பாண்டிச்சேரி சந்திப்புக்கு வரலாமா?

வணக்கம் சாரு,

மிக மிகத் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும், ஒரு வரி வாழ்த்துச் செய்திக்கு பதில் இந்த விருது குறித்த என் பார்வையை உங்களுக்குத் தெரியபடுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் நான் எதையும் எழுதும் நிலையில் இல்லை,  இப்பொழுது நிலைமை கொஞ்சம் சீராகி கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த விருது உங்களுக்கு கொடுப்பதன் மூலம், விஷ்ணுபுரம் விருதுக்குப் பெருமை சேர்கிறது என்ற அளவிலே என் புரிதல் இருந்தது, ஆனால் அது மட்டுமே முழுமை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

இந்த விருது உங்களுக்குக் கொடுக்கப்படுவது உலக இலக்கியத்தில் ஒரு முக்கியமான உதாரணமாக இருக்கப் போவதாகத் தோன்றுகிறது. நானோ மற்றும் வாசகர் வட்ட நண்பர்களோ உங்களைப் பாராட்டிப் பேசுவதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் நாங்கள் அனைவரும் ஒரே சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஆனால் மாற்றுக்கருத்து உள்ளவர்களின் பாராட்டு என்பது அவ்வளவு எளிதானதல்ல, நம் சிந்தனைகளுக்கு நேர் எதிர்த்திசையில் இருக்கும் ஜெயமோகன் வாசகர் வட்டத்தில் இருந்து கொடுக்கப்படும் விஷ்ணுபுரம் விருது இலக்கியத்தில் உங்களை யாரும் ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு சாட்சி.

வாழ்த்துக்கள் சாரு.

நீங்கள் எழுதிய மாணவர்களுக்கு… என் பதிவைப் படித்தேன் சாரு, நான் அதில் பங்கு எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன், நீங்கள் குறிப்பிட்டது போல மாணவர்கள் இப்புத்தகத்தை விரும்பி ஆனால் வாங்க முடியாதவர்களாக இருந்தால் அவர்கள் பங்கு போக மீதி பணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மேலும் சாரு, பாண்டிச்சேரி சந்திப்பிற்கு வந்து என்னால் முடிந்த உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன். நானும் வரலாமா?

அன்புடன்

கார்த்திக்