“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா?
மேற்கண்ட அபிப்பிராயத்தை அனோஜன் பாலகிருஷ்ணன் ஷோபா சக்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். அனோஜனின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது. அனோஜன் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்று எல்லோருக்கும் தெரியும்.
இலக்கிய விமர்சனத்தில் எனக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. ஏனென்றால், கடந்த முப்பது ஆண்டுகளாக சாருவுக்கு இலக்கியத்திலேயே இடம் இல்லை என்று சொல்லி வந்தார்கள். இப்போதுதான் கூட்டத்தில் குசு விடுவது போல மெல்லிய குரலில் என் பெயரை உச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
க.நா.சு. பதினைந்து நாவல்கள் எழுதியிருக்கிறார். இப்போது யாருமே அந்த நாவல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை. அதில் பல நாவல்கள் தமிழின் சமகால இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற வேண்டியவை. இளம் எழுத்தாளர்கள் கூட க.நா.சு.வின் நாவல்களைப் படிப்பதில்லை. காரணம், அவர் வாழ்நாள் பூராவும் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். அதன் காரணமாக க.நா.சு.வுக்கு இலக்கிய விமர்சகர் என்ற பட்டத்தையே வழங்கி விட்டார்கள்.
எட்டு எட்டரை கோடி பேர் பேசுகின்ற தமிழ் மொழியில் ஆயிரம் ரெண்டாயிரம் பேர் படிக்கின்ற ஒரு துக்கிணியூண்டு வட்டத்தில் எனக்கு இலக்கிய விமர்சகர் என்ற பட்டம் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன அனோஜன் தம்பி?
எழுத்தாளர்களின் மதிப்புரைகள் பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது தம்பி அனோஜன். ஜெயமோகன் என்ன உலக இலக்கியம் தெரியாதவரா? அவர் ஒருமுறை தஞ்சை ப்ரகாஷின் எழுத்து போர்னோ எழுத்து போல் உள்ளது என்று சொல்லவில்லையா? நான் ஷோபாவின் எழுத்தைப் பாராட்டினால் அதற்கு உங்களுக்கு எங்கே எரிகிறது? பாராட்டைக் கூட கொண்டாட முடியாத அளவுக்கு உங்கள் மனம் சீழ் பிடித்து விட்டதா அனோஜன்? ஒருத்தன் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதை எங்கே கற்றீர் தம்பி?
எத்தனை பேரை நான் அப்படிப் பாராட்டி விட்டேன்? தமிழ் இளம் எழுத்தாளர்கள் யாரையும் நான் படித்ததில்லை. நான் தமிழ் இலக்கிய வாசகன் அல்ல. நான் படிப்பதெல்லாம் ஃப்ராங்கஃபோன் இலக்கியம்தான். அந்தத் துறையில் நான் படிக்காத ஆளே கிடையாது. தமிழில் நான் படிப்பதெல்லாம் செவ்விலக்கியமும் தி.ஜா., அசோகமித்திரன் போன்ற பழைய ஆட்களையும்தான். இப்போதுதான் தேவிபாரதியின் நொய்யலையும் இரா. முருகனின் மிளகுவையும் எடுத்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் என் நண்பனும் என் வளர்ப்புமான வளன் அரசுவின் யூதாஸ் நாவலைப் படித்தேன். ஜெர்மனியில் வசிக்கும் என் நண்பர் சாதனாவின் சிறுகதைகள் எனக்குப் பிடித்தமானவை, உலகத் தரமானவை. அவ்வளவுதான். மற்றபடி நான் தமிழில் எழுதும் ஒரு உலக எழுத்தாளன். இல்லாவிட்டால் நான்கைந்து ஆண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asiaவிலும் அதன் மற்றொரு சக பத்திரிகையான ArtReviewவிலும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவிலும் ஆர்ட்ரெவ்யூவிலும் ஒரே சமயத்தில் கட்டுரைகள் கேட்கிறார்கள். அதற்கு ஒரு கட்டுரை. இதற்கு ஒரு கட்டுரை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் ஒரு பிரபலமான ஆங்கிலப் பதிப்பாளரிடம் கை குலுக்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உங்கள் பெயரா எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். Allan Sealy என்ற பிரபலமான ஆங்கில எழுத்தாளர் என்னுடைய மார்ஜினல் மேன் நாவலுக்கு என்ன மாதிரி முகப்புரை எழுதிக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? மேலும், நான்கு ஆண்டுகளாக ஏஷியன் ஏஜ் என்ற பத்திரிகையில் வாரக் கட்டுரைகள் (பத்தி) எழுதி நானேதான் நிறுத்திக் கொண்டேன். நிறுத்திக் கொண்டதன் காரணம் என்ன தெரியுமா? ஏஷியன் ஏஜ் தென்னிந்தியாவில் டெக்கான் கிரானிகிள் என்ற பெயரிலும் வட இந்தியாவிலும் லண்டனிலும் ஏஷியன் ஏஜ் என்ற பெயரிலும் வெளிவருகிறது. என்னுடைய கட்டுரை இந்திய அளவில் வெளிவந்தாலும் சென்னைப் பதிப்பில் வராது. காரணம் கேட்டபோது, சென்னைப் பதிப்பின் அலுவலகத்துக்கு ஆபத்து என்றார்கள். அந்த அளவுக்கு சூடான விஷயங்களை எழுதிக் கொண்டிருந்தேன். உதாரணமாக, மாடு பிடி விளையாட்டுக்காக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது நான் மாடுகளுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் எழுதினேன். என் கட்டுரையை என் ஊரில் போட முடியாது என்றால், இனி எழுத மாட்டேன் என்று நிறுத்திக் கொண்டேன்.
அதனால்தான் சொல்கிறேன், நான் தமிழில் எழுதும் உலக எழுத்தாளன். சந்தேகம் இருந்தால் ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங் என்று தட்டிப் பாருங்கள். நான் யார் என்று தெரியும். எனவே தமிழ் எழுத்தாளர்களின் அங்கீகாரமோ பொடியன்களின் பாராட்டுதலோ எனக்குத் தேவையில்லை.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் என் பயோடேட்டாவை என்னையே எழுத வைத்துக் கொண்டிருப்பீர்கள் தம்பிகளா?