1.அது என்ன பிறழ்வெழுத்து? இவ்வாறு சொல்பவர்கள் அனைவரும், சாருவின் கட்டுரைகளைப் படித்துள்ளார்களா? பிறழ்வெழுத்து என்ன மனம் பிறழ்ந்த நிலையில் எழுதப்படுவதா? மனம் பிறழ்ந்த மக்களைப் பற்றி எழுதப்படுவதா? மனம் ஏன் பிறழ்கிறது? தனிமை, இருந்தலியல் பிரச்சினை, எதிர்கால நிச்சயமற்ற தன்மை, முக்கியமாக சமூகம் நம் முன்னால் உருவாக்கி வைத்துள்ள சட்டகத்துக்குள் பொருந்த முடியாமை…
’இவற்றுக்கு மருந்தாக இன்னொரு கூட்டத்தை உருவாக்கி புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்; பாதுகாப்பாக இருக்கும்’ என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டது. எப்படியாயினும் வாழ்க்கை கூட்டத்தை உருவாக்கும் வளயத்துக்குள் வருகிறது.
முதலில் என்னைப் போன்றவர்கள் சமூகத்தை விட்டு அந்நியமாக யோசித்த பொழுது, நாம்தான் கொஞ்சம் பிறழ்வாக இருக்கிறோமோ என தோன்றியதை, ”இல்லை… இல்லை… மொத்தமாகவே மெண்டல் asylumதான்” எனப் புரிய வைத்த எழுத்து, பிறழ்வெழுத்து அல்ல. பிறழ்வுக்கு மருந்தாகும் எழுத்து.
2) ஒழுக்கம்:
விட்டால் சாரு அனைவருக்கும் மூணு மணி நேர கலவி செய்வது எப்படி? ஆரம்பக் குடிக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வது எப்படி? என வகுப்பு எடுப்பவர் என்கின்ற ரேஞ்சுக்கு, பாராட்டு உள்குத்தல்களை படிக்கக் காண்கிறேன். “வரக்குடி” குடிக்கின்ற ஒருவர் தங்கள் எழுத்துக்களை கடந்தால், குடியுடன் இசை என்றாகி “இசையுடன் குடி ” என்றும் ஆகலாம். இறுதியில் இசை போதும் என்றும் ஆகலாம். உங்கள் எழுத்தின் byproducts தான் குடியும், காமமும், இசையும், திரைப்படமும்.
இதுதான் ஒழுக்கம் என வரையறுப்பவர்களை விட, “நீ ஒழுக்கம் என நினைப்பதையும் அடுத்தவர் மீது தினிப்பது அடுத்தவர் சுதந்திரத்தில் தலை இடுவதாகும்” என ஒரு கூட்டத்தையே உருவாக்கி இருகிறீர்கள். இதில் நாம் இருநூறு ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம்.
மேலும், ஒழுக்கவாதி என்ற பிம்பம் உருவாக்கினால் நான் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற அகந்தை வேறு தலை எடுக்கும். அதே ஒழுக்க போதை மீண்டும் ஒரு கூட்டத்தை உருவாக்கும். வட்டம் பூர்த்தியாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச்சரியாக இருக்கிறேன் என்பது என்ன ஐ. டி. கார்டா எடுத்து காட்டுவதற்கு? அதற்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?
3)ஏன் சாரு?
உங்கள் வாசகர்களின் மீதுள்ள மற்றுமொரு அபிப்பிராயம், நாங்கள் சாருவை மட்டுமே படிக்கின்றோம், என்பது. இல்லை லா.ச.ரா., ரஷ்ய இலக்கியம், எஸ்.ரா., ஜெயமோகன், தி. ஜானகிராமன், வெங்கட்ராம், முக்கியமாக சுஜாதா, என ஆரம்ப காலங்களில் படித்து அதற்குப் பின்பே உங்களைப் பிரதானம் ஆக்கினோம். வேறு வழி இல்லாமல் சாருவை ஏற்கவில்லை, சாரு எங்கள் தேர்வு.
நேற்று பற்றி எழுதுபவர்கள் நடுவே, இன்றை எழுதுபவர் நீங்கள். அவ்ரங்ஸேப் ஆனாலும் நான் வாழும் காலத்துக்கு வாங்க சஹேப் என அவரையும் நம் காலத்துக்குத்தான் கொண்டு வந்துள்ளீர்கள்.
நான் ஓஷோவின் காணொலிகளை விரும்பிப் பார்ப்பேன், கூட்டத்தை வசியத்தில் வைத்து இருப்பதும், அவரது உடல் மொழியும் மிகவும் பிடிக்கும். காணொலிகள் அனைத்தும் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் வெளி வந்தவை.
பேச்சின் இடையே ஒரு மௌன இடைவெளியை உருவாக்குவார் ஓஷோ,அந்த இடைவெளிகளில் அவர் முன் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பார்கள். அதிசயம் என்னவென்றால் நானும் அமைதியாக இருப்பேன். ஒரு ஓஷோவிஸ்ட் நண்பனிடம் sampling செய்ததில் அவனும் அதையேதான் சொன்னான். காலம், தூரம் அனைத்தும் இல்லாமல் போகும். இதைத்தான் தாங்கள் எழுத்தில் செய்து உள்ளீர்கள்.
இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து வரும் யுவனும் யுவதியும் இதே போன்று காலம், தூரம் இரண்டும் அற்ற தன்மையை உங்கள் எழுத்தில் கண்டடைவார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளனை நாங்கள் எங்கள் ஆசானாக, தந்தையாக, நண்பனாக அடைந்துள்ளோம்.
Trangressive, பிறழ்வெழுத்து…. என்ன வேண்டுமானாலும் சொல்லி முழு எழுத்தாளன் இல்லை, இதில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர், அது மட்டும் கொஞ்சம் வரும் என சொல்பவர்கள் சொல்லட்டும். அவர்களுக்கு இன்னும் நூறு வருடம் கழித்து வரும் இளைஞன் பதில் சொல்வான்…
கோபிநாத் ராஜாராம்