விநாயகர் சதுர்த்தி

இந்து கடவுள்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் விநாயகர். அப்பனைப் போல் சுடுகாட்டில் இல்லாமல் குளத்தாங்கரையில் போய் அமர்ந்தவர் அல்லவா, யாருக்குப் பிடிக்காமல் இருக்கும்?

ஸ்விக்கி மூலம் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இந்த டன்ஸோ இருக்கிறதே, அது ஒரு புரட்சி. நேற்று கூட தற்சமயம் கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீராம் டன்ஸோ மூலம் ஜார்ஜ் டவுனிலிருந்து மீன் தலைக் குழம்பு அனுப்பினார். அது ஒரு பெரிய கதை. டைனோசார் தலை சைஸ் இருந்தது. இன்று வேறு விநாயகர் சதுர்த்தி. யாராவது விநாயகர் சதுர்த்தி கொண்டாடாத ஆளைப் பிடித்து அவ்வளவையும் கொடுக்க வேண்டும். ஆறு பேர் ஆற அமர சாப்பிடலாம். அவ்வளவு வந்தது.

போகட்டும். இன்று பணிப்பெண்ணை வைத்து வீடெல்லாம் சுத்தப்படுத்தியாயிற்று. இரண்டு குத்துவிளக்குகளையும் வெள்ளிக் குத்துவிளக்கையும் ஏற்றியாயிற்று. பணிப்பெண் மூலம் பூமாலையும் வாங்கிப் போட்டாயிற்று. படைப்பதற்கு கொழுக்கட்டையை ஸ்விக்கி மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்று சுலபமாக நினைத்திருந்தேன். பார்த்தால் ஒரு கடையிலும் கொழுக்கட்டை இல்லை. சுஸ்வாதோ ஸ்விக்கியிலேயே இல்லை. இன்று பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை இல்லாமல் நான் தினமும் குடிக்கும் அரிசிக் கஞ்சிதான் வைத்துப் படைத்தேன். பிள்ளையாருக்கு நான் செல்லம் என்பதால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்ற தைரியம்தான்.