ஏன் வாழ்த்து சொல்லவில்லை? ஒரு விளக்கம்

விக்னேஷ்

எங்கள் பிரியத்துக்குரிய சாருவுக்கு,

விஷ்ணுபுரம் விருதுக்காக என் பணிவான, மனப்பூர்வமான வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.  மேலும், காலம் தாழ்த்தி வாழ்த்துவதற்காக மிகவும் பணிவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  உண்மையை சொல்லப் போனால், தங்களை வாழ்த்துவதற்கு நான் மிகவும் தயங்கினேன்.  ஏன் என்பதற்கான காரணங்களை இங்கே தொகுத்துப் பார்க்கிறேன்:

1.எங்களைப் பொறுத்தவரை நீங்கள் larger than life நாயகன்.  என்றைக்குமே அழிவு இல்லாத ராக் ஸ்டார்.  நானோ ஒரு பொடியன்.  நான் எப்படி ஒரு லெஜண்டாக வாழும் உங்களை வாழ்த்துவது?  அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

2. நீங்கள் ஆச்சாரியர் துரோணரைப் போன்றவர். யாருமே எதற்காகவுமே உங்களுக்கு எந்த விருதும் அளிக்க முடியாது.  எந்த விருதுமே உங்கள் உயரத்தைத் தொடவும் முடியாது.  ஏனென்றால், நீங்கள் இது எல்லாவற்றையும் விட மகத்தானதொரு உயரத்தில் இருந்து வருகிறீர்கள்.  உங்களுக்கு ஏதாவது விருது கொடுக்கப்பட்டால் அந்த விருதுதான் அதனால் கௌரவம் பெறுகிறதே தவிர நீங்கள் அல்ல.  எனவே இதற்கெல்லாம் வாழ்த்து சொன்னால் அந்த வாழ்த்துக்கே அர்த்தம் இல்லை.  அப்படியும் வாழ்த்து சொல்வதாக இருந்தால் விருது அளிக்க உங்களைத் தேர்ந்தெடுத்த குழுவினருக்குத்தான் சொல்ல வேண்டுமே தவிர உங்களுக்கு அல்ல.  உங்களுக்கு அளிக்கப்பட்டதன் மூலம் அந்த விருது தன்னை மேலும் சிறப்பித்துக் கொள்கிறது.     

3. எல்லாவற்றையும் விட நீங்கள் எங்களுக்கு ஆசானாக மட்டும் அல்லாமல், எங்களுக்கு உற்றதொரு தோழனாகவும் விளங்குகிறீர்கள்.  நாங்கள் உங்களைச் சந்தித்தது இல்லை என்றாலும், ஏகலைவனைப் போல் உங்களிடமிருந்து ஞானத்தையும் கல்வியையும் பயின்று கொண்டே இருக்கிறோம்.  வாழ்வின் மீதும் சக மனிதர்கள் மீதும் பிற உயிரினங்கள் மீதும் காதலையும் கருணையையும் பரிவையும் அன்பையும் பொழியக் கற்றுத் தரும் உங்கள் எழுத்துக்கும் வாழ்வுக்கும் எங்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

அந்த வகையில் எங்கள் நண்பனுக்கு ஏதாவது பரிசோ விருதோ கிடைத்தால் அவன்தான் எங்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும்.  ஏனென்றால், நாங்கள் எங்கள் உயிர் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்வது இல்லை.  வாழ்த்து சொன்னால் அது எங்களை அந்த நண்பர்களிடமிருந்து அந்நியமாக்கி விடும்.  மாறாக, விருது பெற்ற நண்பனிடம்தான் பார்ட்டி கேட்போம்.  அப்படித்தான் உங்களிடமும் இருந்து கொண்டிருக்கிறோம்.  எனவே அன்பை போதிக்கும் உங்கள் பள்ளியில் ஒரு மாணாக்கனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.  உங்களோடு சேர்ந்து மேலும் மேலும் முன்னேறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   

மேற்கண்ட யோசனைகளால்தான் நான் உங்களுக்கு வாழ்த்து அனுப்பவில்லை.  ஆனால் உங்கள் ப்ளாகில் நீங்கள் சமீபத்தில் எழுதியிருந்தவை என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தன, ”டேய் பொடியா, வாழ்த்து சொன்னால் சொல், இல்லாவிட்டால் சும்மா இரு, ரொம்ப யோசிக்காதே!”

அதே சமயம், உங்களுக்கு வாழ்த்து சொல்வதற்கான தைரியத்தையும் உங்களுடைய சமீபத்திய பதிவுகள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தன. 

எனவே, விஷ்ணுபுரம் விருதுக்காக உங்களுக்கு என் வாழ்த்துகள்.

உங்கள் பணிவுள்ள மாணவன்,

விக்னேஷ்.

***

நேற்று முழுவதும் யாருடனும் பேசவில்லை. எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரம். அவந்திகா ஊருக்குப் போனதிலிருந்தே பார்க்கிலும் என் உடன் நடக்க நண்பர் இல்லை. அவந்திகா இருந்தால் எட்டரைக்கெல்லாம் அடித்துப் பிடித்து ஓடி வர வேண்டும். இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பார்க்கில் நண்பர்கள் இல்லை. எனவே எட்டு மணிக்கே வீடு திரும்பி விடுகிறேன்.

நேற்று முழுவதும் நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது வேண்டாம். முடித்த பிறகு விரிவாக எழுதுகிறேன். அதற்கு முன்னால் ஒரே ஒரு வார்த்தை மட்டும். இத்தனை மகத்தான ஒரு நாவலை தமிழில் என் வாழ்நாளில் படித்ததில்லை. ஸ்பானிஷிலும் Carlos Fuentesஇன் Christopher Unborn, கார்ஸியா மார்க்கேஸின் நூறாண்டுகளின் தனிமை போன்ற நாவல்கள் நொய்யலின் பக்கத்தில் கூட வர முடியாது. அப்படி ஒரு நாவல் நொய்யல்.

சீனியிடமிருந்து மதியம் வந்த ஒரு போன் அழைப்புதான் எனக்கும் வெளியுலகத்துக்குமான நேற்றைய தொடர்பு.

இப்படியான ஒரு சூழலில் விக்னேஷின் மேற்கண்ட கடிதம் தியாகராஜாவை எழுதுவதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்துகிறது. மற்றபடி, விக்னேஷின் கடிதத்தை வெளியிட வேண்டுமா என்று நீண்ட நேரம் யோசித்தேன். ஆனாலும் அந்தக் கடிதத்தில் தெரிந்த – எனக்குக் கிடைத்த – உணர்வு அலைகள் அதை வெளியிடத் தூண்டியது.

சாரு