குடியும் விருதும்

கீழே காணும் கவிதையை டார்ச்சர் கோவிந்தனுக்கு அனுப்பினேன். கேவலம் கேவலம், இதெல்லாம் ஒரு கவிதையா என்றார். ஐயோ, நீங்கள் எழுதியதிலேயே சிறந்த கவிதை இதுதான் என்று —————————சொன்னாரே என்றேன். (டேஷில் ஒரு கவிஞரின் பெயர்) உங்களுக்கு ஜால்ரா கூட்டம்தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து இதை வெளியிடாதீர்கள் என்றார் மீண்டும் டார்ச்சர். டார்ச்சர் சொல்வதையெல்லாம் கேட்டால் நான் மைலாப்பூர் மாமா மாதிரிதான் ஆவேன். அதனால் மேற்படி கவிதையை இங்கே வெளியிடுகிறேன்.

எனக்கு ஒரு விருது கிடைத்தது
விழாவுக்குப் போகும்போது குடித்து விட்டுப் போகாதே
என்றாள் தோழி
எனக்குக் கிடைக்கும் முதல் விருது
குடிக்காமல் எப்படிப் போவது என்றேன்
நீ குடித்தால் வேறு ஆள் மாதிரி ஆகி விடுகிறாய்
என்பது உனக்குப் புரிகிறதா என்று கேட்டாள்
ஆம் புரிகிறது என்றேன்
அதனால்தான் சொல்கிறேன் குடித்து விட்டுப் போகாதே
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி கவிதை வாசிக்கும் அரங்குகளில்
ஒரு மண் கலயம் வைக்கச் சொல்லுவான்
அதீத குடியினால் வாந்தி எடுப்பதற்காக
தெரியுமா உனக்கு?
அது அமெரிக்கா, நீ தமிழ்நாடு என்றாள்
சரி, எனக்குப் பதிலாக குடிக்காத யாராகவாவது போய் வருகிறேன் என்றேன்