சாருவின் ஆரோவில் சந்திப்பு சிறப்பாக நடந்தது. நானும் கலந்து கொண்டேன். அராத்து, வினித் இன்னும் பல வாசகர்களோடு ஒரு இரவும் ஒரு பகலும் சிறப்பாக கடந்தது.
சாருவை முதல் முறையாக பத்து வருடங்கள் முன் மகாபலிபுரத்தில் சந்தித்தேன். அன்று பார்த்த அதே ஸ்டைலோடும், அதே புத்துணர்ச்சியோடும் இளமை ததும்ப சிலருக்கு இணையாகவும் பலரை விஞ்சும் அளவுக்கும் கொண்டாடினார். அவரது தனித்துவமான முறையில் அன்புடனும் பாசத்துடனும் கண்டிப்புடனும் வாசகர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் , மகிழ்வித்தார்.
பேச்சின் மூலமாக மட்டுமன்றி தன் உடல் மொழி, தன் உடை அலங்காரங்களாலும் வசீகரித்தார். கருப்பு சட்டை ரேபான் கூலர்ஸ் வெள்ளை வேட்டி என அசத்தியது அமர்க்களம். முப்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர். ஆன்மீகம், செக்ஸ், உலக இலக்கியங்கள், தனிப்பட்ட துயரங்கள் என்று பல விஷயங்கள் பகிரப்பட்டன. இசை, சினிமா பேசப்பட்டன.
பத்து இருபது வருடங்களுக்கு முன் இலக்கிய கூட்டங்கள் பல அடிதடியில்தான் முடியுமாம், ஆனால் அப்படியான எந்த சுவாரஸ்யமான நிகழ்வும் நடக்காமல் காந்திய வழியிலே நடந்தது . இலக்கிய வாசகர்களுக்கும் கனிந்துவிட்டார்களா? – பிச்சைக்காரனிடம்தான் கேட்க வேண்டும்.
மாமரத்தினடியில் குளுமையாய் குழுவாய் உரையாடிய பொழுதுகளை ரசித்தேன். வந்த அனைவரும் சாருவின் எழுத்துக்களைக் குறித்து நுட்பமான பார்வைகளை முன் வைத்தது , பல நூல்களிலிருந்து எடுத்துரைத்தது வியப்பாக இருந்தது .
கடந்த சந்திப்பின்போது செடிதொட்டியில் சிகரெட் துண்டுகளை போட்டது போல் போடாமல் சிகரெட் பிடித்தவர்கள் காலி பீர் டப்பாக்களை ஆஷ் டிரேயாக பயன்படுத்தினார்கள். மரத்தடியை துப்புரவு செய்வது, உணவு வாங்கிவருவது, பாத்திரங்களை கழுவி வைப்பது வரை வந்தவர்கள் வேலைகளை பகிர்ந்துகொண்டார்கள். ஆனாலும் சில பல சொத்தப்பல்கள் நடந்தன. இப்படியான கூட்டங்களுக்கு வெறுங்கையோடு வரக் கூடாது. கொஞ்சம் மோராவது கொண்டு வந்தால் கூட நாம் பகிர்ந்து குடிக்க முடியும் என சாரு அடிக்கடி சொன்னதுண்டு. அதன்படி கூட்டத்திற்கு வந்தவர்கள் சிலர் பழங்கள் கொண்டு வந்திருந்தார்கள். ஆப்பிள் மாதுளை மற்றும் பேரீச்சம் பழங்கள். அவற்றைக் கொண்டு சுவையான ஃப்ரூட் சாலட் செய்து பகிரப்பட்டது அருமை. எந்த மிச்சமும் இல்லாமல் சட்டி காலியானது.
நண்பகலில் பிரியாணி சிறப்பாக இருந்தது. மட்டன் பிரியாணி ஒரு பக்கெட், சிக்கன் பிரியாணி ஒரு பக்கட் வாங்கி வைத்ததில் மட்டன் பிரியாணியே வெகு சீக்கிரத்தில் காலியானது. அன்றும் இன்றும் என்றும் மட்டன் பிரியாணியே தமிழர்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறதென புரிந்து கொண்டேன் . இப்படி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே ஆட்டுக்கறி காதலராக இருக்கும் காரணங்களை அறிய வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
கூட்டத்தில் யாரெல்லாம் வெஜ், யாரெல்லாம் நான்வெஜ் என மத்தியான சாப்பாட்டுக்குக் கணக்கு எடுத்தார் வினித். வந்த முப்பதுக்கும்மேற்பட்டவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் நான்வெஜ் என்றார்கள். ஒருவேளை இது ஜெமோ கூட்டமாக இருந்தால் நான்-வெஜ் உணவுப் பிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும் என்று சாரு சொன்ன போது கிளம்பிய வெடிச்சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது.
அராத்து இலக்கிய கூட்டத்தில் எழுத்தை பற்றியே பேச வேண்டும், உலக சினிமா பு****, இசைப் ***டையெல்லாம் பேசக் கூடாது என பலமுறை முயன்றும் இசையும் சினிமாவும் பேசும் பு****யாவதை தவிர்க்கமுடியவில்லை. எதைப் பேச வேண்டும் என்பதைக் குறித்து சாருவின் பேச்சு அருமையாக இருந்தது.
“என்னைப் புகழவேண்டாம். ஏனென்றால் என்னைப் புகழ என்னை விட சிறந்தவராக பெரியவராக இருக்க வேண்டும். என் எழுத்துக்களை குறித்த பெருமைகள் பேச வேண்டாம். என் எழுத்துக்கள் குறித்தும் என் எழுத்துக்கள் மூலம் நீங்கள் அடைந்த உணர்வுகளையும் அவை உங்களின் வாழ்க்கையில் ஆற்றிய வினைகளையும் குறித்துக் கேட்பதே என் விருப்பம்,” என்றார். மேலும், “உண்மையான சுவாரஸ்யமான புதுமையான செய்திகளை பேசலாம். உன்னத அனுபவங்களைப் பேசலாம். அ. முத்துலிங்கம், பால் சக்காரியா போல பயணம் செய்தவர்கள் அவர்களின் அனுபவங்களை பேசலாம். வாய்ப்புகிடைக்கிறதென மொக்கை போடக் கூடாது. நம் வாழ்வின் நூதனமான அனுபங்கள் குறித்துப் பேசலாம். இப்படிப் பேச பயிற்சி தேவை. கவனமாகக் கேட்கும் பயிற்சி சரியானதை பேசக் கற்றுத்தரும்” எனச் சொன்னதை ஒரு நாளும் மறக்க கூடாது என என் மண்டையில் ஏற்றிக் கொண்டேன்.
என்னைப் போல் வாழுங்கள், நான் அதைச் செய்கிறேன் நீங்களும் அப்படி செய்ய முயலுங்கள் போன்ற வசனங்களை பேசித் திரிகிறவர்கள் மத்தியில் ”என்னைப் பின்பற்றாதீர்கள்,” என சாரு வீசிய வெடிகுண்டு அனைவரையும் உலுக்கியது. அதற்கான காரணங்களை அவருக்கே உரித்தான பாணியில் சொன்னதுஅமர்க்களம்.
“நான் ஒரு ஆடம்பரப் பிரியன். என் கண்ணாடியின் விலை ஒன்றரை லட்சம். என் வங்கிக் கணக்கைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் மதுப் பிரியன். மது அருந்துவது எனக்குப் பிடிக்கும். ஆனால் உலகிலேயே உயர்ந்த மதுவைத்தான் நான் அருந்துவேன். ஆகச் சிறந்த மதுவே எனது விருப்பம். குடிக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் ஒரு நாளும் குடிப்பதில்லை. இப்படி மதுப் பிரியராக இருந்தும் கூட ஐந்து ஆண்டுகள் மது அருந்தாமல் என்னால் இருக்க முடிந்தது. இப்பொழுது இதோ இந்தக் கணத்தில் என்னால் மதுவை விட்டுவிடமுடியும்.
என் நேசத்துக்குரிய எழுத்தாளர் மற்றும் நண்பர் பால் சக்காரியாவோடும், தருண் தேஜ்பாலோடும் மதுஅருந்த வேண்டும் என்பதுஎன்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது . மதுவை விட்டு விலகி இருந்த அந்த ஐந்து ஆண்டுகளின் போதுதான் இருவரையும் சந்திக்கும் காலம் கை கூடியது. இருவரும் மதுப் பிரியர்கள். ஆனாலும் அவர்களை சந்தித்த போது நான் மது அருந்துவதை நிறுத்தியிருந்தேன் என்பதால் அவர்களோடு சேர்ந்து என்னால் மது அருந்த முடியாமல் போனது. எனவே சாரு குடிக்கிறான், சாரு ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவனாக இருக்கிறான் என நினைத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதீர்கள்,” என்றார்.
இன்னும் பல செய்திகள், விஷ்ணுபுரம் விருது குறித்து, எக்ஸைல், தேகம் என பலவற்றை உரையாடி கழித்தோம். “நான்தான் ஒளரங்ஸேப்” நாவல் முன் வைக்கும் அரசியல், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியல் குறித்து விரிவாகப்பேசினோம்.
இறுதியில் இந்தக் கூட்டமும் ஒரு gay கூட்டம் போல வெறும் ஆண்கள் மட்டுமே வந்திருந்ததைக் குறித்து அனைவரும் தங்களின் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள். சிலர் தங்களின் நண்பிகள் / தோழிகள் /காதலிகளுக்கு அங்கு நடக்கும் உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை ஃபோன் மூலம் புகைப்படங்களாகவும், காணொகளாகவும் கடத்திக் கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை. இதென்ன புது டிரெண்டாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டேன்.
இதை கருத்தில் கொண்டு அடுத்த முறை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஜூம் அல்லது யூ டியுபில் இந்தசந்திப்பின் முக்கிய நிகழ்வுகளை நேரலையில் செய்யலாம். இப்படி பல வகையில் என்றும் என் நினைவில் நிற்கும் இந்தப் பாண்டிச்சேரி சந்திப்பு ! அற்புத நினைவுகளை அளித்த சாரு வாசக வட்டத்திற்கு நன்றி. சாருவுக்கும் நன்றி.
நிர்மல்