நூலகங்கள், மாணவர்கள்…

பிரியத்திற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,

நான் முத்து விஜயன்.  பொறியியல் இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறேன். அதாவது முடித்து விட்டேன் (இப்பொழுது தான்) இரண்டு அரியர் விழுந்து விட்டது. இப்போது உங்கள் வலைத்தளத்தில் “மாணவர்களுக்கு…” என்றொரு பதிவைப் படித்தேன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் படிக்க விரும்பும் மாணவர்கள் எனக்கு எழுதுங்கள், குறைந்த விலைகக்காவது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன் என எழுதி இருந்தீர்கள்.

படித்ததும் வியப்பாக இருந்தது. நாமும் இவருக்கு எழுதலாமா என கொஞ்சம் அல்பமாக யோசித்தேன். ஆனால் இப்பொழுது பழுப்பு நிறப் பக்கங்களில் நீங்கள் எழுதிய க.நா.சு. அறிமுகக் கட்டுரையை வாசித்து கொண்டிருக்கிறேன். எழுத்தாளர்கள் படுகின்ற கஷ்டங்களை க.நா.சு.வின் பெரும்பாலான கதைகளிலும் பேசியிருக்கிறார் என எழுதியிருந்தீர்கள். அதேபோல்தான் நீங்களும் தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களுக்கு உரிய இடத்தையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அவலத்தையும் ஆரம்ப நாட்கள் முதல் பேசி கொண்டிருக்கிறீர்கள்.

ஆகையால் எப்படி இவரிடம் போய் எனக்கு ஒரு பிரதி என கேட்பது என்று தயக்கமாக இருக்கிறது. 

வேறு எந்த மொழியிலும் எழுத்தாளர்கள் வாசகர்களிடம் இவ்வளவு தூரம் interact செய்கிறார்களா எனத் தெரியவில்லை. அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் தமிழ் வாசகர்கள்.

இது வெறும் ஒரு 21 வயதுடைய வாசகன் – பற்றிய – கடிதம் மட்டுமே.  நான் வாசிப்புப் பக்கம் வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. நான் வாசிக்கும் புத்தகங்களை என்னை விட பெரியவர்கள் கூட வாசிக்கிறார்களா தெரியவில்லை. (அசோகமித்திரன், கீரனூர் ஜாகிர்ராஜா, கி. ராஜநாராயணன், நீங்கள், இமையம், வண்ணநிலவன், இத்யாதி) அந்த அளவுக்கு அதிகமாக தேடித் தேடிப் படித்து கொண்டிருக்கிறேன்.

நூலகத்திலும் (ரெட் ஹில்ஸ்) கூட புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது நூலகர் என்னை ஏறிட்டுப் பார்த்து “தம்பி, இந்த புக்’ஸ எல்லாம் நீதான் படிக்கிறியா…” என்று கேட்பதுண்டு.   இந்த வருடம் தான் தேகம், நேநோ, மண்ணில் தெரியுது வானம் (நீங்கள் பரிந்துரைத்தது) ஆகிய நூல்களை எப்படியோ வாங்கி விட்டேன். இப்பொழுது ‘ராஸலீலா’வுக்காக சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன், தீபாவளிக்கு வாங்கப் போவதாக திட்டம்.

இப்பொழுது அப்படித்தான் ஆகிவிட்டது, எதாவது பண்டிகை என்றால் ஆடைகள் வாங்குவதற்கு பதிலாக புத்தகம் வங்கிவிடுகிறது, பிறந்தநாளுக்கும் இதே கதைதான்.

வீட்டில் அம்மா அப்பா கூட என்னை வினோதமாகத்தான் பார்க்கிறார்கள், முகத்திற்கு நேராக திட்டித் தீர்த்தாலும் (“இன்னும் உணக்கு ஒரு வேல கெடச்ச பாடுயில்ல”), கண் மறைவில் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம்    

“அவனுக்கு என்ன, வீட்ல புக்’ஸா வாங்கி படிச்சுட்டு இருக்கான்” என்று நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள்.

தம்பி வந்து சொல்லிக் கொண்டு இருப்பான் “என்னடா அம்மா உன்ன பத்திதான் பெருமையா பேசிட்டு இருக்காங்க” என்று.

இவன் என்னடா தற்பெருமை பேசுகிறான் என நினைக்காதிர்கள். இது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகள் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மையாக இருக்க வேண்டும் என விரும்புவது.

நண்பர்களும் (இரண்டு பேர்- பள்ளி நண்பர்கள்) பரிதாபப்படும் அளவிற்கு மாறிவிட்டேன், பரிதாபப்பட வேறு காரணங்களும் உண்டு, ஏதாவது பேசினால் சினிமா பார்த்து புக்ஸ் படிச்சி கெட்டுப் போய்ட்டடா என்பார்கள்.

எனக்கு என்னைப் பற்றிய திருப்தி எப்போதும் இருந்ததில்லை, இந்த நிமிடம் வரை. இதுவரையும் எதன் மீதும் புகார்களும் இருந்ததில்லை.

எது நடந்தாலும் அதற்கு முழுக் காரணம் நான் மட்டும்தான். என்னை ஏதோ ஒரு விதத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்வது சினிமாவும், இலக்கியமும்தான். எழுதவெல்லாம் வராது. வாசிப்பு மட்டும்தான்.

Just surviving…

இப்பொழுது கூட ஏன் இதை எழுதுகிறேன் என்று தெரியவில்லை.

எப்போதாவுது பழைய facebook, instagram story archives எடுத்துப் பார்க்கும் போது “செ.. நாம ஏன் இவ்வளவு வெளிப்படையாக இருந்திருக்கோம்” என்று தோன்றும்.  அதேபோல் இந்தக் கடிதத்தையும் என்றாவது பார்க்கும் போது அப்படித்தான் தோணும். சில பத்திகளைத் தவிர்த்திருக்கலாம்.  

 இது ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம்.

பிழைகளுக்கு மன்னிக்கவும்.

மற்றும்

விஷ்ணுபுரம் விருதுக்காக என் வாழ்த்துக்கள் sir // stay awesome as u r .

அன்புடன்,

முத்து விஜயன்.

அன்புள்ள முத்து விஜயன்,

உங்கள் கடிதம் எனக்கு என்னுடைய இளம் பிராயத்தை ஞாபகமூட்டியது.  என்னுடைய இளமையும் இப்படியேதான் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், எனக்குக் காசு கொடுத்து புத்தகம் வாங்க வேண்டிய நிலைமை இல்லை.  அப்போதெல்லாம் அரசு நூலகங்களில் எனக்குத் தேவையான எல்லா நூல்களுமே கிடைத்தன.  அப்போது எழுதிக் கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களும் நூலகத்தில் இருந்தார்கள்.  மௌனியிலிருந்து ஆதவன் வரை. 

பொதுவாக, வறிய நிலையில் இருக்கும் மாணவர்கள் கல்வி பெற பலரும் உதவி செய்து வருகிறார்கள்.  கல்வி முக்கியம்தான்.  ஆனால் கல்விச் செல்வத்தால் பணம்தான் சம்பாதிக்கலாமே ஒழிய கல்விக்கும் ஞானத்துக்கும் சம்பந்தமே இல்லாதபடி இருக்கிறது நம் கல்வித் துறை.  உங்களைப் போன்ற மாணவர்கள் இலக்கிய நூல்களை வாசிப்பதற்கு வழிவகைகள் இல்லை என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.  மாணவப் பருவத்தில் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது சரியல்ல என்பதே என் பார்வை.

இன்னொரு முக்கிய விஷயம்.  இலக்கியத்தின் பக்கம் ஈடுபாடு காண்பிப்பவர்கள் அரியர் வைக்கக் கூடாது.  அதில் கொஞ்சம் கவனம் வையுங்கள்.  உங்கள் முகவரியைத் தாருங்கள்.  யார் மூலமாகவாவது உங்களுக்கு ஔரங்ஸேப் நாவலை அனுப்பி வைக்கிறேன்.

சாரு

பின் குறிப்பு: முத்து விஜயனுக்கு ஔரங்ஸேப் நாவலை அனுப்பி வைக்க விரும்பும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். 

charu.nivedita.india@gmail.com