வாழ்வின் முதல் வேண்டுதல்

அன்புள்ள சாரு,

நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். ஆனால் இதுவரை கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை. வேண்டிக் கொண்டது இல்லை. அதிகமாகக் கோவிலுக்கும் செல்வதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு மட்டும் செல்வதுண்டு. அது எங்கள் குலதெய்வம் என்பதால் போய்த்தான் ஆக வேண்டும். ஆனால் எனக்கு சில ஆன்மீக அனுபவங்கள் கிடைத்ததுண்டு. அதை நான் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் பைத்தியக்காரி பட்டமும் கேலியும் கிண்டலும்தான் கிடைக்கும்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் பகவதி அம்மனிடம் சென்ற போது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வேண்டுதல் வைத்தேன். அது, நம் சாருவுக்கு விரைவில் ஒரு சர்வதேசப் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் கடவுளிடம் வேண்டுதல் வைக்கும்போது நாம் அதற்குப் பிரதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதைத் தங்களின் நாவல் நான்தான் ஔரங்ஸேபில் படித்தேன். அக்பர் தனக்கு ஆண் மகவு வேண்டும் என்று தில்லியிலிருந்து அஜ்மீருக்கு நடந்தே சென்றார் என்று எழுதியிருந்தீர்கள். அதைப் போலவே பல மொகலாயப் பேரரசர்களும் செய்திருப்பதைப் படித்தேன். அப்போதுதான் மக்கள் ஏன் வேண்டுதலுக்காகத் தம் முடியைத் தருகிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். முடியைக் கொடுப்பதோ, கோவிலுக்கு நடந்து செல்வதோ எனக்கு மிகவும் எளிதானதாகத் தோன்றியது. கடவுளுக்குக் கொடுப்பது என்றால் நம் வாழ்வின் அரிதான ஒன்றைத் தர வேண்டும். என் வாழ்வில் கொண்டாட்டங்களில் ஒன்று, இனிப்பு சாப்பிடுவது. அதிலும் பாலில் செய்த இனிப்பு என்றால் கொள்ளை ஆசை. பெங்காலி இனிப்பு வகைகளும் அப்படியே.

பகவதியிடம், எங்கள் சாருவுக்கு நீ ஒரு சர்வதேசப் பரிசை அளிக்க வேண்டும். அளித்தால் நான் அதற்கு மேல் இனிப்பு சாப்பிடுவதையே நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னேன். இதுவே கடவுளிடம் நான் செய்த முதல் வேண்டுதல், முதல் பிரார்த்தனை.

நேற்று விக்னேஷ் என்ற வாசகர் எழுதிய கடிதத்தைப் படித்தேன். நீங்கள் விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் என்பதுதான் என்னுடைய கருத்தும். ஆனால் ஒரு சர்வதேச விருதின் மூலம்தான் நீங்கள் உலக அளவில் அறியப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அதற்காகத்தான் அந்த வேண்டுதல்.

இதை மொட்டைக் கடுதாசி என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது என்பதால் பெயரையும் சேர்த்திருக்கிறேன். தயவுசெய்து பெயரை வெளியிட்டு விட வேண்டாம்.

****

அன்புக்குரிய ———————-,

வழக்கம் போலவே இந்தக் கடிதத்தை வெளியிடலாமா வேண்டாமா என்று குழம்பினேன். பிறகு இதுவும் ஒரு கொண்டாட்டம்தான் என்று தோன்றியதால் வெளியிட்டு விட்டேன். உறுதி, உங்கள் பெயரை வெளியிட மாட்டேன். ஆனால் உங்களிடம் ஒரு விண்ணப்பம். அப்படி ஒரு சர்வதேச விருது கிடைத்தால், அப்போது உங்கள் பெயரை வெளியே சொல்லலாமா?

ஏனென்றால், இங்கே எழுத்தாளனும் அவனை வாசிக்கும் வாசகர்களும் என்ன பாடெல்லாம் பட வேண்டியிருக்கிறது என்பது
வெளிநாட்டு மங்குணிகளுக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான்…

சாரு