விருது பற்றி…

விருது பற்றி பலரும் எழுதி விட்டார்கள். எதற்குமே எதிர்வினை காட்டாத காயத்ரியே எழுதி விட்டாள். எல்லாவற்றிலும் ஆகப் பிடித்ததாக வளன் அரசு எழுதியதைச் சொல்வேன். ஏனென்றால், அவன் என்னை மிக அரிதாகவே சந்தித்திருக்கிறான். ஒருமுறை என் வீட்டுக்குக் கீழே வந்து நின்று கொண்டு கீழே வாருங்கள் அப்பா என்றான். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு முந்தின நாள்தான் நான் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு காலை ஒன்பது மணிக்கு வந்திருந்தேன். வீடே அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. வளனைப் பார்த்து அப்போது ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.

இல்லை வளன், நீ அமெரிக்கா போ, பிறகு பார்க்கலாம் என்றேன்.

அந்தப் பிறகு மீண்டும் ஐந்து ஆண்டுகள் சென்றே வந்தது. ஆனால் இந்த முறை அவந்திகா மும்பை சென்றிருந்ததால் நல்லபடியாகப் பார்க்க முடிந்தது.

இவ்வளவு சிறிய சந்திப்புகளில் அவன் என்னை அவதானித்திருந்தது என்னை நெகிழ வைத்தது. இப்போது போகன் சங்கரும் என்னை நெகிழ வைத்து விட்டார். ஏனென்றால், ஜெயமோகனின் வலது கரமே இப்படித்தான் சொன்னார். அதாவது, நான்தான் அவரை ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்தேனாம். சே, இப்படியெல்லாம் நடக்கும் என்று அப்போதே தெரியாமல் போச்சே!

இனி போகன் சங்கர்:

விருது அறிவிப்பை ஒட்டி ஆசான் தளத்தில் வந்திருக்கும் சில கடிதங்களை வாசித்தேன்.சாருவின் படைப்புலகத்தின் ஆழம், நீளம், அகலம், உயரம் பற்றிய அலசல்கள் இருக்கும் என்று பார்த்தால் எல்லாம் ‘எங்கே சுத்தினாலும் ரங்கனைச் சேவி’கணக்கில் அவர் உங்களைத் திட்டிக்கொண்டே இருந்ததால்தான் நான் உங்களைத் தெரிந்துகொண்டு படிக்க ஆரம்பித்தேன்.சாருவுக்கு நன்றி என்ற ரீதியில் இருக்கின்றன.

இப்படியே போனால் சுரேஷ் வெங்கடாத்ரிக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்துவிடுவார்களா?