எழுத்து, வாழ்க்கை – இரண்டின் நோக்கமும் என்ன?

டர்ட்டி ரியலிஸம் என்றொரு எழுத்து வகைமை உண்டு. இதை, சமகால வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் இலக்கியம் என்று கூறலாம். ஒரு நகைமுரண் என்னவென்றால், டர்ட்டி ரியலிஸ எழுத்தாளர்களும் அவர்களது சமகாலத்தில் சக எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும்  புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருப்பது. அதன் பிதாமகன் என்று அறியப்படுபவர் ‘சார்ல்ஸ் பூகோவ்ஸ்கி’. அவ்வகையில், அரவிந்தன்களும் ஹென்றிகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பரப்பில், கண்ணாயிரம் பெருமாளை கர்வத்தோடு முன்வைத்தவர் சாரு.

சாருவை வெறுப்பதற்கான காரணங்களை ஒருவர் எந்த சிரமமும் இன்றிக் கண்டடையலாம். அவர் தன் விமர்சனங்களில் எழுத்துப் பிழைகளுக்குத் தரும் முக்கியத்துவத்திலிருந்து தன் கால்விரல் நகத்திற்குத் தரும் முக்கியத்துவம் வரை. அவரை விரும்புவதற்கு முதலில் செய்யவேண்டியது அவரை வாசிப்பது. என்னால் உறுதியாகக் கூறமுடியும் சாருவை அவரது எழுத்தை அவமதிப்பவர்கள் பெரும்பாலும் அவரை வாசித்ததில்லை. “இல்லை வாசித்திருக்கிறேன், அதில் ஒன்றும் இலக்கியத் தரம் இல்லை” என்பவர்கள், முறையான இலக்கிய அறிமுகம் அற்றவர்கள். எமர்சனால் சாரமற்ற அலங்கார எழுத்தாளர்(Jingle Man) என்று விமர்சிக்கப்பட்ட ‘எட்கர் ஆலன் போ’ அடைந்த உயரங்களையோ, அதே போன்ற விமர்சனங்களால் தன் வாழ்நாளில் பேர்பாதி சோற்றுக்கு சிங்கியடித்த ‘பூகோவ்ஸ்கி’ இன்று அமெரிக்கர்களால் கொண்டாடப்படுவதையோ இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பூகோவ்ஸ்கியை இலக்கியவாதியாக அமெரிக்கா ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும். நம் ரசனை இன்னமும் அவ்வளவு முதிர்ச்சியடையவில்லை. ஆகவே, இன்றும் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் பொருள் புரியாமல் தலைகீழாக ஒப்பிப்பவர்களைக் கண்டு  புளகாங்கிதம் அடைபவர்களாக இருக்கிறோம்.

98 வயதில் கி.ரா.விடம் “நல்ல எழுத்துன்னா எதுய்யா” என்று கேட்டபோது அவர் யோசிக்காமல் சொன்னது “எழுத்து சுவாரசியமா இருக்கணும்”.  சாருவைப் போல சுவாரசியமாக எழுதும் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சாரு என்றால் நினைவிற்கு வருவது அவரது எழுத்தில் இருக்கும் சகஜத்தன்மை. போலித்தனமும் பாசாங்கும் இல்லாத எழுத்தின் மொழி இப்பிடித்தான் இயல்பாக சரளமாக இருக்குமோ என்னவோ? சாரு எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் சப்ஜெக்ட் (ஆட்டோ-ஃபிக்ஷன்) ஒரு காரணமாக இருக்கலாம். அவருடைய வார்த்தையிலேயே சொன்னால், அவரது எழுத்துதான் அவரது வாழ்க்கை, அவரது வாழ்க்கைதான் அவரது எழுத்து. நம்மைப் போல எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், எந்தச் சாய்வும் இல்லாமல், அரசியல்-சரிகளை மதிக்காமல், பாசாங்கு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வதாலேயே அவருக்கு அந்த சரளமான மொழி அமைந்திருக்கலாம்.

சாருவின் எழுத்தை பத்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து, கிட்டத்தட்ட தினமும், வாசித்து வருகிறேன். (ஆம், அவர் பாஷையில் சொன்னால், அந்த “ஓ-ஓ-ஓ”க்களில் நானும் ஒருவன்).  அவர் மெனக்கெட்டு ஆதர்ச கதாபாத்திரங்களைப் புனைவது இல்லை. தன்னையே, தன்னைச் சுற்றி இருக்கும் உலகையே, தன் எழுத்தில் மீள் உருவாக்கம் செய்கிறார், மிக சுவாரசியமாக. அவருடைய உலகு, முட்டாள்தனமும், போட்டியும், கூச்சலும், லட்சியம் என்ற போர்வையில் பணத்தாசை பிடித்து, அகங்கார வெறிகொண்டு அலையும் மக்கள் கூட்டம் நிறைந்த உலகம் இல்லை. இதோ இங்கே, இந்த ஃபிலிஸ்டைன் சமுகத்தில், நம்மிடையே ரத்தமும் சதையுமாக வாழ்ந்தாலும், அவர் தான் வாங்கி வந்த வரத்தின் மகிமையால், எப்பொழுதும் ஒரு உடோபியாவில்தான் வாழ்கிறார். இங்கே நடக்கும் சில்லறை அரசியல் அவரைப் பெரிதாக பாதிப்பது இல்லை.  அப்படியே சில சமயம் சிலருடைய சிறு செய்கைகளால் சீண்டப்பட்டு, அவர் தான் இருக்கும் உடோபியாவை விட்டு வெளியே வரவேண்டிய சூழ்நிலை அமைந்தாலும், அது தற்காலிகம்தான். அவரால் சுலபமாக, எந்தப் பிரயத்தனமும் இன்றி, மீண்டும் அங்கேயே திரும்ப முடியும். சாருவால் மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இருக்கக்கூடும் என்று நான் எண்ணவில்லை. நாளையே கமல்ஹாசன் சாருவின் வீடு தேடிச் சென்றால் (அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு போதும்) தான் பட்ட அவமானத்தை மறந்து நேசக்கரம் நீட்டத் தயங்கமாட்டார். அப்போதும் கமலின் அடுத்த படத்திற்கு சாருவிடமிருந்து நேர்மறையான விமர்சனம் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சாருவுக்கு பெரிய லட்சியமெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், அது பெரூவில் போய் ஹாயாக ‘அயாஹுவாஸ்கா’ அடித்துவிட்டு, மரியோ வார்கஸ் யோசாவை ஒரு பெரூவியனுக்கு விரிவாக அறிமுகப்படுத்துகிற மாதிரியான  லட்சியமாகத்தான் இருக்குமே ஒழிய, ஊரைத் திருத்த வேண்டும் மக்களை வழிநடத்த வேண்டும் போன்ற லட்சியங்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வுலக வாழ்க்கை அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமானதாக இருக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருப்பது அவரது எழுத்தில் பிரதிபலிக்கிறது. ஒருவேளை, அவருடைய எழுத்திற்கு நோக்கம் என்று ஏதேனும் இருந்தால், அது, தான் வாழ்ந்து அறிந்து உணர்ந்து தெளிந்த உண்மைகளை (உள்ளது உள்ளபடியே இல்லாவிடினும்) அவற்றின் சாரம் சிறிதும் திரிபடையாமல் (தேவையான விகிதத்தில் புனைவு கலந்து), தனக்கு அமையப்பெற்ற மனநிலையும் நிறைவும் பிறருக்கும் வாய்க்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதனாலேயே, அவருக்காக இல்லாவிட்டாலும் நமக்காகவாவது, சாரு தன் வாழ்நாளில் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பார்த்தா