அலுப்பூட்டும் இலக்கிய சூழல்

உலகில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பலவற்றில் உங்கள் பெயர் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இனி அதை அப்படியே வைத்திருக்கவே அவர்கள் விரும்புவார்கள்.தனி ஒரு எழுத்தாளன், தான் மட்டுமே தன்னை இலக்கியத்தில் ஒரு இடத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு இடைவிடாத நிருபணங்களை தந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. காழ்ப்பு கொண்டவர்கள் அவனை எழுத்து சார்ந்து மதிப்பிடாமல், இப்படி இடுப்புக்கு கீழேயே தாக்கி கொண்டிருக்க இதுவே காரணம்.அதுவும் மிகக்குறுகிய ஜானரில் மட்டும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் வேறுவகை எழுத்தில் ஒவ்வாமை கொண்டிருப்பதும், தங்கள் நிலைப்பாடு மட்டுமே சரி என்று எண்ணுவதும் தமிழ் இலக்கிய விமர்சன சூழலை சாக்கடையாக வைத்திருக்கிறது. இதில் அச்சுப் பிழை திருத்துபவர்களும் விமர்சகர்கள் என்ற நினைப்பில் உள்ளே வந்துவிடுகிறார்கள்.

அலுப்பூட்டும் இலக்கிய சூழல்.

மேற்கண்ட குறிப்பை செல்வகுமார் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். சப்தரிஷி ஃபோனில் அழைத்து ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார். மனம் நிறைந்தது. யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லை என்பது அவர் பேசியதன் சுருக்கம்.

”அது எப்படி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்னைப் பற்றிச் சொன்னதையே (நீ எழுத்தாளன் இல்லை!) அடுத்த தலைமுறை ஆட்களும் வந்து சொல்கிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, வேறொன்றுமில்லை” என்று சப்தரிஷியிடம் சொன்னேன்.