விமர்சனத்தில் ஒரு இடம்!

நேற்று பிறந்த சிறுவர்களுக்கு நான் யார் என்று தெரியாது இல்லையா, அதனால் அவர்களுக்கு ஒரு விமர்சகனாகவும் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இதை அவர்கள் என் பயோடேட்டாவாகக் கருதாமல் ஒரு பாடத்திட்டம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது. 

சர்வதேச இலக்கியம், இசை, நாடகம் குறித்து நான் எழுதியிருக்கும் ஏராளமான அ-புனைவு நூல்களை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன.  சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் புதியவர்களுக்கு அந்த்த் தொகுதிகள்தான் ஆகச் சிறந்த அறிமுகமாக இருக்கும்.  ஏனென்றால், பெருமாள் முருகன், சுகுமாரன், சி. மோகன், ஜெயமோகன் ஆகியோரது விமர்சன/அறிமுக/மதிப்பீட்டு நூல்களையெல்லாம் படித்து அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளே பழுப்பு நிறப் பக்கங்கள். (நால்வருக்கும் என் நூலில் நன்றியும் சொல்லியிருக்கிறேன்).  ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தொணி பற்றி நான் எழுதிய கட்டுரை அந்த நாவலைத் தமிழ் இலக்கியத்துக்கு மீட்டுத் தந்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.  (மற்றவை சி.மோகன், ந. முருகேச பாண்டியன், ஜெயமோகன் எழுதியவை) இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்காவிட்டால் அந்த நாவல் தமிழ்ச் சூழலில் காணாமலே போயிருக்கும்.  அப்படிக் காணாமல் அடிக்கப்பட்ட படைப்புகளும் படைப்பாளிகளும் அநேகம். 

உதாரணமாக, சார்வாகன்.  அவர் பெயரையே மறந்து விட்டிருந்தது இலக்கிய உலகம்.  இலக்கிய உலகத்தைப் பழி சொல்ல முடியாது.  அவருடைய தொகுப்பை வெளியிடுகிறேன் என்று சொல்லி வாங்கி வைத்துக் கொண்டு இருபது ஆண்டுகளாக வெளியிடவில்லை க்ரியா ராமகிருஷ்ணன்.  சார்வாகனும் எழுதுவதை நிறுத்தி விட்டார்.  நற்றிணை யுகன் தான் பிறகு முழுத் தொகுப்பையும் கொண்டு வந்தார்.  அப்படியும் யாருக்கும் சார்வாகன் பற்றித் தெரியவில்லை. 

அந்த நிலையில் பழுப்பு நிறப் பக்கங்களில்தான் சார்வாகனின் படைப்பு உலகம் மீண்டும் அறிமுகம் ஆனது.  ஒருவரது அடிப்படை நம்பிக்கைகளையே மாற்றி அமைக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்ட சார்வாகனின் அமர பண்டிதர், முடிவற்ற பாதை போன்ற கதைகளைப் பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறேன். 

அடுத்த முக்கியமான கட்டுரை தஞ்சை ப்ரகாஷ் பற்றியது.  தஞ்சை ப்ரகாஷை எல்லோரும் அறிவர்.  ஆனால் அவருடைய நாவல்களையும் சிறுகதைகளையும் பெரும்பாலானவர்கள் படித்திருக்க மாட்டார்கள்.  அவர் பற்றிய புறக்கணிப்பு எந்த அளவுக்கு இருந்ததென்றால், அவர் யாரைத் தன்னுடைய குருவாகக் கொண்டிருந்தாரோ அந்த குருவுக்கே தஞ்சை ப்ரகாஷ் நாவல்கள் எல்லாம் எழுதியிருக்கிறார் என்று தெரியாது!

வெங்கட் சாமிநாதனைத் தன் குருவாகக் கொண்டவர் தஞ்சை ப்ரகாஷ்.  அந்த குருவுக்காகவே வெ.சா.எ. என்று ஒரு பத்திரிகையும் நடத்தினார்.  எல்லாமே சொத்தை விற்றுத்தான்.  அது என்ன வெ.சா.எ.?  வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்.  அதுதான் பத்திரிகையின் பெயர்.  வெங்கட் சாமிநாதன் மட்டுமே அதில் எழுதுவார்.  முறம் சைஸில் நாற்பது ஐம்பது பக்கம் இருக்கும்.  அப்பேர்ப்பட்ட வெங்கட் சாமிநாதன், தஞ்சை ப்ரகாஷ் இறந்ததும் ”அடடா, தஞ்சை ப்ரகாஷ் நாவல் எல்லாம் எழுதியிருக்கிறாரா? தெரியாமல் போயிற்றே?” என்று இரங்கல் கட்டுரை எழுதினார்.  இப்படியாகத்தான் புறக்கணிக்கப்பட்டார் ப்ரகாஷ்.  

https://bit.ly/3wEJoUM

’அங்கிள்’, ‘கொலைஞன்’, ‘சோடியம் விளக்குகளின் கீழே’, ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’, மேபல், பற்றி எரிந்த தென்னை மரம், கடைசிக்கட்டி மாம்பழம், பொறா ஷோக்கு போன்ற ப்ரகாஷின் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.

இப்படியே க.நா.சு., சி.சு. செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், ந. சிதம்பர சுப்ரமணியன், லா.ச.ரா. என்று ஏராளமான முன்னோடிகளை அறிமுகம் செய்திருக்கிறேன்.  குறிப்பாக எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், ஜி. சம்பத்தின் இடைவெளி குறித்த என் கட்டுரைகள் மிக முக்கியமானவை. 

ந. சிதம்பர சுப்ரமணியனின் இரண்டு நாவல்களையும் (மண்ணில் தெரியுது வானம், இதய நாதம்), செல்லப்பாவின் சுதந்திர தாகத்தையும் நான் கிட்டத்தட்ட மீட்டு எடுத்தேன் என்றே சொல்ல வேண்டும்.  நான் எழுதாவிட்டால் ந. சிதம்பர சுப்ரமணியனின் இரண்டு நாவல்களும் செல்லப்பாவின் சுதந்திர தாகமும் காணாமலே போயிருக்கும். இயேசு சபை ஊழியர்களைப் போல இவர்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசியும் இருக்கிறேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட பெருந்தொற்றுக் காலத்தில் ஸூம் மூலம் கோபி கிருஷ்ணன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமணியன், நகுலன், புதுமைப்பித்தன் ஆகியோரை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவர் பற்றியும் மூன்றரை மணி நேரம் பேருரை ஆற்றினேன்.  இதில் புதுமைப்பித்தன் பற்றி மட்டும் ஏழு எட்டு மணி நீளும் உரை. 

இதையெல்லாம் தெரிந்து கொள்ள முயலாமல் போக்கிரித்தனம் செய்வதுதான் அனோஜன் இலக்கியத்திலிருந்து கற்றுக் கொண்டதா?  அடுத்தவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? 

சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகனாக ஆங்கிலத்தில் வந்துள்ள பல போர் நாவல்களை நான் படித்திருக்கிறேன்.  அவ்வகை நாவல்களில் ஆகச் சிறந்ததாக எனக்குத் தெரிந்தது ஷோபா சக்தியின் ஸலாம் அலைக்.  அதை எழுதினேன்.  நான் எழுதியதை ஷோபா தன் பக்கத்தில் பகிர்ந்தார்.  இதில் உங்களுக்கு எங்கே எரிகிறது அனோஜன்?  மூணாம் கிளாஸ் படிக்கும் போது மூக்கு ஒழுகியதே ஷோபா, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று ஆரம்பிக்கிறீர்களே?   உலகத்தில் நீதி மன்றம், காவல் துறை எல்லாம் இல்லாவிட்டால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்தே கொலை செய்து கொள்வார்கள்.  ஒரு சில தினங்களிலேயே பூமிப் பந்தில் ஒரு மனித ஜீவன் கூட இருக்க மாட்டார்.  அப்படி நீதிமன்றம், காவல் இரண்டும் இல்லாத ஒரு நிலை வந்தால் சக மனிதனைக் கொலை செய்ய உயரும் முதல் கரம் உங்களுடையதாகத்தான் இருக்கும் அனோஜன்.  அந்த அளவு வன்மத்தை உங்களுடைய நாலு வரி காமெண்ட்டில் நான் கண்டேன். 

பொதுவாக ஃபேஸ்புக்கில் யாராவது என் பெயரைக் குறிப்பிட்டாலே கீழே காமெண்ட்டில் வந்து அந்தத் தே… மகனை என்று ஆரம்பித்து என்னை வண்டை வண்டையாகத் திட்டி வைப்பார்கள். என்னைப் பற்றி பாராட்டோ திட்டோ கூட வேண்டாம், சும்மா சாரு நிவேதிதா என்று போட்டாலே போதும்.  கீழே காமெண்ட்டில் வந்து குப்பை குப்பையாகத் திட்டுவார்கள்.  அப்படித் திட்டுவதையெல்லாம் பார்ப்பது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு.  அப்படித்தான் ஷோபா சக்தி என் கட்டுரையைப் பகிர்ந்தளித்ததும் கீழே யார் யார் நம்மைத் திட்டியிருக்கிறார்கள் என்று ஆர்வத்துடன் பார்த்தேன்.  பார்த்தால் அனோஜன்! 

இப்போது உங்கள் காமெண்ட்டை ஷோபா சக்தி நீக்கி விட்டார் போல.  அதனால்தான் அதை என் பக்கத்தில் எடுத்துப் போட்டு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அனோஜன்.  உருப்பட்டு விடுவீர்கள்…

(பின்குறிப்பு 1: இந்த என்னுடைய குறிப்பில் ஒரு ஆபத்து உள்ளது.  என் எழுத்தில் பரிச்சயம் கொண்ட பலரும் சாருவின் புனைவு நூல்களை விட அ-புனைவு நூல்களே பிடித்திருப்பதாகத் தவறாமல் சொல்கிறார்கள்.  அப்படியே போனால் என்னையும் க.நா.சு. மாதிரி விமர்சகன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று கூட பயப்படுகிறேன்.  அந்த பயத்தோடுதான் இதை எழுதியிருக்கிறேன். பின்குறிப்பு 2: என்னையே எழுத்தாளனாக ஏற்க மறுக்கின்ற நிலையில் அராத்துவை எழுத்தாளனாக ஏற்பார்களா என்ன?  அராத்து எழுதிய தற்கொலைக் குறுங்கதைகள் என்ற நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த விமர்சனக் கட்டுரைகளில் ஒன்று.)