்பு வட்டத்திலிருந்து தூக்கி விட்டேன். அடுத்தவரைச் சுரண்டும் புத்தியுள்ளவர்களை என் அருகில் வைத்துக் கொள்வதில்லை.
சமீபத்தில் ஒரு கண்ணாடி வாங்கினேன். அதன் ஃப்ரேமின் விலையை அறிய நேர்ந்த என் நண்பர் “ஏன் சார் இப்படிக் காசைக் கரியாக்குகிறீர்கள்?” என்று கேட்டார்.
அவர் தன் பிள்ளைகளுக்காகவே வாழ்பவர். அவருக்கு எத்தனைப் பணம் வந்தாலும் அதை பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவே செலவு செய்யத் துணிபவர். நல்ல philonthrapistஉம் கூட. அவர் பணத்தைச் சேர்த்து வைக்கலாம். ஆனால் நான் ஏன் பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டும்? என் வாழ்நாள் சேமிப்பை ஒரு மாத ஊதியமாக வாங்கும் நிலையில் இருக்கிறான் என் பிள்ளை. (அதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பது வேறு விஷயம்!) ஆக, அவனுக்கு என் பணம் தேவையில்லை.
சேர்த்து வைக்கும் பணம் எப்படி ஆகும் என்பதற்கு என் நைனாவே சிறந்த உதாரணம். எப்படி வாழக் கூடாது என்பதை நான் என் நைனாவின் மூலமாகவே அறிந்து கொண்டேன். பைசா பைசாவாக சேர்த்து நிலம் வாங்கி வீடு கட்டினார்கள். என் தம்பிக்குப் படிப்பு வரவில்லை. கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தான் என்பதால் இறுதிக் காலத்தில் அவனுக்கு வீட்டையும் நிலத்தையும் எழுதி வைத்து விட்டுக் காலமானர்கள். தம்பி நாற்பது வயதில் புற்றுநோயில் இறந்தான். தம்பி மனைவி அந்த நிலத்தையும் இடத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டாள். இப்பொது அந்த இட்த்தில் சில ரவுடிகள் வசிக்கிறார்கள்.
படப்பிடிப்புக்காக அஞ்சல் பொருள் கிடங்கு (போஸ்டல் ஸ்டோர்ஸ் டிப்போ) என்ற இடத்துக்குப் போனோம் அல்லவா? பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா தியேட்டர் அருகில் உள்ளது. நாற்பத்தைந்து ஏக்கர் நிலம். ஏகப்பட்ட நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. அது ஒரு வனம். நகரின் நட்ட நடுப் பகுதி. கீழ்ப்பாக்கம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதை அனுபவித்துக் கொண்டிருந்த ஜமீந்தாருக்கு ஐந்து புதல்வர்கள். ஐந்து புதல்வர்களுக்கும் வாரிசு இல்லை. ஐந்து பேரும் கலந்து பேசி கோவிலுக்கு எழுதி வைத்தார்கள். அந்தக் கோவில் சொத்தை தொண்ணூற்று ஒன்பது ஆண்டு போகியத்துக்கு எடுத்து அஞ்சல் துறை தனது அஞ்சல் பொருள் கிடங்கை அங்கே வைத்திருந்தது. போகிய காலம் முடிந்தது. அஞ்சல் துறைக்கும் கோவிலுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு. கோவிலுக்காக வாதாடியது தமிழக அரசு. காரணம், அறநிலையத் துறை அரசிடம் உள்ளது. முடிவில் கோவிலுக்கே சொத்து திரும்பியது. ஆக, இப்போது அந்த நாற்பத்தைந்து ஏக்கர் நிலமும் தமிழக அரசின் வசம் உள்ளது. இப்போது அந்த இட்த்தை பொதுமக்களுக்காக ஒரு பொருட்காட்சித் திடலாக மாற்றப் போகிறார்கள் என்று தகவல்.
நாம் நம் பிள்ளைகளுக்காக சேர்க்கும் சொத்து எல்லாமும் இப்படித்தான் ஆகும்.
இதன் நீதி என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்காதீர்கள். பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தை மட்டும் அளியுங்கள்.