கருணையின் நிழலில்…ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலினூடே ஓர் பயணம் (2)

இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் இருக்கிறது என்ற வாக்கியம் ஸலாம் அலைக் நாவலில் பல இடங்களில் வருகிறது.  அந்த ஒரே ஒரு கதை என்ன?

நம்பிக்கைகளுக்காகவும், கொள்கை-கோட்பாடு-சித்தாந்தம்-தத்துவம் போன்றவற்றுக்காகவும் மனிதரை மனிதர் கொலை செய்கிறார்கள்.  அதுதான் அந்த ஒரே ஒரு கதை.  அந்தக் கதைதான் இலங்கையில் நடந்தது.  இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.  வாழ்க்கை பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஜெபானந்தன் எதிரானவனாக இருப்பதால் மட்டுமே தான் உயிருக்குயிராய் காதலித்த உமையாள் அவனைப் பிரிகிறாள். (”தீராதது போலத் தோன்றும் அன்பு எந்தப் புள்ளியில் வெறுப்பாகச் சரிகிறது என்று யாரால்தான் அறிய முடியும்” என்கிறான் ஜெபானந்தன்.)  இலங்கையில் நடந்த அத்தனை படுகொலைகளும் ஒருவரின் நம்பிக்கைக்கு மற்றவரின் நம்பிக்கை எதிரானதாக இருந்ததாலேதான் நடந்தது.   இந்த நம்பிக்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அந்நியமாக இருக்கிறான் ஜெபானந்தன். 

இப்படி ஒரு கதாபாத்திரத்தை என் நாவல் வாசிப்பில் இதுவரை கண்டதில்லை.  அதன் காரணமாகவே ஸலாம் அலைக் டால்ஸ்டாயின் தோளில் அமர்ந்திருக்கிறது என்று எழுதினேன்.  தி.ஜானகிராமனை உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, உங்களால் மோகமுள் நாயகி யமுனாவை மறக்க முடியுமா?  அதேபோல் அம்மா வந்தாள் அலங்காரத்தை மறக்க முடியுமா?  அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ஜெபானந்தனும் உமையாளும்.  இலக்கியத்தில் இப்படி மிக அரிதாகவே நிகழ்கிறது.  கதை மாந்தர்களோடு தோய்ந்து தோய்ந்து உருகி உருகி வாசிப்பது அரிதாக நிகழும் அற்புதம்.  அது ஸலாம் அலைக்கில் நடந்தது.

வாழ்வில் என்னால் ஒருபோதும் மறக்க முடியாத நாவல் ஸலாம் அலைக்.