அன்புள்ள சாரு
’நான்தான் ஓளரங்ஸேப்’ நாவல் இன்று கிடைக்கப்பெற்றேன்.
என் மகிழ்ச்சியை பின்னால் ஏற்பட்ட திகைப்பு பல மடங்காக்கியது. திகைப்புக்கு காரணம், புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்ததுதான்.
சூழ்நிலை காரணமாக எந்த சிறப்புத் திட்டத்திலும் என்னால் பங்கேற்கமுடியவில்லை. எனினும், புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்திருக்கிறது. முன்பதிவு செய்த அனைவருக்கும் அவர்களின் பெயர் எழுதி, கையெழுத்திட்டு தருவது உங்கள் அன்பையும் அக்கரையையுமே காட்டுகிறது.
நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன்.
வேம்பு. கே.
அன்புள்ள வேம்பு,
இதேபோல் இன்னும் பலரும் எழுதியிருந்தார்கள். மொத்தம் முந்நூறு புத்தகங்களில் கையெழுத்திட்டேன். 230 பேர் முன்பதிவுக்குப் பணம் செலுத்தியிருந்தார்கள். மீதி எழுபதிலும் என் கையெழுத்தை மட்டும் போட்டேன். 230இலும் அந்த நூலை வாங்கியிருப்பவர்களின் பெயரையும் குறிப்பிட்டு கையெழுத்திட்டேன். ஒவ்வொரு புத்தகத்திலும் அது சென்றடையும் வாசகரின் முகவரியையும் பார்த்த பிறகே கையெழுத்துப் போட்டேன். அந்த 230இலும் நான் கவனித்த சில விஷயங்கள்: 230இல் பத்தே பேர்தான் பெண்கள். அப்படியானால் பெண்கள் நவீன இலக்கியம் படிப்பதில்லையா? அப்படிச் சொல்ல முடியாது. எனக்கு ஆண்களை விட பெண் வாசகிகளே அதிகம். ஆனாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்துப் புத்தகம் வாங்க முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள் பெண்கள் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.
இரண்டாவதாக கவனித்த விஷயம், 230இல் ஒன்றிரண்டு முஸ்லிம் வாசகர்களைத்தான் பார்க்க முடிந்தது. சமகால இலக்கியம் இன்னும் அவர்களைச் சென்றடையவில்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
என் நண்பர் சொன்னார், ஒரு எழுத்தாளன் இப்படி 230 பிரதிகளில் கையெழுத்துப் போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வித்யா என்னிடம் கேட்டார், எத்தனை புத்தகங்களில் கையெழுத்துப் போட முடியும் என்று. ஆயிரம் என்றேன். ஆனால் அன்றைய தினம் அச்சகத்திலிருந்து முந்நூறு பிரதிகளே வந்திருந்தன. முந்நூறிலும் போட்டேன்.
ஒருவேளை இரண்டாயிரம் மூவாயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தார்கள் என்றால், கையெழுத்துப் போட முடியாது. அது சாத்தியம் இல்லை. இருநூறு முந்நூறு என்றால் போட வேண்டியதுதான்.
சாரு