எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான விளையாட்டு என்ற அராத்துவின் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்த அபிலாஷ் பின்வருமாறு ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
”உண்மைதான். ஒருமுறை சாருவுடன் டின்னருக்குப் போனேன். நான் வற்புறுத்தியும் கூட அவராக பணத்தை செலுத்தி விட்டார். குறைந்தது பணத்தை பகிர்ந்திருக்கலாமே எனக் கேட்டால் ஒப்புக் கொள்ளவில்லை. நானாகவே முதலில் பிடிவாதமாகக் கொடுத்திருக்கணுமோ என நினைத்து வருந்தினேன். ஆனால் சாருவுக்கு அப்படி பணம் பற்றின கவலைகள் ஒன்றுமில்லை.”
இதற்கு அராத்துவின் பதில்:
”அதிலும் எழுத்தாளர் என்றால் சாரு அவரை செலவழிக்க அனுமதிக்கவே மாட்டார். இது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். இருந்தாலும், அவர் மனநிலையைப் புரிய வைப்பதற்காக இப்படிச் சொல்கிறேன். கடவுளிடம் மனிதனின் பணம் இருக்கிறதா? இல்லைதானே? மனிதன் உண்டியலில் போடும் பணம் மற்றும் மனிதன் கோவிலுக்கு சொத்தை எழுதி வைப்பது இவைகள்தானே கடவுளின் பணம் மற்றும் சொத்து? ஆனால் மனிதர்கள் எல்லோரும் பணம் வேண்டும் என்று கடவுளைத்தானே வேண்டுகிறார்கள்? ஒரு பேச்சுக்கு கடவுள் தோன்றி ஒருவனை விருந்துக்கு அழைத்தால்… சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்கும் பொழுது பக்தன் பணம் கொடுக்க கடவுள் அனுமதிப்பாரா? கடவுள்தான் கொடுப்பார். ஆனால் கடவுளிடம் காசு இல்லை. பக்தர்களிடம் யாசகம் பெற்ற காசுதான்.”
மனநிலைதான் காரணம். என் சிந்தனையில், என் உலகில் பணத்துக்கு ஒரு சிறிதும் இடம் இல்லை. ஆனால் அன்றாட வாழ்க்கைக்குப் பணம் தேவைப்படுகிறது என்ற அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறேன்.
தியாகராஜர் தினந்தோறும் உஞ்சவிருத்தி செய்துதான் அவர் குடும்பம் சாப்பிட்டது. அடுத்த நாளைக்கு என்று எதுவுமே சேமித்து வைத்திருக்கக் கூடாது என்பது அவருடைய பிராமண தர்மம். மழை புயல் காரணமாக உஞ்சவிருத்திக்குச் செல்ல முடியாமல் போனால் அன்றைய தினம் பட்டினிதான். இப்படி பிராமணனாகப் பிறப்பதற்கு எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தேனோ என்று பாடுகிறார். எதற்கு? தினந்தோறும் இப்படி உஞ்ச விருத்தி செய்து சாப்பிடுவதற்கு. ஆனால் இப்படி உஞ்ச விருத்தி செய்து, கொண்டு வரும் அரிசியிலும் பருப்பிலும்தான் தன் வீட்டுக்கு வரும் அத்தனை பேருக்கும் உணவு அளித்தார் தியாகராஜர். சங்கீத ஆசிரியர் என்பதால் அவரைத் தேடி மாணவர்கள் வந்தவண்ணமாகவே இருப்பார்கள்.
யாசகம் கேட்பதற்கு ஒருவர் ”தான்” என்ற அஹங்காரத்தை விட வேண்டும். எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் ஈகோ கொஞ்சமாக அடி வாங்கினாலும் சுணங்கி விடுவார்கள். இவ்விஷயத்தில் எனக்கு ஈகோவே கிடையாது.
நேற்று ஒரு கவிஞரின் ஏற்புரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு பிரபல நடிகர் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்து விட்டு, “உங்களுக்கு என்ன உதவி எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள், செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றாராம். நண்பர்களின் உதவியால்தான் வாழ்க்கை முழுவதும் கழிந்தது, இனிமேலாவது யார் உதவியும் இல்லாத நிலையில் வாழ வேண்டும் என்றுதான் இப்போது நினைக்கிறேன் என்று அந்த உரையில் குறிப்பிட்டார் கவிஞர்.
எனக்கும் அப்படி சொல்லத்தான் ஆசை. யாரிடமிருந்தும் எந்த உதவியும் பெறத் தேவையில்லாத வாழ்வை வாழ வேண்டும்தான். ஆனால் நான் அப்படி நினைக்கக் கூடாது. நினைக்க மாட்டேன். நான் கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக ஒரு யாசகனாகவே வாழ்ந்து விட்டேன். அந்த நடிகர் அப்படிச் சொன்னது வெறும் சம்பிரதாயமாக இருக்கலாம். அல்லது, நிஜமாகவே கூட சொல்லியிருக்கலாம். நிஜமாகச் சொன்னால், அது நிஜம் அல்ல. நிஜம் போல் தெரிகிறது, அவ்வளவுதான். ஒரு கவிஞனுக்கு எண்பது வயதில் என்ன தேவை இருந்து விடப் போகிறது? அதிலும் பிள்ளைகளெல்லாம் படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கும்போது.
என்னிடம் அவர் கேட்டிருந்தால், எனக்கு ஒரு வீடு வேண்டும் என்று கேட்டிருப்பேன். அதுகூட என் புத்தகங்களைப் பாதுகாப்பதற்குத்தான். எனக்கு எதற்கு வீடு? அவ்வளவு பெரிய உதவி முடியாவிட்டால், வாரம் ஒரு வைன் போத்தல். சீலே வைனாக இருந்தால் நலம். நடிகர் டீட்டோட்டலராக இருந்தாலும் நண்பர்களுக்கு உதவும்போது இதெல்லாம் பார்ப்பார்களா என்ன? அதனால்தான் நல்லவேளை, கவிஞருக்கு வாழ்த்து சொன்னது போல் அவர் எனக்கு வாழ்த்து சொல்லவில்லை.
எப்படியிருந்தாலும் இந்தப் பிரபஞ்சப் பேரியக்கத்தில் நான் ஒரு தூசு. இதில் சங்க காலப் பாணனைப் போல் யாசித்து வாழ்ந்து விட்டுப் போவதில் என்ன சங்கடம்? நமக்கு இடப்பட்டிருக்கும் பணியை செவ்வனே செய்கிறோமா என்பதில் மட்டுமே எனக்கு அக்கறை. தியாகராஜாவை எந்த அளவுக்கு செழுமைப் படுத்துகிறேனோ அந்த அளவுக்கு நலம்.