எழுத்தும் வாழ்வும்…

சாரு
நான் தங்களுக்கு முன்னமே வாழ்த்து சொல்லியிருப்பினும் இன்று
சாருதாசன் மற்றும் அராத்து, வளன், காயத்ரி, நிர்மல், முருகேச பாண்டியன் கட்டுரைகளைப் படிக்கும் போது நான் வெறுமனே சம்பிரதாயமான வாழ்த்தாகக் கூறிவிட்டதுபோல ஒரு உறுத்தல்.
இன்று நாங்கள் கொண்டாடிவரும் இத்தருணமானது தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கிறேன். இது ஓர் ஆரோக்கியமான, நிறைவான, முதிர்ச்சி பெற்ற சூழலின் துவக்கப்புள்ளியாகத் தெரிகிறது.

அது மட்டுல்லாது பலரது கடிதங்கள் ஏற்படுத்திய முக்கிய விளைவு
என்னவெனில் மீண்டும் தங்களது நூல்களை மறுவாசிப்பு செய்யவும் சரியான கோணத்தில் அதனை உள் வாங்கவும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறேன். உதாரணமாக நான் தங்களது கிரிக்கெட்டை முன்வைத்து என்ற சிறுகதையையே முதலில் படிக்க நேரிட்டது. இருவாட்சி 2011 ஆம் ஆண்டு பதிப்பித்த யானைச் சவாரி என்ற தொகுப்பில் முதல் கதையாக அது இடம் பெற்றிருந்தது. அதில இருந்த மற்ற கதைகளிலிருந்து கதைகளும் முறையில் மாறுபட்டிருந்ததே சாருவை தொடரச் சொன்னது. அடுத்து தேகம் வாசிக்க நேர்ந்தது. Pleasure of the text என்பதை அதில் கண்டேன்.

2012 ல் இருந்து இன்று வரை காலையில் Charuonline. இன்றைய அவுரங்ஸேப் வரை உண்டு. எக்ஸைல் தவிர. தங்கள் எழுத்து பலரைப் போன்றே எனக்கும் இந்த அறுபது ஆண்டுகள் கடந்த வாழ்வில் வாழ்வை அணுகுவதில் தெளிவையும், முதிர்ச்சியையும், பக்குவத்தையும் அளித்துள்ளது. குறிப்பாக எங்களது பிள்ளைகள் மீதான அணுகுமுறையை பரந்துபட்டதாக மாற்றியது. கடந்த நான்கு ஆண்டுகள் மிக்க சோதனையான கட்டமாக இருந்ததைக் கடந்து வருவதற்கு எனக்கும் என் துணைவிக்கும் உங்கள் எழுத்து உதவியதை மறுக்கவே இயலாது. அவளும் நானும் சேர்ந்து தான் blog ஐ படிப்போம்.
எங்களுக்கு எப்படியியிருப்பினும், இன்று தங்கள் வாழ்க்கையைத் துவக்க இருக்கும் இளைய தலைமுறையிருக்குக் கிடைத்துள்ள சாரு என்ற வாய்ப்பு முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. அது குறித்துக் கொஞ்சம் ’பொறாமையாய்” இருந்தாலும் ஒரு வகையில் மகிழ்ச்சியே..

உடல்நிலை அனுமதித்தால் கோவை விழா வருவதற்கான திட்டம் உண்டு.
அன்புடன்,
ஸ்ரீதர் மணியன்,
தருமபுரி.
06 .09. 2022