நிஜமான நான்…

ஒழுக்கத்துக்கும் நேரம் தவறாமைக்கும் நான் பேர் பெற்றவன்.  காலை ஏழு மணி என்றால் ஆறே முக்காலுக்கே போய் நிற்பேன்.  ஆனால் அந்த சாரு நிஜமான சாரு அல்ல.  சிறை வாழ்க்கையில் கிடைக்கும் ஒழுங்கு அது என்று இன்று புரிந்து கொண்டேன்.  காலை ஏழு மணிக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து விடுகிறேன் என்றேன்.  ஐந்து மணிக்கு ஹோமம்.  அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஏழுக்கு ஆஜராகி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.  ஆனால் உறங்குவதற்கே மூன்று மணி ஆகி விட்டது.  அனிருத் தான் காரணம். (பறக்கப் பறக்கத் துடித்தது.) எழுந்து கொள்ளும்போது எட்டரை.  பூனை வேலைகளை முடித்து விட்டுக் கிளம்பும்போது மணி பத்து.  இதுதான் நிஜமான சாரு. 

கிரஹப் பிரவேச முகவரி எது தெரியுமா? நிஜமாகவே அது ஒரு ட்ரீம் அட்ரஸ்.  லண்டனின் மேட்டுக்குடி இடமான நைட்ஸ் பிரிட்ஜைப் போன்ற இடம் சென்னையில் போட் க்ளப் என்று சொல்லலாம்.  அந்த போட் க்ளப்பை விட ட்ரீம் அட்ரஸ் நான் இன்று சென்ற இடம்.  நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தாஜ் ஓட்டலுக்குப் பக்கத்து வீடு.  பக்கத்து வீடு என்றால் தாஜ் ஓட்டலுக்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் ஒரே சுவர்.  அந்த அளவுக்குப் பக்கத்து வீடு.  ஆனால் வீட்டுக்கார்ருக்கு அங்கே வசிக்கக் கொடுத்து வைக்கவில்லை.  வீடு சிறிதாக இருக்கிறது என்று வாடகைக்கு விட்டு விட்டு இவர் மந்தைவெளியில் வாடகைக்கு வசிக்கப் போகிறார். 

ஊழ் பற்றி இளங்கோவை விட வேறு யாருக்கு அதிகம் தெரியும்?  சோதிடன் சொன்னான், இளையவன்தான் உலகப் புகழ் பெறப் போகிறான் என்று.  உடனே துறவியானான் இளையவன் இளங்கோ.  உலகப் புகழும் பெற்றான்.  ஒரு ட்ரீம் அட்ரஸை விலைக்கு வாங்கி, அங்கே வசிக்கவில்லை என்றால் என்ன சொல்வது?  என்னைக் கேட்டிருந்தால் நிச்சயமாக அந்த ட்ரீம் அட்ரஸில்தான் வசிக்கச் சொல்லியிருப்பேன்.  யார் நம்முடைய ஆலோசனையைக் கேட்கிறார்கள்?  நானே என்னுடைய ஆலோசனையைக் குப்பையில் போட்டு விட்டு சீனியைத்தான் கேட்கிறேன்.  அப்படியிருக்கும்போது மற்றவர்கள் கேட்பார்களா?  ஒரு கணவன் மனைவிக்கு மூன்று அறைகள் உள்ள வீடு போதாதா?  பெண்ணடிமைத்தனம் என்று பேச்சுக்குத்தான் சொல்கிறார்கள்.  கிச்சன் கவர்ன்மெண்ட்தான் கொடிகட்டிப் பறக்கிறதாகத் தெரிகிறது.  ட்ரீம் அட்ரஸை வாடகைக்கு விட்டு விடலாம் என்பது கிச்சனிலிருந்து வந்த யோசனையாம்.  ஓ, வீடு சின்னதாகத்தான் இருக்கிறது என்று நண்பரிடம் அழுத்தமாகச் சொல்லி விட்டு ஊத்தப்பத்தையும் பொங்கலையும் தின்று விட்டுத் திரும்பினேன்.

***

பறக்கப் பறக்கத் துடிக்குதே பற்றி பாட்டா அது, த்தூ என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் சீனி.  சூப்பர்.  இசை ரசனையின் உச்சத்தில் இருக்கிறார்.  அதற்கு நான் ”சீனிக்கும் ஜெயமோகனுக்கும் இசை பற்றித் தெரியாது” என்று எழுதினேன்.  ஜெயமோகனை ஏன் இழுத்தேன் என்றால் ஒருமுறை சஞ்சய் சுப்ரமணியனைப் பற்றி இக்காலத்தின் நாயகன் என்று எழுதியிருந்தார் ஜெயமோகன்.  ஆஹா என்று சந்தோஷமாக இருந்தது.  ஜெயமோகனுக்கும் தெரியாத ஒரு விஷயம் உலகத்தில் இருக்கிறது என்ற சந்தோஷம் அது.  அதைப் போலவேதான் சீனியின் விமர்சனத்தையும் எடுத்துக் கொண்டேன். 

ஜாஸும், ப்ளூஸும், ராக் அண்ட் ரோலும் தெரியாதவர்களால் இப்படி ஒரு பாடலை உருவாக்க முடியாது.  பாடலின் இடையில் அனிருத் இரண்டு இடங்களில் ஹே ஹே என்று கத்துவார்.  எக்ஸ்டஸியின் உச்சம் அது.  மேஜிகல் க்ரூவ்ஸ் டான்ஸ் கம்பெனி போன்ற பல டான்ஸ் கம்பெனிகளில் இந்தப் பாடலுக்கு விதவிதமாக கொரியோக்ராஃப் செய்து ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு நண்பரிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேசினேன்.  காலையிலிருந்து இந்தப் பாடல்தான் ரிபீட் மோடில் ஓடுகிறது என்றார். 

முதல் முறையாக பொதுஜன ரசனைக்கும் எனக்கும் ஒத்துப் போகிறது.   சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் உல்லுக்குல் என்று உச்சரிப்புப் பிழையோடு தனுஷ் பாடுவது பற்றித் திட்டி எழுதியிருப்பார். வெகுஜன இசையில் மொழி இலக்கணம் உச்சரிப்பெல்லாம் பார்க்கக் கூடாது.